Friday 26 August 2011

காத்திருத்தல்

எப்போதாவதுதான் பேசுகிறாய்
மழைபோல்
எப்போதும் காத்திருக்கிறேன்
நிலம்போல்

மனதிலும்

உன்னுடன் இருக்கும் கணங்களே
உறுதிப்படுத்துகின்றன
மனதளவிலும் நான்
பலவீனமானவள் என்பதனை!

பாதங்கள்

வாசலில் அரிசிமாவில்
கிருஷ்ணனின் பாதங்கள்

அவற்றைக் கலைத்த சுவடுகள்
என் மழலையின் பாதங்களில்!

Sunday 7 August 2011

கனவு நினைவு

ஏதோ காரணத்திற்கு
அம்மாவிடம் திட்டு

அக்காளின் மடியில் படுத்து
எதற்கோ வாக்குவாதம்

வானில் பறக்கும் ரயிலை
தோழிக்கு காட்டுதல்

சந்தையில் சுற்றுகையில்
திடீரென இரவு கவிழ்தல்

பத்தாம் வருப்பு சீருடையணிந்து
தம்பியை அடித்தல்

வாய்த்த கணவன்
காதலனாய் கசிந்துருகுதல்

மறைந்த மழலை
உயிர்த்து வந்து பேசுதல்

கனவுகளில் திடுக்கிட்டு
எழும் ஒவ்வொரு முறையும்
நினைவுகளில் வாழ்ந்து
திரும்பிய பெருமிதம்

வாழ்வில் வாழ்கிறேன்

தட்டிப் பறிக்கப்படும் வாய்ப்புகள்
துவளும் நம்பிக்கை
கை விட்டுச் செல்லும் உறவுகள்
நொறுங்கும் உணர்வு
புரிதல் இல்லாது விலகும் காதல்
குரூரமான வலி
கருணை மறந்த கடவுள்கள்
வெளிப்படும் வெறுப்பு
அனைத்தும் மறந்தேன் அன்பில்
வாழ்வில் ‘வாழ்கிறேன்’ உன்னால்


Tuesday 19 July 2011

மீட்பு

வாழ்வின் பிடிப்புகள்
தளரும் வேளைகளில்...
நாளை பற்றிய நம்பிக்கைகள்
தொலையும் நேரங்களில்...
தெய்வங்களும் ஆசிர்வதிக்க
மறுக்கப்படும் தருணங்களில்...

அனைத்தையும் மீட்டுத் தருவது
ஒரு மழலையின்
புன்னகை மட்டுமே!

காதல் என்பது

காதல் என்பது மாயை
காதல் என்பது பிம்பம்
காதல் என்பது வேட்கை
காதல் என்பது தாகம்
அனைத்தும் அறிந்தும்
காதல் செய்தேன்
காதல் என்பது காதல் என்பதால்

Wednesday 6 July 2011

தாங்கும் கைகள்

உன் அன்பில் கரைந்து
பார்வையில் குழைந்து
ஆண்மையில் மிரண்டு
தாய்மையில் உறைந்து
காதலாய் வழிந்தோடுகையிலும்
என்னைத் தாங்கும் உன் கைகள்

அபத்தமானது

உயர்கல்வி தெளிவு
முதிர்ச்சி ஆணவம்....என

எனக்கான குறியீடுகள்
எல்லாம் அபத்தமானது
உன்னைக் கண்டதும்
நான் கொண்ட தடுமாற்றங்களில்!

Saturday 2 July 2011

அறிதல்

என் மௌனங்களின் மொழி
எண்ணங்களின் தாகம்
அறிவின் கொடும்பசி
செயலின் பெருந்தவம்
அறிந்த நீ...!

உன் காதலை மட்டுமே
அறிந்த நான்...!

வெப்பம்

உன் மூச்சுக்காற்றின் வெப்பம்
பெண்மை கரைந்து
என்னுள் ஆண்

என் பார்வையின் வெப்பம்
உன் ஆண்மை கரைந்து
உன்னுள் பெண்

வானவில்

உன்னால் என்...
கன்னங்களில் சிவப்பு
நெற்றியில் பசலை
கனவுகளில் நீலம்
செயல்களில் கருமை
எதிர்காலம் மஞ்சளாய்
நிகழ்காலம் சந்தனமாய்...
நான் வானவில் ஆகிறேன்....

மூச்சிறைக்கும்

என் சுவாசம் நீ தின்று
உன் சுவாசம் நான் செரித்து
நாம் விலகும் போது...
காற்றுக்கு மூச்சிறைக்கும்

Wednesday 29 June 2011

மழை வெப்பம்

கடும் கோடையில்
குளிர் மழையாய்
என் மேல் பொழிந்தாய்
என் உள்வெப்பங்களை
கிளர்ந்தெழ வைக்கவே!

முகம்

மரண விளிம்பில்
நினைவு தப்பும்
நொடிக்கு முன்
நினைவுக்கு வரும்
முகங்களில் உனதும் ஒன்று

இறைவன் சிரிப்பு

ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் கண்டால்...

ஏழைக் குழந்தையின்
சிரிப்பில் காண்பது
இறைவனின் சிரிப்பா!?

Tuesday 28 June 2011

மொழிபெயர்ப்பு

உன் இதழ்
உதிர்க்கும் சிரிப்பை

என் சிரிப்பாக
மொழிபெயர்ப்பேன்!

பார்வை

தாக்கி
கலந்து
கலைத்து
வீழ்த்தி
அழித்து
உருவாக்கி
உருமாற்றி
உயிர் தந்து
வலி தந்து
சுகம் தந்து......


எல்லாம் செய்யும் 
அற்புதக் கருவி
உன் பார்வை

உறவு

எங்கோ பிறந்து
வளர்ந்த இருவரை
காதல் நட்பு காமம் தவிர
பெயர் தெரியாத
ஏதோ ஒன்று இணைக்கிறது

வழியும் பிம்பங்கள்

என்னைக் குழைத்து
உன்னுள் கரைத்து
நாம் வரைந்த உயிரோவியம்!

காலம் அழித்தது
வழிந்த நிறங்களில்
நம் பிம்பங்கள்!

தேடல்

உனக்குள் தொலைந்த
என்னைத் தேடிய போது
உணர்ந்தேன்
நீ என்று தனியாக
ஒன்று இல்லையென

Wednesday 22 June 2011

பிரிந்த மழலை

மலரும் மலரில்
உன் புன்னகை...
பெய்யும் மழையில்
உன் வாசம்...
கருகும் துளிரில்
உன் வலி...
அனைத்திலும் நீயும்
நீ சார்ந்தவை மட்டுமே

எப்படி சொல்வேன்
நீ இல்லையென....

இறங்கி வரும் வானம்

பச்சை என்றதும் மழலை
இலையத் தொட்டது
கருப்பு என்றதும் தலைமயிர்
வெள்ளை என்றதும் தன் நகம்
மஞ்சள் என்றதும் தாயின் முகம்

நீலம் என்றதும்..........

வானம் இறங்கி வந்தது
மழலையிடம்

Monday 20 June 2011

உணவு

பசியோடு இருக்கும்
என் விழிகளுக்கு
உன் விழிகளே
உணவு!

கன்ன சிவப்பு

நீ அறியாமல்
உன்னைப் பார்த்தேன்
கன்னம் சிவந்தது
உலகமே அறிந்துவிட்டது

Saturday 18 June 2011

இருப்பு

நீ என்னருகில் இருக்கையில்
அருகில் தான் இருக்கிறாய்
இல்லாதபோது
எனக்குள்ளேயே
இருக்கிறாய்

உணர்தல்

நான் தாய்மையால்
என் தாயை மிகுதியாக
உணர்வதைப் போல்...

என் குழந்தையால்
அம்மா என்னை
குழந்தையாக உணர்கிறாள்

Friday 17 June 2011

நிசப்தம்

கால்கொலுசு ஒலிக்க
விளையாடிய மழலை
உறங்கியதும்,
உலகின் சப்தங்களும்
உறங்கத் தொடங்கின.

ஒப்பீடு

என் குழந்தையோடு
விளையாடும் குழந்தையை
ரசிப்பதைவிட
ஒப்பிட்டுப் பார்ப்பதே
தாய்மையின் மற்றொரு
பரிமாணமோ

கொள்ளை

கொள்ளை போவது 
தெரிந்தும் மகிழ்கிறேன்
உன்னிடம்....
கொள்ளை போகவே
படைக்கப்பட்டது போல்

வெறுமை

ஒரு மழலையை
இழந்த இல்லத்தில்
தெய்வங்களும்
வெறுமையாய் அலைகின்றன

நான்

உன்னை முதலில்
சந்தித்தபோது
நீ மற்றொரு ஆண்
இன்று...
நீ மற்றொரு நான்

Wednesday 15 June 2011

வீரியம்

யாரிடமும் பகிராதே
எனச்சொன்ன ரகசியங்களை

யாரும் ஆர்வமுடன் கேக்கும்
ரகசியங்களாக இல்லாவிடினும்

யாரிடமாவது அதனைச் சொல்ல
மனம் துடிப்பதே ரகசியத்தின் வீரியம்

ரகசியங்கள்

ரகசியங்கள் புனிதமானவை
அவை ரகசியங்களாகவே
அதன் இறப்பு வரை இருந்தால்

வலி

வார்த்தைச் சாட்டையை
நான் சுழற்ற
மயிலிறகால் வருடுகிறாய்...

சாட்டையடியை விட
மயிலிறகு கூடுதல் வலி 
என்பதை அறியாமலே!

Tuesday 14 June 2011

பிறகே

பிரிந்திருந்தோம் என்பது
ஒன்றான பிறகும்
ஒன்றாய் இருந்தோம் என்பது
பிரிந்த பிறகுமே புரிகிறது

மீண்டும்

என்னில் நீ தென்றலாய் வீச...
உன்னில் நான் மிதக்கஎன்னோடு நீ கரைய
உன்னால் நான் நிரம்ப
என்னுள் நீ வழிய
உன்னில் என் தாகம் தனிய
என்னில் நீ தென்றலாய் வீச...

பசி

பிஞ்சு விரல்களில் மழலை
எனக்கு ஊட்டிய சோற்றில்
எனது, இறைவனது, பிரபஞ்சத்தின்
பசி தீர்ந்தது

Monday 13 June 2011

கொள்ளை

என் அனைத்தையும்
கொள்ளையிட்ட அவனை
கொள்ளையடிக்கச் சென்றால்
அவன் முழுதும் நான்!

வீழும் அலைகள்

கடற்கரையில் என் கை கோர்த்து
அவன் நடக்கையில்
என் சிரிப்பலைகளில்
கடலலைகள் வீழ்ந்தன

இடமாறு

எல்லா ஆண்களும்
அவனாகவே தெரிய
அவன் மட்டும்
நானாகத் தெரிகிறேன்

குழந்தை

அவன் உயிர்கொண்டு
என் உயிரில் அவன் தீட்டிய
உயிரோவியத்தை அவனுக்கே
பரிசளித்தேன் பத்துத் திங்கள் கழித்து

எதனைத் தர?

உயிர் சுவாசம் இதயம்
நினைவு கனவு என எனக்கான
எல்லாவற்றிலும் கலந்த அவனுக்கு
எனது என எதனை நான் தருவேன்!

Friday 10 June 2011

ஒத்தடம்

கண்ணாடி ஜாடி உடைந்ததென
மாலையில் அறைந்த தாய்...
உறங்கிய பின் ஒத்தடம் இட்டாள்
கண்ணீர் துளியில்