Thursday 26 June 2014

வெள்ளை ஜானி

வெள்ளை ஜானி
இறந்தது
மின்சாரமற்ற
மழை தூவியிருந்த
ஒரு அதிகாலையில்தான்

அன்றைய
பள்ளித் தேர்வை
அழுதுகொண்டே எழுதியபோது
மட்டும்
ஜெய்விஜய்
என் விடைத்தாள்களைக்
கேட்கவில்லை

வெகுநாட்களாய்
என் குளியலறையில்
கேட்டுக் கொண்டிருந்த
ஜானியின் மெல்லிய
இறுதி முனகலை
நீரின் சலசலப்புடன்
கரைக்கக் கற்றிருந்தேன்

அகோபிலம் கோவிலின்
இடப்புறமிருந்த
கட்டணக் கழிவறை
வாசலில்
வெள்ளை ஜானியை
யாரோ கட்டிப்போட்டிருந்தனர்

”ஜானி”
என விளிக்கிறேன்
”அது சின்னா”
என்கிறார் புன்னகையுடன்
கழிவறையைப் பராமரிக்கும்
பெரியவர்

நான் அழைத்த கணமே
சின்னா
வெள்ளை ஜானியாய்
மாறிவிட்டிருந்ததை
அவர்
ஏன் அறிந்திருக்கவில்லை

Wednesday 25 June 2014

மாயவரத்து அத்தையுமானவள்

புகைப்படத்திலும் 
பார்த்தேயிராத
மாயவரத்து அத்தையை
அச்சுவார்த்தாற் போல்
நான் இருப்பதாய்
ஊருக்குச் செல்லும்போதெல்லாம்
சொல்கிறாள்
நானம்மா

சுள்ளிகள் எரித்து
நானம்மா சமைக்கும்
அன்னத்தை
சிறு உருண்டைகளாக்கும்போது
விடுபட்டு நிற்கும்
என் ஆட்காட்டி விரலை
சில நொடிகள்
உற்று நோக்கியவள்
ஏதோ சொல்ல
வாயெடுக்கிறாள்

பின்னர்
கலங்கிய விழிகளுடன்
எழுந்து சென்று விடுகிறாள்
பாடுகள் கடந்து
தேடிக்கண்டடைந்த
நாளின் இறுதி இரையைத்
தவறவிட்டிருந்த
முதிய பறவையைப் போலே

பெயல் பரவசம்

பெயல் பொழுதுகளில்
இன்னும் பெரிதாய்
திறந்து கொள்கிறது
வாசல்
மஞ்சள் கொன்றை

-----------------------------------

உச்சியில் கிடந்த
ஒற்றை வேப்பம்பூவுடன்
முழுதாய் நனைந்து
இல்லம் நுழைகிறாள்
சிறுமி

சிசுவைத் தொடுவதுபோல்
பூவை ஸ்பரிசிக்கிறாள்
தாய்

உடல் சிலிர்த்த
வேப்பமரம்
மழையை அசைத்து
தானும் அசைகிறது

நிலத்திலிருந்து எழும்பி
வானில் பொழியும்
பச்சை மழையாகி

நிற்கிறது

----------------------------------------------

அவள் கதவுகள்

அனைத்துப் பயணங்களிலும்
கதவுகளை
அவள் துணைக்கழைத்துச்
செல்கிறாள்

குளக்கரைக் குளியல்களில்
மேனியெங்கும்
இமைகளின் படபடப்புகள்
குறுந்தீ போல் 
படர்ந்து நகர்வதை
உணர்பவள் அவள்
எனக்
கதவுகளும் உணர்ந்தே
இருக்கின்றன

வாட்கூர்மையோடு
வெளிச்சக்கீற்றுகள் புகும்
கதவுகளின் இடுக்குகள்
வழியேதான்
அவள் யுத்தங்களையும்
பலிகளையும்
ரசிக்கிறாள்
அல்லது
புரிகிறாள்

சராசரி கதவுகள்
சரிப்படாதபோது
கோட்டைக் கதவுகளை
அவளே பெயர்க்கிறாள்
அது
ஒரு முகில் போல்
அவள் தலை மீது
தவழ்ந்து அவளைப்
பின்தொடர்கிறது

கதவுகளின்
பின்னணிகளை அவள்
உணர்ந்தவள்
எல்லா கதவுகளின்
பின்னிருப்பதுவும்
அவளே என
அவளறிவதெல்லாம்
துல்லியங்களின்
இறுதி வாக்குகளாய்
இருந்துவிடுகின்றன

ஒரு கதவின் வழியே
மற்றொரு கதவைச்
சென்றடையும்போது
அவள்
ஒரு கிரகத்தினின்று
மற்றொன்றுக்கு
நகர்வதாய்
கதவுகள் பேசிக்கொண்டன

எனினும்
கதவுகள்
அவளைக்
கைவிடுவதே இல்லை
தேவனல்லாத
பொழுதுகளிலும்

இறைச்சிக்கடை

உலர்ந்த குருதியுடன்
தனியாய் விடப்பட்டிருக்கிறது
இறைச்சி வெட்டும்
அடிமரத்துண்டு

சாவகாசமாய் 
வந்தமர்கிறது
மஞ்சள் படர்வின் இடையே
கருநீல விழிளுடைய
அந்தப் பறவை

-----------------------------------------

நெகிழித்தாள் சுற்றியிருந்த
கரமுடன்
கடைவாசலிலேயே
அமர்ந்திருந்தார்
இறைச்சிக்கடை சிப்பந்தி

தாளினுள்
சொட்டும் இரத்தத்தின் ஓசை
மெல்லப் படியேறி
கடைக்குள் செல்வதை
பார்த்துக் கொண்டிருந்தார்

--------------------------------------
அந்த இயந்திரத்தில்
இருந்து
சிதைந்த நினைவுச்சின்னம் போல
பறவையை அவர்
எடுக்கும்போதும்
அதன் கால்கள்
துடிப்பதை நான் பார்க்கிறேன்

சிறகுகள் குறித்து எனக்கு
அக்கணம் ஏதும்
எண்ணமெழாமல் இருந்தது
மிகுந்த ஆசுவாசமாய்
இருக்கிறது


----------------------------------------------
எவரும் கவனியாது
காய்கறிச் சந்தையில்
முட்டைகோசுகள் மீது
புரோக்கலி ஒன்றை
அடுக்கிவிட்டு நகர்கிறாள்
சிறுமி

மலைத்தொடர் மீது
தனித்திருக்கும் மரம்போல்
காத்திருக்கிறது அது
அடுத்த சிறுமிக்காய்


--------------------------------------------------




சிறுமி, முதியவள், சிறுவன்.... மற்றும் பல

தும்பைப்பூத்தூவல்களாய்
ஆலயவாசல் கடைகளில்
பொழிகிறது
மழை
நனைந்திருந்த 
ஒற்றை மலர் மூலமாய்
தேவியிடம்
மழையைச் 
சேர்ப்பிக்கிறாள் சிறுமி
--------------------------------------

பச்சைக்கல் மூக்குத்தி
அணிந்து
வீற்றிருக்கிறாள் தேவி
மலையேறி வந்தவளின்
நீள் மூச்சுகள் பட்டதும்
அசைந்து அசைந்து
ஒளிர்கிறது அது
மகவை அடையாளம் கண்ட
ஊமைத்தாயின்
சமிக்ஞை போல

-------------------------------------
சிற்றூர் சந்தையில் 
கூடை நிறைக்கப்
புளியந்தளிர்களுடன்
காத்திருக்கிறாள் மூதாட்டி

உறைந்த உதிரத்துளிகளாய்
சிவந்திருக்கும் ஈச்சங்கனிகளில்
மொய்க்கும் ஈக்களில் 
இரண்டு
அவள் விழிகளென
மாறியிருந்தன

-----------------------------------
அடிமுறிந்து
விழுந்துகிடக்கும்
பெருமரம்

காதலனின் முன்நெற்றி
முடிக்கற்றை விலக்கி
இறுதியாய்
முத்தமிடும் பெண்போல்
நிலம் பதிந்து கிடக்கும்
நாளைகளற்ற மலர்கள்

--------------------------------------

மொழியறியாச் சிறுவன்
எலுமிச்சைச்சாறு
தரும்போது
ஒரு புன்னகையையும்
சேர்த்தே தருகிறான்
கோப்பைக்கும்
விரல்களுக்கும் இடையே
அது
வசதியாய் அமர்கிறது

------------------------------------------

உட்புறமாய் வளைந்திருக்கும்
மெலிந்த கால்கள்
அழுத்தி நிமிர்த்துகிறார்
மருத்துவர்
வீறிடும் மழலை
காணச் சகியாது
கண்ணாடிக்காகிதமாய்
நீர் மறைக்கும் விழிகளுடன்
முகம் திருப்புகிறாள் தாய்

ஜன்னல் வானில்
பறவையொன்று கடக்கிறது
அதன் கால்கள்
உட்புறமாய் மடங்கியிருந்தன


--------------------------------------------


அலறும் பாடல்
ஒலிக்கும் கைபேசிகளுடன்
பீகார் சிறுவர்கள்
உணவக வேலை முடித்து
நடுநிசியில் திரும்புகின்றனர்

பழவண்டு போல்
அவளின் கனவைக்
குடைந்து நுழைகிறது
பாடலின்
இறுதி வரி

-----------------------------------------



மழை நிற்க இன்னும் இன்னும் நேரமிருக்கிறது

இந்த மழைநாளில் மட்டும்
அந்தக் குயில் எங்கிருந்தோ
வெகுநேரம் அலறுகிறது
மேலும் பச்சையுடன்
சாலையோர மரங்கள்
தாழ்ந்து வருகின்றன
கட்டிடங்களின் பின்னிருந்து
கன்னங்கள் உப்பியக்
கருப்புக்குழந்தைபோல்
மேகங்கள் எட்டிப்பார்க்கின்றன
நீர்த்துளி ஆரமணிந்து
மாங்கனிகள் வைக்கோல்மீது
ஓய்வெடுக்கின்றன
இரண்டாம்நாள் விடாயென
கழிவுநீர் பெருக்கெடுக்கிறது
உன்னதமான துரோகம்
கச்சிதமாய் நிறைவேறுகிறது
சமீபத்தில் தாயை இழந்த
மழலையொன்று
இடியோசை கேட்டு
கரடிபொம்மையை இறுக்க
அணைக்கிறது
பொம்மையும் குழந்தையை
அணைத்துக் கொள்கிறது

மழை நிற்க
இன்னும்
இன்னும்
நேரமிருக்கிறது

கவித்துளிகள்

மெழுகுத்துளிகள்
உருகிவிழும் ஓசையில்
திடுக்கிட்டு
கவனம் கலைகிறார்
பிதாமகன்
தேவாலய உச்சியில்
இருந்தவரின்
விரிந்த கரங்களில் இருந்து
மேம்பால வாகனங்களின்
முகப்பொளிகள்
கருணை போல்
வடிந்துகொண்டிருந்தது

--------------------------------------------

முதிர்ந்த கனிபோல் இருந்த 
வயிற்றினுள் 
அசைந்த சிசுவை 
வாரியணைத்துவிட்டு
மீண்டும் கருவறைக்குள் 
பத்திரம் செய்வதாய்
சிறு பாசாங்கு 
செய்கிறாள் தாய்

சிறுமியின் சிமிழ்விழிகளுக்குள்
அடங்க மறுத்துத்
தளும்புகிறது
அத்தனைப்
பெரிய அதிசயம்


------------------------------------------
சருகுகளைக் காற்று
கொண்டுசென்று
விட்டிருந்தது
நீண்ட கால மவுனத்தில்
இருந்து
விடுபட்டதைப்போல்
மரம் துளிர்க்கத்
தொடங்கியதும்
கிளைகளில் பதிந்திருந்த
தன் தடங்கள்
காணாது
பூனை திரும்பி
நடக்கத் தொடங்கியது


----------------------------------------------



சிற்பக்கண்களின் நித்திரை

பிரம்மாண்ட கண்ணாடிக்
கட்டிடங்களில்
முகம் பார்த்து
நகரும் வெயில்
குல்மொஹர் மரம்
உடலெல்லாம்
இலையாகி நகைக்கிறது

--------------------------------------------

அத்தனைக் குளிரான
குகைக்குள்
நுழைவதற்காய்
காத்துக் கொண்டிருந்தது
வெயில்
குகைச்சுவர்களில் எதிரொலித்தக் 
காவலாளியின்
புத்தம் சரணம் கச்சாமி
பிச்சையிடப்பட்ட 
நாணயம் போல்
வந்து விழுந்தது
வெளியே

------------------------------------------

இருபத்தியாறாம் எண் குகை
அவர்களால்
முடிக்கப்படாது
இருந்தது
ஒரு அவிழ்க்கப்படாத
புதிர் போலும்தான்

-------------------------------------------
கற்படுக்கைகளின் சயனம்
செதுக்கப்பட்டிருந்தது
முத்திரையொன்றை
புத்தரின் விரல்களில்
சோர்வுடன் செதுக்கியவன்
நைச்சியமாய்
சிற்ப விழிகளுக்குள்
தன் நித்திரையைப்
புகுத்தியிருந்தான்

----------------------------------------------

எல்லோரா சிற்பத்தடங்கள்

புத்தரின் 
நெஞ்சுக்கூட்டு எலும்புகளைக்
குறிக்குமாறு அமைந்திருந்தது
குகைக்கூரை
தூண்களில் மோதித் 
திரும்பிக் கொண்டிருந்தது
குகைக்காவலாளியின்
சுருட்டுப் புகை

----------------------------------------------------

முப்பரிமாணச் சித்திரங்களில்
மெய்மறந்திருந்த
அயல்தேசக்காரனை
ஒரு குகைப்பறவையென
எண்ணித்தான்
சிறைபிடித்தாள்
புகைப்படக்கருவிக்குள்

-----------------------------------------------------
சிதிலமாகிக் கிடந்த
சிற்பங்களிடையே
கரங்களில் முழு வீணையுடன்
முலைகள் தகர்ந்துகிடந்த
கலைவாணியின்
அருகில்தான்
மிக நீண்ட வரிசை
புகைப்படமெடுத்துக் கொள்ள

--------------------------------------------------
இருளுக்குள் ஒளிந்திருந்த
லிங்கமொன்றை
ஒளிப்பாய்ச்சி புகைப்படமெடுப்பவன்
எந்த யுகத்தின்
நித்திரையைக்
கலைத்துக் கொண்டிருந்தான்

-------------------------------------------------


பெண்சிற்பத்தின் இடைபற்றிக்
கிடந்தது ஆண்சிற்பம்
விரலழுத்திய தடம்
அத்தனைத் தத்ரூபமாய்
பதிந்திருந்ததைக் கண்டதும்
ஐயப்படுகிறேன்
இதற்குப்பிறகும்
அவர்களைச்
சிற்பங்கள் எனத்தான்
குறிப்பிட வேண்டுமா
நான்?

------------------------------------------------