Thursday 18 September 2014

கசப்பின் அலை

கசப்பு அடுக்குகளின் மீது
தேன்திரவங்களைப் பூசுவதுதான்
எத்தனை அபத்தம்?
மூச்சு முட்டிய
முதற்கசப்பு விடுத்த
இறுதி சுவாசம்
மேற்பரப்பில் குமிழிட்டு வெடித்ததும்
சுயம் நினைவு வந்ததுபோல்
ஒவ்வொரு கசப்பாய்
மேலெழும்புகின்றன
உடைந்த கலத்திலிருந்து
கசிந்த
கழிவெண்ணெய் போல்
அவை எங்கும் மிதக்கின்றன
காற்றிலும் கசந்த வாசம்
உணவு தேடி எங்கிருந்தோ வந்த
பறவையின் சிறகுகளிலும்
பாரமேற்றி
வண்ணத்தை மாற்றுகின்றன
கசப்புகள்
அடர்த்தி கூடியதும்
கசப்புகளால் ஆன
புது அலையொன்று எழுகிறது
கசப்புகளை அள்ளியள்ளி
அது கரையில் கொட்டுகிறது
வளைகளுக்குள் இருந்து
எட்டிப் பார்க்கும் முயல்குட்டிகளைப் போல்
மிக நிதானமாய்
வெளி வருகின்றன
தேன் திரவங்கள்
மீண்டும் நினைவு
வந்ததுபோல்
நிதானித்துப் பயணிக்கிறது
தனியே ஒரு அலை

அச்சத்தில் தெய்வங்கள்

எதிர்சாரியில் கடந்த
வாகனத்தை ஓட்டியது
சாட்சாத் கண்ணனேதான்
சிமிட்டிய விழிகளில்
அத்தனை தெய்வாம்சம்
மிக நிதானமாய்
பல்சரில் சென்ற ராமரின்
பின்னிருக்கையில்
அவர் மனைவி
ராமர் ரியர்வியூ கண்ணாடியில்
ஒருமுறை
ஒரேமுறை
பார்த்துவிட்டு இடப்பக்கமாய்
சென்றுவிட்டார்
மாநிறமாய் முருகனை
இன்றுதான் கண்டேன்
பேருந்தின் பின்னிருக்கையில்
இருந்து
பாசிமணி விற்கும் குறத்திகளை
ரசித்துக் கொண்டிருந்தார்
வேல் இருக்கவில்லை
லக்கேஜ் சார்ஜ்க்காய்
பயந்திருப்பார் போலும்
புலித்தோல் அணிவது
சட்டப்படி குற்றம்
கான்கிரீட் வனத்தில்
பாம்புகள் கிடைப்பதில்லை
இருக்கும் சிலதும்
சினிமாப்படங்களில் நடிக்கச்
சென்றுவிட்டதால்
ஈசன் மிகத்தனியாய்
நின்றுகொண்டிருந்தார்
தேநீர் கடையில்
ஆலகால விடத்தைவிட
கஷ்டப்பட்டுத் தேநீரை
விழுங்கிக்கொண்டிருந்தார்
சாவகாசமாய்
தெருக்களில் திரிந்து
கொண்டிருந்தார் பிள்ளையார்
காலை நடைப்பயிற்சியின்
தொந்திகளை வியந்துகொண்டே
ஐந்து ரூபாய்க்கென
கடைகளில் தும்பிக்கையை
நீட்டிக்கொண்டிருந்தவரின்
நினைவில்
காடுகள் இல்லை
மிருகங்கள் இல்லை
எலிகளேனும் இருந்தனவா
தெரியவில்லை
தெருக்களில்
தெய்வங்கள்
தென்படத் துவங்குவதாய்
செய்திகள் அலறியதும்
கோவில்களில்
முன்னெப்போதையும் விட
அதிகக்கூட்டம்
கூட்டத்தினுள்ளும்
தெய்வங்கள் இருந்தன
அச்சத்தில் நடுங்கியபடி

கவிதைகள்

உங்கள் விழிகளோடு
என் விழிகள்
மிகச்சரியாய் பொருந்தியதும்
எனக்குத் தெரிவதெல்லாம்
தெளிந்த
உங்கள் நிர்வாணம் மட்டுமே
உங்கள் சொற்களால்
அதனைப் போர்த்த
முயன்று முயன்று
நீங்கள் தோற்பதையும்
நான் ரசிப்பதை
இதே விழிகள்மூலம்
உங்கள் விழிகளுக்குச்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
மீண்டும் மீண்டும்
நீங்கள்
தோல்வியடைந்தபடியே
இருக்கிறீர்கள்

-------------------------------

இழுத்துக்கட்டப்பட்ட
மஞ்சள்வண்ண நெகிழித்தாளின்
கீழே அவர் இருந்தார்
பல்வேறு அளவின் காலணிகளும்
அவருடன் இருந்தன
தைக்கும் ஊசிகளின்
எண்ணிக்கைக் குறித்துத்
தெளிவாய் தெரியவில்லை
அவரின் இரண்டு மனைவியரும்
அவருடன் இருந்தனர்
பின்னொருகாலத்தில்
ஒரு அம்மன் சிலையும்
அவருடன் இருந்தது
திரைப்படக்காட்சி முடிந்த
நடுநிசி சலனங்களில்
இருந்தும்
மூச்சடைக்கும் சிறுநீர்
வாடையிலிருந்தும்
அந்த அம்மன் சிலை
அவர்களைக் காத்ததாய்
அவர்கள் நம்பினர்
சலனப்பட்டோரும்
அடக்கிக் கொண்டோரும்
கூட
அதையே நம்பினர்
மழை வலுக்கத் துவங்குகிறது
அச்சுறுத்தும் நோய்போல்
திறந்து கிடந்த
அண்மை மருத்துவமனையின்
வாகன நிறுத்தப்பகுதிக்கு
அவர்கள் இடம்பெயர்ந்ததும்
சிதறிக் கிடக்கும்
காலணிகள் மீது
பொழிவதுபோலவே
அம்மன் மீதும்
இறங்கிக் கொண்டிருந்தது
மழை
அத்தனைத் தனிமையுடன்
அத்தனைக் கருணையுடன்

----------------------------------
உள்ளே வர ஒரு வழியும்
வெளியேற மற்றொரு வழியும்
இருப்பதன் அவசியத்தை
இனியேனும் உணர்
இன்றும்
உன் ஒரே வாயிலில்
இருவேறு பிரார்த்தனைகளுடன்
நாங்கள் சந்தித்துவிட்டோம்
துப்பாக்கிக்குண்டுகள்
துளைத்த மார்புடன்
தேவனைக் காண்பதில்
எனக்கு உடன்பாடில்லை
பிரார்த்தனை நேரத் துப்பாக்கிகள்
புனிதமானவை
சரித்திரப் புகழ்பெற்றவையும் கூட

-------------------------------

கூண்டினுள் இருந்து
மிருகத்தை விடுவிப்பதைப்
போல் அல்ல
உடலில் இருந்து
உயிரை விடுவிப்பதைப்போல்
அதைச் செய்யுங்கள்
இனியெப்போதும்
கூண்டின் அகலமும்
உடலின் சிலிர்ப்பும்
நினைவில் எழும்பவியலாதபடி
அதைச் செய்யுங்கள்
உடனடித் தேவை
என் இந்த விடுதலை மட்டுமே
உங்களிடமிருந்தும்
உங்கள் இருளில்
விலங்கிடப்பட்டிருக்கும்
தூயக் கண்களையுடைய
என் கருணையிலிருந்தும்

-----------------------------------
ஒவ்வொரு அதிர்விலும்
பலவீனமாகிக் கொண்டே செல்லும்
நிலத்தகடுகள் போல்தான்
நீங்களும் இருக்கிறீர்கள்
உங்களை உடைத்து உடைத்து
மேலும் பலவீனங்கள்
உங்கள் மீது
காலூன்றி நிற்கின்றன
இறுதி அதிர்வில்
அவற்றோடு
நீங்களும் புதையுண்டு போகிறீர்கள்
உங்கள் மேல்
புதுத் தகடுகள்
முளைக்கின்றன
தயைகூர்ந்து
அதனை
மறுபிறப்பு என மட்டும்
சொல்லாதீர்கள்

--------------------------


நீண்ட நாட்களுக்குப்பின்
அந்தச் சிறுமியைக் கண்டேன்
நீலப் பினபோர் அணியாத சிறுமி
விரல்களால் செவிகளை
அடைத்தபடி
ஒவ்வொரு இடியோசைக்கும்
உடல் குலுங்கினாள்
அடுத்த வான் அதிர்விற்காய்
அச்சத்துடன்
காத்திருந்தாள்
மழையில் நனைய விரும்பாதவள்
மழை விரும்புபவள்
அலறியபடி நகரும் ஒரு ஒளிமரவட்டைப்போல்
கடந்து செல்லும் இடிகள் கேட்டு
நடுங்குகிறாள்
வாழ்வில் எத்தனையாவது
முறையாகவோ
தாயின் சேலைநுனி தேடிச் சலித்து
தன் மழலையின் விரல்
பிடித்துக் கொள்கிறாள்
கடலுக்குள் இறங்கிச்செல்லும்
இடிகளின்
காலடி ஓசைகள் கூட
கேட்கிறது அவளுக்கு
ஒரு மந்திர உச்சாடனம் போல்
இடிகளின் முன் பெய்தது போலவே
பின்னரும்
மழை பொழிகிறது
சிறுமி மீண்டும் பெண்ணாகிறாள்
நான் உறங்கத் துவங்குகிறேன்

-------------------------Monday 25 August 2014

விடுவித்து விட்டேன்

இந்த ரணத்தில் இருந்து
உங்களை முற்றிலும்
விடுவித்து விட்டேன்
இனி எந்தச் சிறு முயல்விலும்
உங்களால்
அழிவுணர முடியும்
அல்லது
முயல்வுகள் அற்றும் கூட

பறக்கத் தொடங்காத
விழிதிறவா குஞ்சுப்பறவையின்
சிறகுகளை
செவ்வெறும்புகள் சுவைப்பதுபோல்
உங்கள் அசைவுகளை
தொடர்ந்து
ரசித்து வருகின்றேன்

உங்களை முற்றிலும்
விடுவித்து விட்டேன்
ஆம்
உங்கள் வானில் இருந்தும்
உங்கள் சிறகுகளில் இருந்தும்

விஷக்காலம்

விஷம்போல்
காலம் சொட்டிக் கொண்டிருக்கிறது

புகைப்பட விழிகளை
எத்தனை நேரம்தான்
வெறிப்பது?
மூளைக்குள் எதிரொலிக்கும் குரலின்
நரம்புகளை
எப்படி அறுப்பது?

சட்டைப்பொத்தானில் சிக்கிய
கூந்தலைப் பிரித்தெடுத்தபோது
உயிர் நிரப்பிய வாசம்
ஒரு மிருகம்போல்
எதிரில் நிற்கிறது

விஷம்போல்
சொட்டிக்கொண்டிருப்பது
காலம் மட்டுமேதானா?

சிங்கமுகன்

மீண்டும் கதை சொல்லத் 
துவங்குகிறார் வழிகாட்டி
பிளந்து கிடந்த மலையின்
இடையே 
ஒரு மொட்டுபோல் எழும்பியிருந்தது
அந்தக் கோயில்

சிங்கமுக தெய்வம்
அரக்கனொருவனை
மலைமுழுதும் சுழற்றியடிக்கிறது
சமர்புரிந்த இடங்களிலெல்லாம்
கோயில் கொள்கிறது

தெறித்து விழுந்த
அரக்கனின் கண்மணிகளை
இறகு முழுதும் தெளித்தாற்போல்
சிறு பொட்டுகளுடன்
ஒரே வண்ணப்
பட்டாம்பூச்சிகளைக் காண்கிறேன்

கோவில் மதிற்சுவர் சிதைத்து
முளைத்திருக்கும் செடியின் மலரில்
வறண்டு கிடந்த குளத்தில்
கோவில் படிகளில்
ஈச்சம்பழம் விற்கும் சிறுமியின் கூடையில்
இரக்கத்திற்காய் பெருநோய்க்காரன்
திறந்து வைத்திருந்த அழுகிய பாதங்களில்
என
எங்கும் அதே பட்டாம்பூச்சிகள்

கதைசொல்லி முடித்து
கட்டணக்கழிவறை நோக்கி விரையும்
அவரையும்
ஒரு பட்டாம்பூச்சி கடந்து செல்கிறது

பட்டாம்பூச்சிகளின் நிலத்தில்
சமர் செய்த சிங்கமுகனை
அவை
மன்னிக்கத் தயாரில்லை
என்பதை
அவர் சொல்லவேயில்லை

கோவில் வளாகத்துள்
எங்குமே
பட்டாம்பூச்சிகள்
இருக்கவில்லை

Wednesday 13 August 2014

மாதுளைக் கண்கள்

விலகி இரும் ஈசனே
நீண்ட அலகுடன் 
பட்சியென வந்த
உமக்கான
கடைசி தானியத்தை
விதைத்துவிட்டேன்

இனி அதில் பழுக்கும்
நெற்றிக்கண்களை
மாதுளை முத்துக்கள் போல்
உடைத்துக் கொறிப்பேன்