Friday 26 August 2011

காத்திருத்தல்

எப்போதாவதுதான் பேசுகிறாய்
மழைபோல்
எப்போதும் காத்திருக்கிறேன்
நிலம்போல்

மனதிலும்

உன்னுடன் இருக்கும் கணங்களே
உறுதிப்படுத்துகின்றன
மனதளவிலும் நான்
பலவீனமானவள் என்பதனை!

பாதங்கள்

வாசலில் அரிசிமாவில்
கிருஷ்ணனின் பாதங்கள்

அவற்றைக் கலைத்த சுவடுகள்
என் மழலையின் பாதங்களில்!

Sunday 7 August 2011

கனவு நினைவு

ஏதோ காரணத்திற்கு
அம்மாவிடம் திட்டு

அக்காளின் மடியில் படுத்து
எதற்கோ வாக்குவாதம்

வானில் பறக்கும் ரயிலை
தோழிக்கு காட்டுதல்

சந்தையில் சுற்றுகையில்
திடீரென இரவு கவிழ்தல்

பத்தாம் வருப்பு சீருடையணிந்து
தம்பியை அடித்தல்

வாய்த்த கணவன்
காதலனாய் கசிந்துருகுதல்

மறைந்த மழலை
உயிர்த்து வந்து பேசுதல்

கனவுகளில் திடுக்கிட்டு
எழும் ஒவ்வொரு முறையும்
நினைவுகளில் வாழ்ந்து
திரும்பிய பெருமிதம்

வாழ்வில் வாழ்கிறேன்

தட்டிப் பறிக்கப்படும் வாய்ப்புகள்
துவளும் நம்பிக்கை
கை விட்டுச் செல்லும் உறவுகள்
நொறுங்கும் உணர்வு
புரிதல் இல்லாது விலகும் காதல்
குரூரமான வலி
கருணை மறந்த கடவுள்கள்
வெளிப்படும் வெறுப்பு
அனைத்தும் மறந்தேன் அன்பில்
வாழ்வில் ‘வாழ்கிறேன்’ உன்னால்