Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, 26 August 2011

காத்திருத்தல்

எப்போதாவதுதான் பேசுகிறாய்
மழைபோல்
எப்போதும் காத்திருக்கிறேன்
நிலம்போல்

மனதிலும்

உன்னுடன் இருக்கும் கணங்களே
உறுதிப்படுத்துகின்றன
மனதளவிலும் நான்
பலவீனமானவள் என்பதனை!

பாதங்கள்

வாசலில் அரிசிமாவில்
கிருஷ்ணனின் பாதங்கள்

அவற்றைக் கலைத்த சுவடுகள்
என் மழலையின் பாதங்களில்!

Sunday, 7 August 2011

கனவு நினைவு

ஏதோ காரணத்திற்கு
அம்மாவிடம் திட்டு

அக்காளின் மடியில் படுத்து
எதற்கோ வாக்குவாதம்

வானில் பறக்கும் ரயிலை
தோழிக்கு காட்டுதல்

சந்தையில் சுற்றுகையில்
திடீரென இரவு கவிழ்தல்

பத்தாம் வருப்பு சீருடையணிந்து
தம்பியை அடித்தல்

வாய்த்த கணவன்
காதலனாய் கசிந்துருகுதல்

மறைந்த மழலை
உயிர்த்து வந்து பேசுதல்

கனவுகளில் திடுக்கிட்டு
எழும் ஒவ்வொரு முறையும்
நினைவுகளில் வாழ்ந்து
திரும்பிய பெருமிதம்

வாழ்வில் வாழ்கிறேன்

தட்டிப் பறிக்கப்படும் வாய்ப்புகள்
துவளும் நம்பிக்கை
கை விட்டுச் செல்லும் உறவுகள்
நொறுங்கும் உணர்வு
புரிதல் இல்லாது விலகும் காதல்
குரூரமான வலி
கருணை மறந்த கடவுள்கள்
வெளிப்படும் வெறுப்பு
அனைத்தும் மறந்தேன் அன்பில்
வாழ்வில் ‘வாழ்கிறேன்’ உன்னால்


Tuesday, 19 July 2011

மீட்பு

வாழ்வின் பிடிப்புகள்
தளரும் வேளைகளில்...
நாளை பற்றிய நம்பிக்கைகள்
தொலையும் நேரங்களில்...
தெய்வங்களும் ஆசிர்வதிக்க
மறுக்கப்படும் தருணங்களில்...

அனைத்தையும் மீட்டுத் தருவது
ஒரு மழலையின்
புன்னகை மட்டுமே!

காதல் என்பது

காதல் என்பது மாயை
காதல் என்பது பிம்பம்
காதல் என்பது வேட்கை
காதல் என்பது தாகம்
அனைத்தும் அறிந்தும்
காதல் செய்தேன்
காதல் என்பது காதல் என்பதால்

Wednesday, 6 July 2011

தாங்கும் கைகள்

உன் அன்பில் கரைந்து
பார்வையில் குழைந்து
ஆண்மையில் மிரண்டு
தாய்மையில் உறைந்து
காதலாய் வழிந்தோடுகையிலும்
என்னைத் தாங்கும் உன் கைகள்

அபத்தமானது

உயர்கல்வி தெளிவு
முதிர்ச்சி ஆணவம்....என

எனக்கான குறியீடுகள்
எல்லாம் அபத்தமானது
உன்னைக் கண்டதும்
நான் கொண்ட தடுமாற்றங்களில்!

Saturday, 2 July 2011

அறிதல்

என் மௌனங்களின் மொழி
எண்ணங்களின் தாகம்
அறிவின் கொடும்பசி
செயலின் பெருந்தவம்
அறிந்த நீ...!

உன் காதலை மட்டுமே
அறிந்த நான்...!

வெப்பம்

உன் மூச்சுக்காற்றின் வெப்பம்
பெண்மை கரைந்து
என்னுள் ஆண்

என் பார்வையின் வெப்பம்
உன் ஆண்மை கரைந்து
உன்னுள் பெண்

வானவில்

உன்னால் என்...
கன்னங்களில் சிவப்பு
நெற்றியில் பசலை
கனவுகளில் நீலம்
செயல்களில் கருமை
எதிர்காலம் மஞ்சளாய்
நிகழ்காலம் சந்தனமாய்...
நான் வானவில் ஆகிறேன்....

மூச்சிறைக்கும்

என் சுவாசம் நீ தின்று
உன் சுவாசம் நான் செரித்து
நாம் விலகும் போது...
காற்றுக்கு மூச்சிறைக்கும்

Wednesday, 29 June 2011

மழை வெப்பம்

கடும் கோடையில்
குளிர் மழையாய்
என் மேல் பொழிந்தாய்
என் உள்வெப்பங்களை
கிளர்ந்தெழ வைக்கவே!

முகம்

மரண விளிம்பில்
நினைவு தப்பும்
நொடிக்கு முன்
நினைவுக்கு வரும்
முகங்களில் உனதும் ஒன்று

இறைவன் சிரிப்பு

ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் கண்டால்...

ஏழைக் குழந்தையின்
சிரிப்பில் காண்பது
இறைவனின் சிரிப்பா!?

Tuesday, 28 June 2011

மொழிபெயர்ப்பு

உன் இதழ்
உதிர்க்கும் சிரிப்பை

என் சிரிப்பாக
மொழிபெயர்ப்பேன்!

பார்வை

தாக்கி
கலந்து
கலைத்து
வீழ்த்தி
அழித்து
உருவாக்கி
உருமாற்றி
உயிர் தந்து
வலி தந்து
சுகம் தந்து......


எல்லாம் செய்யும் 
அற்புதக் கருவி
உன் பார்வை

உறவு

எங்கோ பிறந்து
வளர்ந்த இருவரை
காதல் நட்பு காமம் தவிர
பெயர் தெரியாத
ஏதோ ஒன்று இணைக்கிறது

வழியும் பிம்பங்கள்

என்னைக் குழைத்து
உன்னுள் கரைத்து
நாம் வரைந்த உயிரோவியம்!

காலம் அழித்தது
வழிந்த நிறங்களில்
நம் பிம்பங்கள்!