Sunday 16 March 2014

இரவுகள்

குழல்விளக்கில் சிக்கியிருக்கும்
அந்தத் தும்பியின்
முதல் சிறகடிப்புடன் தான்
இந்த மழை தொடங்கியதாய்
முடிவு செய்தபோதே
மழைக்குள் மறைந்து
விட்டிருந்தது தும்பி
...........................
அவ்வாறெனில்
பொழிவெதெல்லாம்
தும்பியின் சிறகுகள்தாம்

-----------------------------------------

எழுதிக்கொண்டிருக்கும்போதே
மை தீர்ந்திட்ட பேனாவின்
இறுதி வரிகள்
போலே
நீர்த்துப் போய்க்கொண்டிருக்கின்றன
அந்த நினைவுகள்
இதற்குமேல் 
சொல்ல ஏதுமில்லை
நீ இழந்துகொண்டிருக்கிறாய்
நினைவுகளில் இருந்து
கழன்று விழுந்தவனின்
சொர்க்கங்கள் பற்றி
என்னிடம்
குறிப்புகளேதுமில்லை


------------------------------------------
இழுத்து அணைத்து
மோகித்து
பின் தள்ளிவிட்டு என
இரவுகளும்
பல நேரம்
முரட்டுக் காதலனைப்போல்
நடந்துகொள்வதுவும்
ஏனோ
எப்போதும்
விருப்பத்திற்குரியதாகவே
இருந்து விடுகிறது
இரவின் காதலிகளுக்கு



------------------------------------------



மஞ்சள் பூக்கள் தெளித்திருந்த
படுக்கைவிரிப்பில்
கறைபடிந்ததற்காய்
மகளொருத்தி தாயிடம்
மன்னிப்பு கோரிக்கொண்டிருக்கலாம்
இந்த இரவில்
சிகப்பு மலர்கள் குறித்து
சிலாகித்துக் கொண்டிருக்கலாம்
நாளைய இரவும்



-----------------------------------------

பசியோடு
மெலிதாய் சிணுங்கும்
மழலைக்காய்
ரவிக்கை நெகிழ்த்தி
உறங்கிப்போகும்
இளம் தாய்போல்
அப்பட்டமாய்
விடிந்துவிடுகின்றன
இரவுகள் சில


-------------------------------------------

வண்ணக்குழைவுகளாய்
வாழ்பவனும்
இருள் விரும்பித்
தேடியலைபவளும்
ஒன்றாய் இருந்ததாய்
தீட்டியிருந்த ஓவியத்தில்
இன்னும் கோடிமுறை
சந்தித்திருப்போம்
என்றவனுக்கு
ஓவியமும் காலமும்
ஒன்றாய்தான்
தோன்றுகிறதாம்

எப்போதும்


No comments:

Post a Comment