Wednesday, 30 April 2014

கதிர் கரம்

துணிக்கடை
விளம்பரத்தட்டியின்
பின்னிருந்து எழுந்து
நகைக்கடை
விளம்பரத்தட்டியின்
பின் விழும் அது
எந்நாளும்

மிகச்சரியாய் ஒரு பறவையின்
அலகின் அருகில்
அது நகரும்போது
ஒருவன் புகைப்படமெடுக்கிறான்
மற்றொருவன்
கவண்கல் எறிகிறான்

நதியில் குளிக்கும்
அதன் கூர் மஞ்சள் முனைகளை
வெட்கியபடி வரைகிறாள்
சிறுமியொருத்தி

சகதியின் குளுமையில்
மெய்மறந்திருக்கும்
சினை நாய்களுக்காய்
அது
கருணையேதும்
கொள்வதில்லைதான்

வெள்ளரிப்பிஞ்சுகள்
விற்கும் முதியவளின்
தலை முக்காடினை
கண்டிப்பான காவல்காரன்
போலே தட்டிப் பார்த்ததும்
முன்னிரவில் வெட்டப்பட்ட
மகிழம்பூ மரத்தினை
ஒரு கணம்
வெறித்துவிட்டு விரைகிறது
அது

தானழிய
ஒரு மலையோ
ஒரு கடலோ
இல்லாத நிலங்களை
சபித்தபடியே
தன் இறுதி கரத்தினையும்
உள்ளிழுத்துக் கொள்கிறது
அது
எந்நாளும்

Friday, 25 April 2014

வனமொன்றில்...

பாறைமீது இளைப்பாறும்
கடற்பறவைகளின்
காயங்களை
அலகால் குத்தி
குருதி மட்டுமே
சுவைக்கும்
சாம்பல் வண்ணச்
சிறுபறவையைக் கண்டு
சற்றே மிரண்டு
அலைகளை அனுப்பும்
செங்கடல்

------------------------------

மூங்கில் சருகுகளை
அத்தனைப் பெரிய உடலால்
கூட்டிச்
சிறுகுன்று செய்து
அதனுள்
பொதிந்திருந்த முட்டைகளுக்குக்
காவலிருக்கும்
ஆண் ராஜநாகங்களின்
இரவு விழிகளில்
நெளியும்
நாளைய சிசுக்கள்

-------------------------------

கரும்பாறைத் திட்டுகள் மீது
காட்டெருமைகள்
பீய்ச்சியடித்துச் சென்ற
பாலின் கட்டிகளை
வெட்டியெடுத்து
தாம் உண்டிருப்பதாய்
அவள் சொல்லும்போதெல்லாம்
கீறிய பாலாடைக்கட்டிபோல்
நெகிழ்கின்றன
அவள் கன்னச்சுருக்கங்கள்

--------------------------------

மினுங்கும் தோலுரித்து
இரவு புகும்
இந்த நாளை
சற்றே ஆயாசத்துடன்
கடந்து செல்கிறது
கடைசி பறவை

-----------------------------

Wednesday, 23 April 2014

வெயில்

உடுப்பி கிருஷ்ணனை
தரிசித்தபின்
தாமதமாய் நிகழ்ந்த
சூரிய அஸ்தமனம்
குறித்துச் சிலாகித்தபடி
இருந்தவளை
அந்நாளின்
இறுதி வெயிலும்
அணைத்தே வழியனுப்பியது

-------------------------------

புது வியர்வை
பிசுபிசுப்புடன்
அஜெந்தா சிற்பங்கள்
ரசிக்கும் பெண்ணை
நோக்கி
ஒரு சமாதானம்போல்
இறங்கி வருகிறது
வெயில்

-------------------------------

தொலைதூரப்பயண
இடைவேளையில்
இளைப்பாறும் பேருந்து
முட்புதர்களினூடே
அச்சத்துடன்
இயற்கை உபாதை
தணிக்கும் பெண்பயணிகள்
தூர்ந்த அடிமர வளையிலிருந்து
தலைமட்டும்
காட்டும் உடும்புடன்
திகைத்து நிற்கும்
உள்ளூர் வெயில்

------------------------------

இங்க்ரிட் ஜோன்கெர் : வலசை இதழ்


இங்க்ரிட் ஜோன்கெர் : இவர் தென்னாப்பிரிக்கக் பெண் கவிஞர். (1933 – 1965). வண்ண வேறுபாடுகளால் ஆப்பிரிக்காவில் அந்தக் காலக்கட்டத்தில் நிகழ்ந்த அவலங்களை உலகின் பார்வைக்குக் கொண்டுவரும் விதமாய் அபாரக் கவிதைகள் எழுதியவர். இவரது மனநலம் பாதிக்கப்பட்டத் தாய் இறந்ததும் தந்தையிடம் வளர்ந்தார். இவர்தம் கொள்கைகளாலும் எண்ணங்களாலும் தந்தையால்(வண்ண வேறுபாடுகள் ஆதரிப்பவர்) வெறுத்து ஒதுக்கப்பட்டார். ”கோடைக்குப் பின்”(AFTER THE SUMMER) எனும் இவரது முதல் நூலை இவர் எழுதுகையில் இவருக்கு பதின்மூன்று வயது! ஆனால் முதலில் வெளியாகியது, “தப்பித்தல்”(ESCAPE) எனும் தொகுப்புதான். இவரின் “புகையும் ஓக்கரும்”(SMOKE AND OCHRE) எனும் நூல் பெரும் புகழை இவருக்கு ஈட்டித் தந்தது. திருமணமாகி ஒரு பெண்குழந்தை பிறந்ததும், கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்தார். அதன் பின்னர் இவருக்குக் இரண்டு காதல்கள் உருவாகின. அதன் மூலம் உருவானக் கரு வேண்டாமென இவர் கருச்சிதைவு செய்துகொண்டபோது ஆப்பிரிக்காவில் பெரும் கண்டனத்துக்கு உள்ளானார்(கருச்சிதைவு அப்போதைய ஆப்பிரிக்காவில் சட்டப்படி குற்றம்). இவைகளால் மனச்சிதைவுக்கு உள்ளானார் இங்க்ரிட். தன் தாய் இறுதிக்காலத்தில் இருந்த அதே மருத்துவமனையில் இவரும் சிகிச்சையளிக்கப்பட்டார். பின்னர் அதிகக் கவிதைகள் இயற்றினார். பெரும் புகழும் பெற்றார். அந்தக் காலக்கட்டத்தில் ஒரு கறுப்பின சிறுவன் அவன் தாயின் முன்னிலையிலேயே ராணுவத்தால் சுடப்பட்டு இறந்ததைக் கண்டு அதிர்வுற்ற இங்க்ரிட் ஆப்பிரிக்க மொழியில் எழுதிய கவிதைதான், “DIE KIND”. ஆப்பிரிக்கா முழுதும் பெரும் தாக்கத்தையும் அதிர்வையும் உண்டாக்கிய கவிதை இது. 1994ஆம் ஆண்டு, நெல்சன் மண்டேலா அவர்கள் முதல் ஆப்பிரிக்க பாராளுமன்ற கூட்டத்தொடர்தனை இந்தக் கவிதையைப் பாடித் தொடங்கி வைத்தார். இங்க்ரிட்டின் வாழ்வை சொல்லும் திரைப்படமாக “BLACK BUTTERFLIES” வெளியாகியுள்ளது. தன் வாழ்நாள் முழுதும் தந்தையால் வெறுக்கப்பட்டப் பெண்ணாகவே இவர் இருந்தார். இது இங்க்ரிட்டிற்கு பெரும் மனச் சோர்வைத் தந்தது. தன் வாழ்வில் தனிமையும் வெறுமையும் உணர்ந்த இங்க்ரிட் 19, ஜூலை, 1965யில் கேப் டவுன் கடலில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்டார். இங்க்ரிட்டின் தற்கொலைப் பற்றியச் செய்தி கிடைக்கப் பெற்றதும் அவர்தம் தந்தை, “அவளை மீண்டும் கடலுக்குள் எறிந்து விடவேண்டும்!” எனக் குரூரமாக பதிலளித்தார். இங்க்ரிட்டின் அதி உன்னத எழுத்துத் திறனாலும், அவர்தம் வாழ்வின் அதி சோக முடிவாலும் ஆப்பிரிக்காவின் ”சில்வியா பிளாத்” என அழைக்கப்படுபவர்.

இங்க்ரிட் ஜோன்கெர்
---------------------------------------
முந்நீர்முனைத் தளும்பலின்
பால்யகால சுவாசங்களில்
உப்பின்சுவை படிந்திட்ட
நினைவு நாமொட்டுகள்

அடைகாத்து வெளியேகியதும்
மனதால் பிறழ்ந்த
இறப்பொன்றின் தொடர்வாய்
தகப்பனின் உறவு

குயிலின் நிணம்தோய்ந்த
பருவக்கூத்தின் பதின்களில்
கோடைக்காலத்தின் பின்
நரகம் விட்டு வெளியேற
காகிதங்கள் துணைபுரிந்ததும் நிதர்சனம்

மணப்பிரிவு உள்ளடக்கிய
ஒற்றைச் சூனியத்தின் மையப்புள்ளியென
பெண்மகவின் கருணைவருகை

குருதியிலும் வண்ணம்பிரிக்கும்
கூர் அலகுப் பிணந்தின்னியாகியவனும்
கருவறைக் களைந்து
உதிரமாயொழுகிய சிசுவும்
மனதுள் சிம்மாசனமிட்டனர்
ஏகநேர இருகாதலில்
எத்தனையோ சஞ்சல ஊற்றுகள்

முடிவின் முடிவாய்
தாய்ப்பறவை முகாமிட்டிருந்த
வால்கென்பெர்க் குடிலில்
தஞ்சமடைய விதி

புகழ்வரலாறெனத் தொடர்ந்த
புகையும் ஒக்கரும்
தெளிவூட்டும் படிமங்களாய்
தென்னாப்பிரிக்க மனங்களில்

தலைகவிழ்ந்தச் சூரியனின்
ஒளிக்கற்றை வழியல்களாய்
வரிகளெலாம் உடைப்பெடுத்து
திசையெங்கும் பயணித்தன

மென்தென்றல் பொழிந்த
பின்மாலை ஒன்றில்
மூளைக்குள் துப்பாக்கிக்குண்டு பாய்ந்திட்ட
தாய்மடி கிடந்த கறுப்பினச்சிறுவனுக்காய்
உலகெரிக்கத் துணிந்தனள்
சொற்வாட்களின் ஒலி கொட்டுமுழங்கிடவே

வரிகளின் வெளிச்சத்தில்
கருநிழலென உருவாகிறான் சிறுவன்
லங்கா, ந்யாங்கா, பிலிப்பி,
ஓர்லாந்தோ, ஷார்ப்வில் எனக்
காணக்கிடைக்கும் சாமானியனில்லை

சட்டங்களின் அதிகாரமெய்தி
சாளர இடைவெளிகளில் பிம்பமாகியும்
கரும் தாய்களின் இதய உள்ளறைகளில்
வாசம் செய்தவனாய் ஆனான்

ந்யாங்காவின் கதிர்களில் செழித்து
ஆப்பிரிக்க வீதிகளில் வீறுநடையிட்டு
உலகெலாம் அசுரப்பயணம் செய்தவன்
இவளை வந்தடைந்ததாய்
வரிகள் செய்தவள்தான்
அத்தனைப் பெரும் கனவிற்கான
திறவுகோலினை வடிவமைத்தவள்

வதனங்களை வரையறுத்திட
முன்னும் பின்னும் இருப்பவையாவும்
தன்முகமெனப் பிரகடனம் செய்து
கறுப்பு வண்ணத்துப்பூச்சியென
சபிக்கப்பட்ட நிலமெங்கும்
பறத்தல் தொழில்

வெகுபார நொடியொன்று
அவள் மீதேறி அழுத்தியவேளை
சிறகுகள் வெட்டியெறிந்திட்டு
முந்நங்கூர வளைகுடா
மணற்கரை அரித்துச் செல்லும்
வெண்ணிற நதியெனப் பாய்ந்தே
கழிமுகமில்லா கடல் கரைந்தாள்

மூழ்கிக்கிடக்கும் சங்குகளெல்லாம்
இனி அவள் வரிகள் ஒலிக்கும்
“முதல் மரணத்திற்குப்பின்
மற்றோர் மரணமில்லை!”

சந்தை

நிலவும் வண்ணத்துப்பூச்சியும்
இந்த வரிகளில்
மிதப்பதில்லை
அவள் உத்தரவிடுவதுமில்லை
கொஞ்சமாய் திறந்திருக்கும்
இந்தச் சாளரங்கள்
அனுமதிப்பது
காற்றை மட்டுமே
குழல் நுழைந்த காற்றில்லை
உயிர் துடிக்கும் காற்றுமில்லை
காற்று
அவ்வளவே
பிறந்த சிசுவொன்று
அன்று
வெளியெங்கும் அலைபாய்ந்து
உள்ளிழுத்ததே
அந்தக் காற்று

-------------------------------

அந்த அறைமுழுதும்
கரும்பச்சைக் காட்டை
அடைத்து வைத்திருந்தனர்
பாதங்களில் கறிவேப்பிலை
மணத்துடன்
உணவருந்துகிறான்
கடைச்சிறுவன்

--------------------------------

ரயிலடி காய்கறிச் சந்தையில்
இன்று இரவும்
அவளை நீங்கள்
கேட்க நேரலாம்
ஊமையானவளின்
பலத்த குரலில்
வாழைக்காய்கள்
காய்ப்பதையும்

-------------------------------

வெடித்தத் தக்காளியாய்
சிவந்து முற்றிய
இதழோரப் புற்றுடன்
காய்கறிப்பாட்டியின்
புகையிலைச் சிரிப்பு

மிரண்ட குழந்தை
ஆங்கிலத்தில்
தக்காளியை
முணுமுணுக்கிறது

------------------------------

Monday, 21 April 2014

தீட்டுத்துணிகள்

அவளின்
தீட்டுத்துணிகளைப் பெற்று
பணப்பெட்டியில்
பத்திரம் செய்யக்
காத்திருந்தவர்களின்
வீடுகளின்
கொல்லைப்புறங்களில்
மட்கிய தீட்டுத்துணிகள்

------------------------------------------------

கற்பூர ஒளியில்
மட்டுமே
லயித்திருந்தவர்களைக்
கண்டதும்
அவள் சுட்டுவிரல்
அசைந்ததை
நீங்கள் எவருமே
கவனிக்கவில்லை

-------------------------------------------------
துள்ளு மாவில்
கலந்திருந்த
வேப்பங்கொழுந்துகளை
ருசி பார்த்ததும்
கசந்து நகர்ந்த
பசும் வெயில்
பானகத்தில் கால் நனைத்து
மெல்ல முன்னேறுகிறது
படையல்களுக்காய்
நேர்ந்து விடப்பட்டவளின்
மஞ்சள் பாதங்கள் நோக்கி

--------------------------------------------------

Saturday, 12 April 2014

அடைப்புக்குறி கால்கள்

அத்தனைப் பெரிய
இஸ்திரிப்பெட்டியைத் தூக்கியழுத்தி
நாளெல்லாம் நின்றபடி
வேலை செய்யும்
அவரின் கால்கள்
இரண்டு அடைப்புக்குறிகள் போல்
வளைந்திருக்கும்
கரிமூட்டை தோளில் சுமந்து
நடந்து வருகையில்
வித்தியாசம் நன்றாகவே
தெரியும்
சுற்று வட்டாரத்தில்
எந்தச் சிறுமி பூப்பெய்தினாலும்
அவரே முதல் சேலை
தருவார் உடுத்திக் கொள்ள
சம்பிரதாயமாம்
பூப்பெய்தி பல வருடங்கள்
கழிந்திருந்த நாளொன்றில்
அவர் மகள்
விடமருந்தி மரித்திருந்தாள்
ஜாதி மாறி
காதலித்திருந்தாளென
ஊருக்குள் பேச்சு
அவளின் இறுதிச் சடங்கில்
மவுன உயிராய்
ஒருவன் நின்றிருந்தான்
மதிலோரத்தில்
அடுத்த வாரம்
நடக்கவிருந்த திருமணத்திற்கு
அவளுக்காய் நிச்சயமாகியிருந்த
மாப்பிள்ளை அவனென
எல்லாரும் கிசுகிசுத்தனர்
பிணம் தூக்கும் முன்
மடித்துக் கட்டிய வேட்டியில்
தெரிந்தது
அவன்
அடைப்புக்குறி கால்கள்

காதற்பூரிப்பு

அவ்வளவு அழகாய் 
வர்ணிக்கிறாய் அவளை 
சொல்லோவியமாய் 

கொவ்வைச் சிவப்பு 
பொன் மஞ்சள் 
அடர் கருமை 
சுழிந்த நீலம் 
படரும் பசுமை 

காதல் பித்தேறியவன்
தோழியாய் இருப்பதுவும்
ஏதோ வகை சுகம்தான்

சொற்களின் இடையில்
வழிந்தோடும் உன்னை
அவள் மட்டுமே
சேகரிக்க இயலும் போலும்

நானே அனுமானிக்கிறேன்
அழகிய உருவமொன்றை
ஏதோ வினவ
உனைக் காண நிமிர்கிறேன்

தான் என்ற ஏதுமின்றி
நீயே அவளாகி
பூரித்து நிற்கிறாய்

அருள்மேரி மிஸ்

வரலாறு ஆசிரியைதான் 
எனினும் திகில்கதைகள்
சொல்வார் அருள்மேரி மிஸ்
உணவு வீணாக்கியவள்
கழிவோடைப் புழுவின்
பிறப்பெடுப்பாள் எனவும்
இரவுகளில் புலால் உண்பவன்
சாத்தானின் சகோதரனாவான்
எனவும் பல கதைகள்

நீதிக்கதைகளாய் அல்லாதிருத்தலே
எங்களின் தேவையாயிருந்ததில்
வகுப்பின் சரிபாதி நேரம்
கதைகள் சொல்லியவர்
ப்ரிம்ரோஸ் மிஸ்ஸைக் கண்டால்
முகம் திருப்பிச் செல்வார்

புதிதாய் பல பொறுப்புகள்
கைமாறியிருந்தது
அருளிடமிருந்து ரோசிக்கு
ரோசியின் வயதும்
காரணமாயிருக்கலாம்
ஆம்
பள்ளித் தாளாளர் முதியவர்

நாற்பத்தைந்து வயதின்
படிமங்களுடன்
கருவறைத் திறவா
அருள்மேரி
ஸ்தோத்திரங்களுடன்
வாழ்ந்ததில்
வியப்பேதுமில்லைதான்

இன்றும் நினைவிருக்கும்
அந்த நாளின் முடிவில்
பள்ளி வளாக ஆலயத்தில்
குழந்தை யேசுவின்
விழிகள் கண்டு
புலம்பியபடியே அழுத
அருள்மேரிதான் நாங்கள்
இறுதியாய் கண்ட
அவர் சார்ந்த காட்சி

எந்த திகில்கதையினுள்ளும்
தன்னைப் பொருத்தவியலாது
தோற்றுப்போன
மேரிமாதாவின் வரலாறுகளை
அருள்மேரி மிஸ்
எங்கேனும் விவரிப்பதாய்
வரும் கனவுகளில் மட்டும்
குழந்தை யேசு ஏன்
அழுதபடியே இருக்கிறார்
முன்னிருக்கை மாணவனாய்

அரங்கேறுபவள்

கிளியோபாத்ராவின் உடல்
நீலம் பாரிக்கும்
முன்னரே
ஏன் வெளியேறினீர்
திசையறியா விடம்
உங்கள் பாதங்களின்
பின்னே
தொடர்வதை
நீங்கள் எப்போதும்
அறியப்போவதுமில்லை

-----------------------

கோட்டையின் மதில்கடந்து
தவழும்
தனது அத்தனை நீள
தலைமுடி மூலமாய்
காதலனை
உள் அழைத்த ரபுன்செல்
பாத்திரமேற்று நடிப்பவள்
மறக்காமல்
ஜன்னல்களை அடைத்துவிட்டே
இரவுகளில் உறங்குகிறாள்
ஆம்
தலைமுடியை
முடிந்துகொண்டும்தான்

----------------------

மார்புகளிடை ஆழமாய்
இறங்கியிருந்த
அட்டைக்கத்தியை
ஒப்படைக்காமல்
அரங்கை விட்டு
வெளியேறுபவளை
பரிதாபமாய் பார்க்கும்
திரைச்சீலைகள்

----------------------

Tuesday, 8 April 2014

துளிகள்

இலக்கியவாதியாக
என்னவாக வேண்டுமென
முதல் புழுவிடம்
கேட்டது இரண்டாவது

நீ பிறந்த இடம்
நீ பிறந்த குலம்
நீ பெண்ணெடுத்த
அல்லது பிள்ளையெடுத்த இனம்
நீ வாழும் வீதி
எல்லாம் கொண்டு
நிர்ணயிப்போம்
நீ இலக்கியவாதியாவென

முதன்மையாய்
நீ முகநூலில் இருத்தல் அவசியம்

உன்னைப் பற்றி
உன் இனமானவன்
உன்னைப் போற்றி
வெளிக்கொணர்தல்
அதைவிட அவசியம்
என்றது
முதல் புழு

இலக்கியமென்பது
இதில் எங்கு வருகிறது
மீண்டும் வினவியது
இரண்டாவது புழு

இது மட்டுமே
இலக்கியமெனச் சொல்லி
தடியூன்றி நடந்துச் சென்றது
முதல் புழு

-------------------------------

நாளெல்லாம் சேர்ந்தக்
கழிவுகளையெல்லாம்
நெகிழி உறையிலிட்டு
இரவே வாசலில்
வைத்துவிட வேண்டும்
பெருநகரச்
சுகபோக வாழ்வில்

மணியடித்தபடி
அதிகாலை
பச்சை வண்டியில்(அரசியல் வேண்டாம்)
வரும்
மாநகராட்சி ஊழியன்
அவற்றை அகற்றும்வரை
இரவோடு சேர்ந்து
எலிகளும்
நாய்களும்
பூனைகளும்
கழிவுகளை ருசிபார்க்கும்
இந்த நொடியில்தான்
நானும் இதை
எழுதிக்கொண்டிருக்கிறேன்

சுகபோகங்களில்
இதுவும் ஒன்றே என
நீங்களும்
நம்பித்தான் ஆகவேண்டும்

---------------------------------

முழுதாய் படித்து
முடிக்கும் முன்பே
புத்தகம் மூடியெழுந்து
சமையலறை நோக்கி
நடப்பவளின்
பின்னிருந்து
கதறும் எழுத்துகளை
வாரியணைக்க
ஓடிவருகிறது
படித்து முடித்த
முந்தைய எல்லாமும்

---------------------------------

கண்ணாடிச் சட்டத்திற்குள்
இருப்பவளிடம்
பேசியபடியே இருக்கும்
மல்லிகைச்சரம்

அவளின் ஒவ்வொரு சொல்லுக்கும்
ஒரு பூ உதிர்கிறது

விழித்திருந்து ரசிக்கும்
இரவுக்கோ
கொள்ளை வியப்பு

இழந்த மலர்களுக்கீடாய்
சரமெங்கும்
அவள் சொற்கள்

------------------------------------

அந்தச் சரணத்திற்குப்
பின்னான பல்லவி
தொடங்குவதற்குள்
உங்களுக்கானப் பாடல்
முடிந்திருந்தது

---------------------------------

சரணத்தில்
அத்தனைக் கவித்துவம்
புகுத்தாதீர்கள்
பல்லவியில்
இத்தனை மோகம்
கூடியிருப்பதை
கவனித்தீர்கள்தானே

---------------------------------

நீலவண்ணப் பறவை
மாந்தளிர் வண்ணப் பறவை
இரண்டும்
வியந்துகொண்டே கூடுகின்றன
கடம்ப மரக்கிளையில்

முந்தைய வியப்புகளெல்லாம்
இலைகளாக மாறியிருந்த
மரத்திற்கு
இதில் வியப்பேதுமில்லை

-----------------------------------

காற்றின் கடலில்
நீந்துமெனக்கு
செதில்கள் இல்லாதது
ஏனென
இன்றும் வினவியது
தொட்டி மீன்

----------------------------------

இரவு பரணிலிருந்து
இறங்கிய பூனை
தொலைக்காட்சித் திரையில்
விட்டுச் சென்றிருந்தது
காலடித் தடங்களை
அதிகாலை செய்திவாசிப்பவரின் முகத்தில்
பூனைக்களை

----------------------------------

இலக்கியப் புழு

இலக்கியவாதியாக
என்னவாக வேண்டுமென
முதல் புழுவிடம்
கேட்டது இரண்டாவது

நீ பிறந்த இடம்
நீ பிறந்த குலம்
நீ பெண்ணெடுத்த
அல்லது பிள்ளையெடுத்த இனம்
நீ வாழும் வீதி
எல்லாம் கொண்டு
நிர்ணயிப்போம்
நீ இலக்கியவாதியாவென

முதன்மையாய்
நீ முகநூலில் இருத்தல் அவசியம்

உன்னைப் பற்றி
உன் இனமானவன்
உன்னைப் போற்றி
வெளிக்கொணர்தல்
அதைவிட அவசியம்
என்றது
முதல் புழு

இலக்கியமென்பது
இதில் எங்கு வருகிறது
மீண்டும் வினவியது
இரண்டாவது புழு

இது மட்டுமே
இலக்கியமெனச் சொல்லி
தடியூன்றி நடந்துச் சென்றது
முதல் புழு

கனவின் கொடும்பசி

அந்த வீதியில் உணவகங்களே இல்லை
மிகப்பிடித்த நீலக் கமீசணிந்து
பசியோடு அலைகிறேன்
வீதிமுனையில் ஒரு திடீர்ப்புகைபோல் தோன்றி
என் விரல்பற்றி மருந்தகமொன்றுள்
அழைத்துச் செல்பவளை
என்றோ திரையில் பார்த்த ஞாபகம்
இப்போது பிரபல தையலகம்
இருக்கும் இடத்தில்தான் அந்த மருந்தகம் இருந்தது
அவள் ஏன் சீசா நிரம்ப
மாத்திரைகள் வாங்குகிறாள்
விற்பனையாளர் என்னை பற்றி
அவளிடம் ஏதோ வினவுகிறார்
பதிலுரைக்காது என்னை இழுத்துக் கொண்டு
அதே வீதியில் விரைகிறாள்
பசி இன்னும் நெருக்குகிறது என்னை
அவள் கரம் போலவே
சிறுகடையொன்றின் முன் நிற்கிறேன்
அவளின் இழுப்பிற்குச் செல்ல மறுக்கிறேன்
கண்ணாடிக் குடுவை மிட்டாய்கள்
எனக்கு முற்றிலுமாய் மறுக்கப்படுகின்றன
என்னைப் போன்றே சில சிறுமிகள்
கற்களோடு கடைவாசலில்
என் கையிலும் ஒரு கல் திணிக்கப்படுகிறது
கடை உரிமையாளன்
மிகுந்த சிவந்த நிறமாய் இருந்தான்
நானெறிந்த கல் அவன் கபாலம்
பிளந்ததும் கடையில் தீப்பிடித்தது
கருகிய வாசம் நுகர்ந்துகொண்டே
காவல்துறையிடம் வாதிட்டுக் கொண்டிருந்தான்
என் இந்நாள் காதலன்
அந்தக் கடையின் மிட்டாய் மிகுந்த ருசி
தற்போது அதை இழந்துவிட்டதற்காய்
மிகவும் வருத்தப்பட்டான்
நான் ஏன் எவர் விழியிலும்
சிக்காமல் இருக்கிறேன்
பசியோடு நித்திரைக் கொள்வதுதான்
எத்தனை
ஆபத்தாகவும் அபத்தமாகவும்
இருந்து விடுகிறது
என வியந்து கொண்டே
பசியினால் தளர்ந்து கடைகளைக்
கடந்துச் செல்கிறேன்
மாத்திரை சீசாக்காரி விழிகள் குத்திட்டு
படுக்கையில் இறந்து கிடக்கும் காட்சியுடன்
தினத்தாள் கடையொன்றில் தொங்குவதை
நான் கவனிக்கவே இல்லை

இரவுகள்

இரவுப்பூனைகளுக்கு
பெரிதாய் விதிகளில்லை
இரவுகளைப் புணர்கையில்
நகக்கீறல்களும் பற்தடங்களும்
பூனையுடையதைப் போலவே
இருக்க வேண்டுமென்பதே
அவற்றின்
ஒரே விதி

-----------------

கழிமுகம்வழி
மேலேறி வரும்
வயது முதிர்ந்த கலம் போல்
அசைந்துவரும் இரவில்
எதுவுமே நேர்வதில்லை
நேராய்

----------------

இரவின் கனம் தாளாது
அழுத்தம் கூடும் இசை
உங்கள் கனவுகளின்
இடுக்குகளில் வழிந்தோடுவதை
இன்றேனும் உணருங்களேன்

----------------

அதிரும் வீணைநரம்பிலிருந்து
தெறித்து விழுந்த
உறைபனித்துகள் போல்
அத்தனைக் குளிர்ச்சி
இரவுகளில் கேட்கப்படும்
இசைக்கு

---------------

இருள் ஓர் அணை
போல் சூழ்ந்திருக்க
கனமாய் வெளியே
தேங்கி நிற்கும்
இந்த இரவை
எந்த மதகு வழி
உள்ளழைப்பது

---------------

கருப்பைத் துரோகம்

முப்பத்தைந்து வயதில்
கட்டி வந்ததால்
கருப்பை நீக்கிய
இரண்டு குழந்தைகளின் தாயை
சந்தித்தேன் இன்று
சம்பிரதாயப் பழங்களுடன்

கத்தியே படாமல்
மிக நவீன முறையில்
அறுவைசிகிச்சை முடிந்ததையும்

மருத்துவமனையின் துல்லியமான
சுகாதாரத்தையும்
சிகிச்சையளித்த மருத்துவர்களின்
வெளிநாட்டு உயர்படிப்புத் திறமைகளையும்

இரண்டே நாட்களில்
சகஜவாழ்விற்குத் திரும்பிவிட்டதின்
மாயத்தையும்

சன்னக் குரலில் பகிர்ந்தபடி இருந்தவள்
இறுதியாய் அந்தக்
கேள்வியைக் கேட்காமலேயே
என்னை வழியனுப்பியிருக்கலாம்

குழந்தைகளுக்கு
ஏதேனும் வலியென்றால்
அடிவயிற்றில் ஏதோ
ஒன்று புரண்டு கதறுமே...
அதற்கு நான் துரோகம்
செய்யவில்லைதானே?

கணக்குகள்

எல்லாவற்றுக்குமான
எதிர்திசையில் சென்று
எல்லோரையும் கடக்க
எண்ணுகிறேன்

இறைவனிடம் ரகசியம்
பேசுபவள் போல்
நுணுக்கமாய் மலர்தொடுக்கும்
மூதாட்டியின் பாதங்களைச்
சுற்றிச் சென்று கொண்டிருந்தது
செவ்வெறும்புக் கூட்டம்

-----------------------

அறுகோண வடிவ
நீச்சல் குளத்தின்
ஆழமளக்கத் தலைப்பட்டச் சிறுமி
சடலமாய் கண்டறியப்பட்டபின்பும்
நாம் குழம்பிக் கொண்டிருக்கிறோம்
விடையை
மீட்டரில் சொல்வதா
அடிகளில் சொல்வதாவென

------------------------

சுற்றளவும் கொள்ளளவும்
கணக்கிடப்பட்டபின்னும்
அந்த உருளைகள்
காத்துக் கொண்டே
நிற்கின்றன
உங்களின் கணக்கின்
முடிவில்

அவை எந்தத் திசையில்
உருள வேண்டுமென
இன்னும் நீங்கள்
சொல்லவில்லை

-----------------------

பங்கீடு கணக்குகளை
அவள் அறவே வெறுக்கிறாள்
கேக் துண்டாடப்படும்
தருணங்களில் எல்லாம்
கணக்கிலிருந்து வெளியேறி
நிலா வெறிக்கிறாள்

பிதாகரஸும் யூக்ளிடும்
இல்லாத நிலாத்தேய்தல்தான்
எத்தனைக் கவித்துவமாய்
இருந்து விடுகிறது
துண்டாடப்படும் வலிகள் இல்லாது

-----------------------

உங்களின் வட்டம் ஏன்
இத்தனைக் குறுகலாய்
உள்ளதெனக் கேட்காதீர்கள்
மையப்புள்ளி தேவைப்படாத
உங்களின் சதுரங்கள் மேல்
எனக்கு காதல் வருவதில்லை
என அறிந்த பின்னரும்

--------------------

காகமானவள்

மஞ்சள் பூக்கள் மலர்த்திக்கொட்டும்
மரத்தடிகளைக்
கடக்கையிலெல்லாம்
இரட்டைக் காகங்களை
கண்டுவிடுகிறவள்

ஆட்காட்டிவிரலும் நடுவிரலும்
விரித்து வெற்றிக்காய்
புன்னகைப்பாள்
இரட்டைக்காகங்களை நோக்கி

விரல்களற்று இருப்பதுதான்
எத்தனைத் துயரம்
காகங்களுக்கெனச்
சொல்லிச் சிரிப்பாள்

அவள் தரப்போகும்
மகிழ்வின் சுபசகுனங்கள் குறித்த
காகங்களின் மனக்கிலேசங்களை
அவள் மதிப்பதில்லை
அவளுக்கு காகங்கள்
மட்டுமே போதும்

இரவின் நிழல்
காகங்களாய் உயிர்த்ததாய்
என்றோ எவரிடமோ
சொல்லியவள்
அவளிடம் தொலைபேசும்போது
காகங்களின் பின்னணியிசையை
நீங்களும் கேட்கலாம்

நாற்பத்தைந்து டிகிரீ கோணத்தில்
கழுத்துகளைத் திருப்பி
மெய்யான காகப்பார்வையுடன்
நீண்ட நேரமாய் காத்திருக்கின்றன
ஜோடி காகங்கள்
அவள் ஜன்னலில்

மஞ்சள்பூக்கிளையுரசும் பால்கனியின்
விளிம்பிலிருந்து
விரல்களை விரித்தபடி
முன் தின இரவு
அவள் விழுகையில்
ஒரு காகம் பறந்ததைப்போலவே
இருந்ததாய்
காவலாளி சொல்லிக்கொண்டிருந்தான்
அனைவரிடமும்

இரவுகள்


சலனமற்ற இரவுக்காய்
ஏங்கும்
மாநகர விளக்குக் கம்பங்களின்
மஞ்சளொளி
இரவையும் இருளையும்
மற்றுமொருமுறை
குழப்பிக்கொள்ள மாட்டீர்கள்தானே

-----------------------

மலைக்காட்டின் இருளில்
கண்கள் ஒளிர
வெறிக்கும் இரவின்
கொடும்பசி கண்டு
இலைகள் அதிரச் சிலிர்க்கும்
நெடுமரம்

-----------------------

புல்லாங்குழலின் இரவுகள்
மூங்கில் வனங்களில்
ஓடி ஒளிவதை
ரசித்தபடி
கடக்கும் காற்று

-------------------------
பிரபஞ்ச இருளில்
வழிதவறிய ஆதிக்கடவுளின்
இறுதி உயிர்ச்சொட்டாய்
மிதக்குமிந்த உலகை
முழுதாய்
போர்த்தவியலாத
கழிவிரக்கத்தில்
இந்த இரவு

காவியா, வெயில்

சூரியனையே மறைத்துப்
பறக்கும் சிட்டுக்குருவி
இளைப்பாற
வாய்த்ததென்னவோ
செல்பேசி கோபுரங்கள்தாம்
இங்கு


----------------------

கண்கள் சுருக்கி
கழுத்து மடிப்பில்
வியர்வை மினுங்க
நடந்து வரும் பெண்ணை
உங்களை விடவும்
வெயில்
அதீதமாய் ரசிக்கிறது

---------------------

சுவாசத்திற்காய் தவிக்கும்
பிரபஞ்சத்தின்
நுரையீரலை நேரடியாய்
போய்ச் சேரும்
அவசரத்துடன் தான்
அவளின் இறுதிமூச்சு
விரைந்ததாய்
காவியா சொல்லவில்லை
நான் அறிந்துகொண்டவற்றை
எப்போதுமே
அவள் சொல்வதில்லை

----------------------

அந்தத் தாள்
முழுதும் கொட்டிக்கிடக்கும்
வண்ணங்கள்
ஓவியத்தைக் கண்டுபிடிக்கச்
சொல்கிறாள் காவியா
அவள் விரல்நுனி
சிகப்புத்தீற்றலில்
முடிந்திருந்தது ஓவியமென்பதை
அவள் ஒப்புக்கொள்ளவும்
போவதில்லை

----------------------

இரு எறும்புகள்
தூக்கிச்செல்லும்
ஒற்றைப் பருக்கை நடையில்
திடீர் தள்ளாட்டம்
என் பார்வையின் கனமாயிருக்கலாமென
வேறுதிசை விழிகள்
நோக்கச் சொல்கிறாள்
காவியா

-----------------------

மஞ்சள் நிறத்தாலேயே
மாம்பழங்களை
வெயில்பழங்கள்
என்கிறாள் காவியா
எத்தனை முயன்றும்
முற்றாத பச்சைவெயிலை
என்னால்
உருவகப்படுத்தவே இயலவில்லை

----------------------


குமிழ்போல்
பெருகிப் பெருகி
வெயில் உடையும் ஓசை
கேட்டுத் திடுக்கிட்டு
கிளைகள் தாவித் தாவி
அமரும்
தூய வெயில்நிறப் பட்டாம்பூச்சி

----------------------

அலைகள்

கொலுசுக்கால் பற்றி
மேலேறும் நுரையலை
அலைகள் பற்றி
கடல் உடுத்த முயலும்
அவள்

------------------------

தொட்டு அழைக்கும்
அலைகளுடன்
செல்ல மறுக்கும்
கரையோரப் படகு
ஒற்றைப் பலூனுக்கும்
சில முத்தங்களுக்கும்
நினைவுக்காவலாய்

------------------------

இருசிப்பிகள்போல்
வானும் கடலும்
பிளந்திருக்க
இருள்சொட்டாய்
நுழைகிறது இரவு

-----------------------
ஆர்ப்பரித்தக் கடல் ரசித்தச்
சிறுமி தவறவிட்ட
ஆரஞ்சு மிட்டாய்
ரகசியமாய் வந்து வந்து
ருசித்துச் செல்கிறது
குழந்தை அலை

-----------------------

கரையோரச் சிறுவன்
விடுத்தப் பட்டத்தின் நிழல்
பத்தொன்பதாம் அலையில்
பட்டத்திற்காய் அழுத
சிறுமியின் காலடி
வந்து சேர்ந்தது

----------------------

பழுப்பு நாய்

மாலை விளையாட்டில்
சிறுமிகள் விட்டுச்சென்ற
கட்டங்கள்
முகர்ந்து பார்த்தபடியே
நகரும் பழுப்புநாய்
நாளை பூப்படைபவளை
கண்டு கொண்டிருந்தது

---------------------

அந்திவான ஜொலிப்புகளை
தங்கத்தடடென
காவியா உவமிப்பதில்லை
சாக்லெட் சுற்றிய
காகித உறை வசீகரிப்புகளே
அவளுக்குப்
போதுமானதாயிருக்கிறது

--------------------

சுவரோடு உப்புத்தாள்
உராயும் ஓசையோடு
இங்கு
கதிரவன் அடைகிறான்
பறவைச் சிணுங்கல்களோடுதான்
அவன்
உங்களிடமிருந்து
தொடங்கியிருந்தான்

--------------------

சன்னதம், வெயில்

குவித்து வைத்திருந்த
மணல்திட்டிற்குள்
நாவைச் சுழற்றி
பசுவொன்று
மண் தின்பதையும்
பெண்நாய்
நிதானித்து உதிரப்பொட்டுகளை
நடுவீதியில் இட்டுச்
செல்வதையும்
வெறிக்கும் சிறுவனுக்காய்
தாழ்ந்து எரியும்
வெயில்

------------------

துளைவிழுந்த வாளி
நிரம்ப உப்புநீர்
துள்ளி நழுவி
வெளியேறும்
மீன்குஞ்சு நிலா

-----------------

கோடையின்
முதல் ஆசி போல்
வீழ்ந்தது மஞ்சள் மலர்
அடுத்தடுத்த ஆசிகளுக்காய்
முகம் உயர்த்திக்
காத்திருக்கும்
வாசற்கோலம்

-------------------

வேம்பில் பால்வடிந்த
தடத்தை உற்றுப்பார்ப்பவளின்
மார்புகளில் கசிவு
புற்றுக்குள்ளிருந்த நாகம்
மெல்லப் புரண்டு
விழிக்கிறது

----------------------

அழுகையை அடக்க
வாயில் திணிக்கப்பட்ட
நாட்டு பேரிக்காயுடன்
மார்பெங்கும் செடல் குத்தி
மெல்லக் கருவறைச்
சுற்றி வரும்
சிறுமிக்காய்
கூடுதலாய் குளிர்ந்து கிடந்தது
கோயில் குளம்

------------------------

விழிகள் சிவக்க
புகைமூட்டத்தின் நடுவில்
பொங்கல் வைக்கும்
அம்மாவுக்கு
அன்று
அம்மன் முகம்

-----------------------

சிறு வேல்களை
மேனியிலிருந்து அகற்றியதும்
புத்தாடையுடன்
அம்மன் தரிசிக்கும் சிறுமி
திரும்பிப்பார்த்துச்
சொல்லிச் செல்கிறாள்
கொஞ்சம் கால் மாற்றி
அமர்ந்து கொள்ளேன்

--------------------------

சன்னதம் கொண்டு
ஆடுபவளை
அச்சத்துடன் பார்க்கும் சிறுவன்
சில நொடிகள் முன்னர்
அவளுக்குள் இருந்த
தன் தாயைத்
தேடிச் சலித்து
மீண்டும் அச்சத்துடன்
பார்க்கும் சிறுவன்

----------------------------

வெயில் காத்திருப்பு

ஒளிச்சேர்க்கையின் பின்
துவண்டு கிடக்கும்
பசும் இலைகள்

நாளையும் வருவதாய்
சொல்லிச் செல்லும்
வெயிலிடம்
ஊடல்மொழியுடன்
தலையசைக்கும்

------------------

வெட்டுப்பட்ட மரத்தின்
வெகு அருகில்
உடலெல்லாம்
செவ்வெறும்புகள் மொய்க்க
வீழ்ந்து கிடக்கும்
பறவைக்குஞ்சுகள்

வெற்றுக் கூடினைச்
சுற்றிச் சுற்றிப்
பறந்திடும்
தாய் வெயில்

------------------

சிறுகூட்டுக்குள்
பொதிந்திருந்த முட்டைகளை
மென்மையாய் தட்டிப் பார்க்கிறது
வெயில்
முதல் பறவையைக்
காணும் ஆவலுடன்
மாலைவரை காத்திருக்கிறது

--------------------

படைக்குதிரைகள்

பெயரில்லா தேவனிடமிருந்து
கழண்டு விழுந்த
கருமணிபோல்
மலையுச்சியிலிருந்து
விரைந்துவரும்
கருப்புக் குதிரையின்
பாதை மறித்து நிற்பதே
அவள் பொழுதுபோக்கு
குளம்படித் தழும்புகள்
நிறைந்த மேனியை
கனமற்ற மலர்போல்
பாவிக்கிறாள்
அன்றைய இரவுகளில்

---------------------------------

கோவேறு கழுதைகளின்
பின்வாசலில்
காத்துக்கிடக்கின்றன
முன் தினம்
போர்க்களம் மீண்டிருந்த
படைக்குதிரைகள்

--------------------------------

தேய்ந்து உராயும்
மூட்டுகளோடே
விரைகிறது முதிய குதிரை
முதுகில் அமர்ந்திருக்கும்
இளையவளின் பாரத்தை
உணவாக்கிக் கொண்டு

---------------------------------

Saturday, 5 April 2014

பயணங்கள்

அந்தத் தெருவினுள்
பேருந்து செல்லுமெனத்
துளியும் எதிர்பார்க்கவில்லை
வழிகாட்டுபவன் முன்னரே
ஜன்னல்கண்ணாடிகளை
ஏற்றிவிடச் சொல்லியிருந்தான்
படீரென கண்ணாடியில்
அடிகள் விழுந்ததும்தான்
சுற்றியிருந்தவர்களை கவனித்தேன்
திருநங்கைகளின் இரைச்சலும்
சிரிப்பொலியும்
ஒலியற்றப் படிமங்களாய்
அகக்கண்ணில் இன்றும்
எல்லா வாசல்களிலும்
அதீத ஒப்பனை முகங்கள்
நெடிய வீதி முழுக்க
பெண்கள் பெண்கள் பெண்கள்
சிறுமியொருத்தியின் சிரிப்பு
எல்லா தெய்வ அறங்களையும்
அங்கு சிதைத்துக் கொண்டிருந்தது
வீதியைக் கடந்ததும்
ஜன்னல்கள் திறந்தன
மும்பையின் பிரபல
கோவில் நோக்கிச் செல்வதாய்
சொன்ன அறிவிப்பில்
ஏன் அன்று
புனிதமே இருந்திருக்கவில்லை

------------------------------

கோவா கடற்கரையில்
கண்டேன் அவளை
சட்டையும் பாவாடையுமாய்
பியர் விற்றுக்கொண்டிருந்தவள்
பதப்படுத்தப்பட்டப்
பாதிரியின் உடலிருந்த
தேவாலயத்தில் மெழுகுகள்
விற்றுக்கொண்டிருந்தவளின்
இறுக்கமில்லை இவளிடம்
வெகு இயல்பான
உடல்மொழியுடன் திரிந்தவளிடமிருந்து
பார்வையைப் பெயர்த்து
கடலுக்குள் செலுத்துகிறேன்
நுரைத்துப் பொங்கும்
அலைகளிலும்
பியர்குமிழிகளைத்தான்
பார்த்ததாய் ஞாபகம்

-------------------------------

நவாபின் கோட்டை வாயிலில்
அவர்தம் வீர பராக்கிரம
வாக்கியங்கள் அறையப்பட்ட
ஒற்றை மரம்
அதன் விதைகளைக்
காற்றில் விசிறினால்
ஹெலிகாப்டர் போல்
பறந்துத் தரையிறங்கும்
நவாபின் காலத்தில்
குழந்தைகள் அதில்
விளையாடியிருக்கக்கூடும்
எனினும்
கோட்டையின் உள்ளே
அந்த மரங்களே இல்லை
ஹெலிகாப்டர் மரங்கள்
குறித்து அறியாமலேயே
மாண்டு போயிருந்த
நவாபின் குழந்தைகள்
பற்றி எந்த
மரத்திலும் வாசகங்கள்
அறையப்பட்டிருக்கவில்லை

-------------------------------

குறுக்கும் நெடுக்குமாய்
பிணைந்தோடும்
அட்டைகள் விட்டுச்சென்ற
வெள்ளிப்பாதைகள்
குழம்பிய வெளியின்
புதிர்ப்படம் போல்
இரவுநேரத் தோட்டம்

------------------------------

அள்ளிய மணலோடு
வந்துவிட்ட பாம்பு
ஊருக்குள்
இடம்மாறியிருந்த
ஆற்றுத்தடத்தினைக் கண்டு
வியக்கிறது

------------------------------

கவிதைத் துளிகள்

எழுநூற்று ஐம்பதாவது
படியில்
பாதங்கள் தன்னிச்சையாய்
துடிக்கின்றன
துளி விடத்தில் யானை கொல்லும்
ஆப்பிரிக்கப் பாலைவனப்
பாம்பின் வால்நுனிபோல்

மீதமிருந்த படிகள்
மெல்லியதாய் அசைகின்றன
அதே ஆப்பிரிக்க பாம்புபோல்
----------------------------

எண்ணற்றப் படிகள்
கடந்து வந்து
இறுதிப் படியிலிருந்து
நிலம் பாவிய பின்னரும்
இல்லாத
அடுத்த படிக்காய்
உயரும் பாதம்போல்
முடிந்து போன
அத்தியாயத்தின் பின்னே
தடுமாறி நிற்கும்
வாசிப்பு

------------------------------

பின்னிருக்கையில்
நிர்வாணமாய்
அமர்ந்து வரும் வெயில்
உடலும் முகமும் மூடிய
இருசக்கர வாகனஓட்டிப்பெண்

-------------------------------

விழுதுபோல்
வழியும் வெயில்
மரங்களின் ஊடாய்

--------------------------------

மணியசைய வந்த
கோவில்யானை
பிங் பாங் காலணி
சப்தமிட நடந்துவந்த
குழந்தை
இருவரையும்
ஓடிச் சென்று பார்க்கும்
நான்

-------------------------------

சரிந்துகிடக்கும்
செங்கற்குவியல்
விடத்தின் வெப்பம்
தாளாது
எட்டிப்பார்க்கும்
செந்தேள்

-------------------------------

வரலாறு என்பது
சோரம் போனவர்களால்
தூக்கி நிறுத்தப்படுவது
அதுவே
அதிமுக்கிய
வரலாற்று நிகழ்வும் கூட

------------------------------

மலைக்காய்ச்சலில்
வலிப்பு வந்து
கருச்சிதைவானவள்
வரிகளினிடையில்
சுருண்டு கிடக்கிறாள்
அனிச்சையாய்
அடிவயிறு தடவி
மீள்கிறது
புத்தகம் ஏந்தாத
மறு கை

---------------------------

கரைந்து விழுந்த
வரிகள்
உங்கள் மார்புகளின் மேல்
விழுகின்றன
உறிஞ்சிய பாலை
சிசு மீண்டும்
தாய்க்குள்ளே செலுத்துவதுபோலே
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே
வரிகள்
உங்களுள் செல்கின்றன

---------------------------

உங்களுக்குப் புரிகிறதா
ஒரு குழந்தையின் வருகையோ
ஒரு புத்தகத்தின் வருகையோ
உங்களை
மொத்த உலகத்திடமிருந்தும்
இயன்றால்
உங்களை உங்களிடமிருந்தும்
அந்நியப்படுத்துவதை

---------------------------------

மலர்களை நுகரும்
மஞ்சள் வெயில்
நீர்தெளித்து விரட்டுகிறாள்
மலர்ச்சரம்தொடுப்பவள்

---------------------------------

ஓய்வூதியப் பணம்பெற
குடைக்குள் செல்லும்
முதியவர்
செல்ல நாய்க்குட்டிபோல்
அவர் முன்னும் பின்னும்
ஓடும்
வெயில்

--------------------------------

மரநிழலின் கனம்
தாளவில்லை
வேர்களுக்குள்
புதைந்த வெயில்

--------------------------------

இன்னும் அணியப்படாமலேயே
ஒரு புத்தாடை
அலமாரியில் இருப்பது
அவளுக்குத் தெரியாது

------------------------------

நடுநிசி விழிப்புகளில்
அவளின் பெயரழைத்து
நான் தேடியதாக
எவரேனும் கூறினாலும்
கடும் குழப்பமாய்
சிந்திக்கத் துவங்கினேன்
எந்தப் பெயர்கொண்டு
அவளை விளித்திருந்தேனென

-----------------------------
அதன் பிறகும்
அவளுக்காய்
படுக்கையில் இடம்விட்டே
உறங்கத் துவங்கியிருந்தேன்

--------------------------------

நீண்ட நேரமாய்
அவள் பாதங்களை
கைகளுக்குள் பொதிந்திருந்தேன்
உயரக்கிளை மரமல்லி
சப்தமில்லாது கழல்வதுபோல்
அவள் வெப்பம் உதிர்வதை
மிகத் துல்லியமாய்
உணர்ந்திருந்தேன்

--------------------------------