Friday, 11 October 2013

பெயல், இரவு, மருதோன்றி

அத்தனை வேகமாய்
தலையாட்டி
ஆமோதித்துக் கொண்டிருந்தது
அத்தனைப் பெரிய
வேப்பமரம்

பொழியட்டுமா
என வினவிய 
முகிலுக்கான விடையது
என
முற்றுப்புள்ளி வைத்தது
முதல் துளி

------------------------------------------

இந்த இரவைக்
கடந்து கொண்டிருக்கிறேன்
என்பது 
எனக்கு அயர்வையும்
என்னைக் கடந்து கொண்டிருப்பது
இந்த இரவிற்கு
அதிர்வையும்
தரலாம்
நன்று
நாளைய இரவும்
நாளைய நானும்
இன்றிலிருந்து
தொடங்கியாயிற்று---------------------------

----------------------------------------------------------

விரல்களிடை ஓடும்
மருதோன்றிக் கொடியெங்கும்
பூத்திட்ட
செவ்வரளி வருடிச்
செல்கிறது ஈரக்காற்று

காய்ந்து உதிரும்
கரும்பச்சையில்
நீள்மலை விளைந்த
தைலமர வாசம்
செதில் செதிலாய்
படிந்து கிடந்திட
உள்ளீடாய் நுகரலாம்
இரவின் வாசனை


------------------------------------------------------------


கார்னெட்டும் காப்பித்தூளும்

வெண்முத்து மாலைபோல்
அத்தனை 
வசீகரிப்பதில்லைதான்
கார்னெட் மாலைகள்

ஒழுங்கென்பது இல்லாது
பலவடிவப் பொடிக்கற்கள்
கோர்த்ததாய்
காப்பித்தூள்வண்ண
அந்த மாலைமேல்
ஏனத்தனைப் பிடித்தம்
முன்பற்களால் மாலைக் கடித்தபடி
யோசிப்பதில்
ஏனத்தனை மெய்மறத்தல்
உறக்கத்தில் புரள்கையில்
கனவாய் கிசுகிசுக்கும்
அந்த நெருடலில்
ஏனத்தனை ஏகாந்தம்

ஏனிந்த விழிகள்
காப்பித்தூள்வண்ணமாய்
இருக்கின்றன
என்ற
அன்றைய கேள்விக்குப்
புன்னகைத்த நொடியில்தான்
கார்னெட்கள்
உயிர்பெற்றிருக்க வேண்டும்

பேசுவதற்காய் ஒரு கவிதை

எதிரில் அமர்ந்திருந்த
ஒரு கவிதையிடம்
பேசிக் கொண்டிருந்தேன்
என் விழிகள் கடந்து
என் பின்னே விழிகள்
நிலைத்தது அக்கவிதைக்கு
தன்னிச்சையாய்
நானும் திரும்பிப் பார்க்கிறேன்
வைரங்கள் பதித்த மின்னலென
கடந்து கொண்டிருந்தது
மற்றோர் கவிதை
பேச்சை மறந்திட்ட
இக்கவிதை
இனி செப்பிடும் வரிகளில்
மின்னலின் நிழலிருக்கலாம்

கசந்து ஊறும் நெடி

பின்னிரவில் உணர்வதற்கென்றே
தோன்றும் வலியது
என்றோ
மார்புகளின் மத்தியில்
முகம் புதைத்து உறங்கிய
குழந்தையின் பாரமது
எப்போதும்
விழியசைவால் மட்டுமே
தன்னிலை உரைத்த
உரையாடலது
கீழுதட்டின் கீழ்
கசந்து ஊறும்
மருந்து நெடியென
எல்லா இரவுகளிலும்
ஊர்ந்து செல்லும்
காயத்தின் வாசமது
கொடும்வலி தாங்கிய
இரவொன்றின் இறுதியில்
அந்தப் பல்லக்கு
வாயில் வந்தது
ஆம்
முகம் புதைத்திருந்த
அன்றைய குழந்தை
மெல்லப் புரண்டு
படுக்கிறது

இரவு.. இரவு மட்டுமே

ஒவ்வொரு வீட்டின்
கதவையும்
கையிலிருக்கும் சாட்டையால்
சொடுக்கிச் செல்லும்
இந்த இரவுக்கும்
அந்த கதவுகளுக்கும்
தெரியும்
சாட்டைநுனியில்
நெளியும் காமம்

---------------------------------------------------------------------

திகைத்து திகைத்துத்
திரும்பிப் பார்த்துச்
செல்கிறது 
இந்த இரவு
இரவுகள் எப்போதுமே
இப்படிதான்
திகைப்பூட்டவும்
திகைக்கவும் மட்டுமே
செய்யும்

----------------------------------------------------------------------


தேவன் விளக்கம்

இருகைகள் விரித்து
தம்மிடம் தஞ்சம்புகச்
சொல்லி
தேவக்குமாரன்களென
தம்மைத் தாமே 
ப்ரகடனம் செய்திட்ட
அவர்கள் விழிகளில்
வழியும் கருணை
ஏன் அத்தனை
அச்சமூட்டுவதாய்
இருந்ததென
இறுதித் தீர்ப்பு நாளில்
தேவனே விளக்குவார்
என நம்புவோமாக
எது காரணி

செங்கல் உடைக்கும்
பெரும் சத்தமும்
மரம் பிளக்கும்
கொடூர இரைச்சலும்
கடந்து
தூளியில் உறங்கும்
சித்தாளின் மழலை

சலனமில்லா
நித்திரையின் படிமங்கள்
தொங்கும் பாதங்களில்
தூசு படியாதிருக்க
கிழிந்த சேலையொன்று
தூளிசுற்றிக் கட்டியிருக்க

பிற எல்லையினுள்
தவறுதலாய் விழுந்த
பந்தினைப் பொறுக்கச்
செல்வதுபோல்
அந்த ஏகாந்தக் கனவில்
ஒருமுறையேனும்
நுழைந்து அறிந்திட
வேண்டும்
இடைஞ்சலென
மதிக்கத்தக்கக் காரணிகள்
எவையெலாமென

துளிகள் பெரிதும் சிறிதுமாய்

பலநூறு சிறுசிறு
வண்ணக்குமிழிகள்
ஒருசேர
வெடிப்பதைப்போலவேதான்
முதலசைவு உணர்ந்தேன்
புன்னகைத்த பெண்மருத்துவர்
இதுதான் தொடக்கம்
என்றார்
அன்றிலிருந்து
இத்தனை அழகாய் இருக்கும்
தொடக்கங்கள் அனைத்தையும்
விரும்பத் தொடங்கியிருந்தேன்

-----------------------------------------------------------------------------------

மிகத் தெளிவாக
உணர்ந்தேயிருந்தேன்
அது கனவுதானென
உடல்முழுதும்
ஒருபக்கமாய் சரியும்
அவளை
வெகு விருப்பமாய்
கரங்களில் தாங்கிட
ஓடுகிறேன்
ஏனவள் இத்தனை
வசீகரித்து
தூரப்புள்ளியாய் மறைந்தாள்
என வினவும் முன்னரே
கனவு கலைய
விழிக்கிறேன்
இறந்துவிட்ட சமீப நொடியில்தான்
புகையாய் எவரோ
எழுந்து சென்றதைப்போல்
ஒரு பாரம்
மடியில்--------------------------------------------------------------------------------------

பெரும்பெயலுக்கான
வலு அறிகுறிகள்
இரவு வானில்
உறங்கிவிட்ட
மகவெழுப்ப சித்தமில்லை
மாறாக
ஈரக்காற்று பட்டு
மெல்ல புரண்டு படுக்கும்
இந்த வரிகளை
என்செய்வதெனவும்
தெரியவில்லை


-------------------------------------------------------------------------------------

காட்சி மறைத்திட்ட
நீர்கோத்த விழிகளுடன்
”அவ்வாறெனில்.....நான் போகவா”
எனும் அந்த இறுதிக் கேள்விக்கு
“தாராளமாய்”
எனும் அந்த அலட்சியபதில்
உரைத்த உதடுகளையும்
முத்தமிட விரும்பியவளாகத்தான்
அப்போதுமிருந்தேன்
என்பது மட்டுமே
உன்மீது மிகு இரக்கம்
கொள்ள வைக்கிறது
இப்போதும்


-------------------------------------------------------------------------------------

விளக்கில் மோதி
சிறகுமுறிந்த ஈசலொன்று
இறுதியாய் சுவாசிக்கவும்
கற்றுத்தருகிறது
முதல் வரிக்கும்
இறுதி வரிக்குமிடையே
மழையில் நனைந்து
இருள்சொட்ட நிற்குமிந்த
இரவு


----------------------------------------------------------------------------------------

கடைவாயில்
அதக்கி வைத்த
சற்றேப் பெரிய கல்கண்டின்
கூர்முனைகளுரசி
உட்பக்கக் கன்னங்களில்
நேர்ந்த காயங்களாய்
நகர்ந்தது
அந்த இரவும்


------------------------------------------------------------------------------------------

பிரயாணம்.. திட்டமிடல்..விவாகரத்து..

ஒரு ப்ரயாணத்திற்கான
திட்டமிடல் எப்படியிருக்குமென
திட்டமிட்டுப்
பெட்டிக்குள் புகுத்திட
கொஞ்சம் உடைகள்
கோடாலித் தைல புட்டி
பைநிறையச் சில்லறை
(பிச்சைக்காரர்களுக்காய்)
சில டெபிட் கார்டுகள்
வகைவகையாய் பிஸ்கட்கள்
குளிர்தாங்கும் போர்வைகள்
ஒரு ஆங்கிலப் புத்தகம்
ஸ்டேப்ரீ பாக்கெட்
நறுமணக் க்ரீம்கள்
பாப்பாவுக்கு பால்பவுடர்
நெடுநேர ஈரம் தாங்கும் டையாபர்கள்
ஷேவிங் லோஷன்
.....................................
அடுக்கியபடி இருக்கும்போதே
அலைபேசி அதிர
ஒரு குறுஞ்செய்தி
நெருங்கிய நட்பிடமிருந்து
விவாகரத்துக் கோரி
விண்ணப்பித்து விட்டாளென
நன்று
ப்ரயாணம் முழுக்க
அவளையும்
அவள் விவாகரத்தையும்
சுமக்க இயலாது
செய்தியை அழித்தாயிற்று
ப்ரயாணப் பெட்டியை
செல்பேசியில்லா அறைக்கு
மாற்றி.......
டூத்ப்ரஷ்
லைப் பாய் சோப்
குளிர்கண்ணாடி
..............................................

இலக்கமற்றவன் புன்னகை

கதவிலக்கம் தேடியலைந்த
ஊழியன் இறுதியழைப்பில்
சரியாய் கண்டடைந்து
வீடும் சேர்ந்து
சிறுபொட்டலமொன்றை
தந்து குறும்புன்னகையும்
பரிசளித்துச் செல்கிறான்
இத்தனை நேரத்திற்குப்பிறகு
இவனெப்போது
தன் வீடு அடைவான்
எனும் கேள்வியோடு
திரும்புகிறேன்
அவனில்லத்திற்கு கதவிலக்கம்
கண்டுபிடிப்பது
அத்தனைக் கடினமாயிராது போலும்
இல்லையேல்
கதவிலக்கமே இராது
இன்னும் உலரா
அவன் புன்னகை
பரிசுப்பொட்டலம் மீது

ரிஸ்வன் லவ்ஸ் சலோமி

அடர்ந்த வனம்போலும்
சூழலிடையில் 
பூட்டியக் கதவுகளின் பின்
கூப்பியக் கரங்களுடன்
அனுமன்
பல்வேறு ப்ரார்த்தனைகள்
துண்டுக்காகிதங்களில்
மாலைகளாகக் கிடக்கின்றன
கம்பிக்கதவிடையே தரிசித்து
ஆழ்ந்து ஸ்வாசித்து
மொத்தமாய் நிரப்பிக்கொண்டேன்
கருவறை வாசம்
இந்த வாசம் நுகரும்
நொடிகள் மட்டும் ஏன்
உள்ளெல்லாம் மணக்கிறது
சிறுகோயில் சுற்றிவர
சுவரெல்லாம் கிறுக்கல்கள்
தேர்வில் மதிப்பெண் பெறவும்
உலகம் உய்யவும்
காதல் கைகூடவும்
சரிதான்
அனுமனுக்கேற்ற வேலைதான்
எனினும்
கணையாழி தந்துச் சென்றனரோ
அவனிடம்
தெரியவில்லை
பளிச்சென பெரிய
எழுத்தில் மின்னிய ஒன்று
மிக வசீகரித்தது
ரிஸ்வன் லவ்ஸ் சலோமி

தூரிகையாளன்

எத்தனை நீள விரல்கள்
தூரிகையோடு ஓடும் அவை
தீட்டும் கோடுகளெல்லாம்
உடனே உருவம்பெறுவதை
வியந்து ரசித்தபடி இருந்தபோதே
தீர்க்கமாய் வந்துவிழுந்தது
அந்த வாக்கியம் உன்னிடமிருந்து
அப்போதும் நான்குவிழிகளும்
ஓவியத்திலே தான்
நிலைத்திருந்தது என்பது
இன்றுவரை இருவருக்கும்
வியப்பான ஒன்றுதானே
அன்றே உனக்கு பதிலுரைத்திருக்க
வேண்டிய நான்
ஆகப்பெரிய நகைச்சுவை கேட்டதாய்
உன்னிடமே சிரித்துவிட்டிருந்தேன்
பெருங்குரலெடுத்து
அதற்கான காரணங்கள்
நீயும் அறிந்திருந்தாய்
நீ நகைத்தாயா என்பதுகூட
தெரியாதவாறு ஓவியத்தில்
லயித்திருந்தாய்
பிரிவின் இறுதிநொடிவரை பிறகு
நீ அந்த வாக்கியம்
உதிர்க்கவேயில்லை
எதிர்பாரா சந்திப்பொன்றில்
நலம் விசாரிக்கிறாய்
நலமாய் இருப்பதாயும் சொல்கிறாய்
அந்தச் சிரிப்பிற்காய் மன்னிப்புக்கோர
எனக்குத் தெரியவில்லை
அன்று நீ நகைத்தாயா என
வினவவும் இயலவில்லை
இதோ நான் விடைபெறுகிறேன்
இப்போது நகைத்துவிடாதே
உன் தூரிகைகளுக்கு
எல்லாம் தெரியும்

விடைகள் வேண்டாம்

உங்களுக்கு விடைகள்
தெரிய வாய்ப்பில்லைதான்
கடற்கரை மணலில்
கண்ணீருடன் நின்றிருந்த
அவள் சொல்ல விரும்பியதென்ன?
ஆடைவிலகி நடைபாதையில்
போதைவிலகாது கிடந்த
தகப்பனைத் 
தோழிகளுடன் இருந்த
அவள் எப்படி கடந்து சென்றாள்?
ஒருகண உடல்பசிக்காய்
ஒழுக்கம் தவறியவள்
தூக்குக்கயிற்றை
எத்தனை முடிச்சுகளிட்டு
நெருக்கினாள்?
காதுகூசும் வசவுகளால்
அனைவரையும் சாடியபடியே
தெருவில் ஓடும் அவள்
எப்போது மனநிலை தவறினாள்?
பொட்டிட்டு மையிட்டு
அலங்கரித்த சிசுவை
பேருந்து இருக்கையில் விட்டுச்செல்ல
எந்த நொடி முடிவெடுத்தாள்?
விடைகள் தெரியாதுதானே
அவள் விடைகளுக்காய்
காத்திருப்பதில்லை
வாழவோ சாகவோ
விடைகள் மட்டுமே’
போதுமானதாய் இருப்பதில்லைதானே

வலிகடத்தி

தொண்டையின் வெகுஅருகில்
அத்தனை நீள ஊசி
இறங்கியபோது
பெரிதாய் வலியில்லை
வெண்பஞ்சு ஒத்தி சிவப்பாய் எடுத்த
செவிலி ஆதுரமாய்
நெற்றி தடவுகிறாள்
முழுவீச்சில் செயல்பட்டு
அத்தனை சீழையும்
வெளிக்கொணர முயலும்
மருத்துவர் ஏன்
இத்தனை சாந்தமாய்
இருக்கிறார்
முடிவுகளை அவர்கள்
ஆராயும் வேளை
ஏதேனும் நகைச்சுவைக்காட்சி
ரசித்து சிரித்துக்கொண்டிருப்பாள்
நாளையும் வருவாள்
அதே புன்னகையோடு
ஊசி இறங்கும்முன்
செவிலியின் கரம்பற்றி
அழுத்துவாள்
வலிகடத்தியதாய் நம்புமவளை
கண்டு காற்றில் படபடக்கும்
மருத்துவமனை நாட்காட்டி

சுலப மழை

மழைக்கவிதைஎழுதுவது
அத்தனை சுலபமில்லை
பொழியத் தொடங்கியதும்
பெருநகரப் பிற இரைச்சலில்
மழையோசை கேட்பதில்லை
மண்வாசம் வருவதற்கு
வாய்ப்பேயில்லை
எங்கோ சமையலறை மூலை
இருப்பவளை ஈரக்காற்று
உசுப்பியெழுப்பும்
தொடர்ந்தும் ரசிக்க இயலாது

உலர்ந்த துணிகளும்
காயவைத்த
மிளகாய் வற்றலும் அள்ளி
மொட்டுவிட்ட ரோஜாச்செடி
பெருமழையில் உடைந்திடாது
பாதுகாத்து
மழையில் செல்லாதவாறு
மகவைக் கட்டுப்படுத்தி
ஜன்னல் கதவுகள்
காற்றில் அறையாதிருக்க
கொக்கிகள் மாட்டும் வேளை
மழை ரசிக்கக் கிடைக்கும்
சில வரிகளைத் தூறிச் செல்லும்
எழுத எத்தனிக்கும் வேளை
எங்கிருந்தோ வரும்
தேநீர் கொதிக்கும் வாசம்
சமையலறை இட்டுச் செல்லும்
மறுபடியும்
எனினும்
ஒருகையில் தேநீர் கோப்பையும்
மறுகையில் நின்றுபோன மழையுமாய்
மழைக்கவிதை எழுதுவதுதான்
எத்தனை ரம்மியமாய்
அமைந்து விடுகிறது