Sunday 16 March 2014

பிறழ்வானவன்

அத்தனை வாகன நெரிசலிலும்
உறைத்தது
துளைக்கும் பார்வையொன்று
சிற்றுந்தின் ஜன்னல்வழி
தெரிபவனின்
இதழோர எச்சில் ஒழுக்கை
துடைத்தெடுத்தபடி
அவன் தாய்
மீசையுள்ள குழந்தைகளை
வளர்ப்பதுதான்
எத்துனைச் சிரமம்?
ஜப்பானியத் திரைப்படமொன்றில்
மனதால் பிறழ்ந்த மகனை
குறிப்பிட்ட இடைவெளிகளில்
தாசியிடம் ஒப்படைத்து
அவன் வெளியேகும்வரை
வாயிலில் காத்திருந்து
அழைத்துச் செல்லும்
தாயொருத்தி நினைவில்
நிழலாடுகிறாள்
தொடர்பேதுமின்றி இப்போது
சிற்றுந்தையும்
இந்தத் தாயையும்
கடந்து
அவன் நுழையும் உலகம்
பெயரிலா மிருகமாய்
அவனைப் புசிக்கக்
காத்திருக்கும்போதே
பச்சை விளக்கொளிர
கடந்து செல்கிறான்
எத்தனையோ பசிகளைத்
தின்றுத் தீர்த்து
எச்சிலாய் ஒழுக்குபவன்



No comments:

Post a Comment