Sunday 16 March 2014

இரவும் இன்ன பிறவும்

மலரின் இதழ்களை
வெகு சிரத்தையாய்
எண்ணி முடிக்கும் வேளை
தொடக்க எண் இதழெதுவென
குழம்பித் தவிப்பதாய்
அமைந்து விடுகிறது
சில இரவுகள்
சரிதான்
நினைவிலிருக்கும் இரவுகள்
இரவுகளாய் மட்டுமே
இருப்பதில்லைதானே

---------------------------------------------

ஒரு விடியலின்
பின்னும் தொடரும்
இந்த இரவை
என்ன செய்வது
என அறிந்திருக்கவில்லை
அந்தக்
குருட்டு ப்ளூ ஜே பறவை

------------------------------------------------

இமைகளைப் பிரிக்கவே
இயலவில்லை
செவிகளில் தெறித்தது
பெயலோசை 
நடுநிசி கடந்து பொழியும்
அந்த மழையில்
இரவின் சுகந்தம்
படுக்கையெங்கும்
மெதுவாய் விரல்கள்
தேடின இன்னும் சில விரல்களை
அன்று நீ வரவே இல்லை
கசிந்த மகரந்தங்களை
என் செய்வதென
மறுநாள் வகுப்பெடுத்தாய்
வகுப்புகளில் ஆர்வமிருப்பதில்லை
எப்போதும் என்றதும்
இனி நீ அனுப்பும்
மேகங்களையேனும்
குறைப்பதாய் உறுதி சொல்கிறாய்
இவையெல்லாம்
எதற்கான தீர்வுகள்
என அறியாமலேயே
இதோ
இன்னொரு மழையிரவு


------------------------------------------------

பூ மலர்வதைப்போலவோ
நிலவு வளர்வதைப் போலவோ
கரு உருவாவதைப்போலவோ
நிகழவில்லை அது
பூமி உரசிச் சென்ற
சின்னஞ்சிறு விண்கல்
எரிந்துமுடியும் தறுவாய்
தன்னிச்சையாய் கவர்ந்திழுத்த
காந்தத்தின் நகர்வுபோல்
மட்டுமே
நிகழ்ந்திருந்தது அது


--------------------------------------------------

நீண்ட நாட்களுக்குப்
பின்னர்
கண்ணாடிப் பாத்திரமொன்றை
உடைத்தேன் நேற்று
கைதவறி விழுந்ததாய்தான்
நம்புகிறேன்
உங்களைப் போலவே


-----------------------------------------------------

No comments:

Post a Comment