Sunday 16 March 2014

மஞ்சளின் சிவப்பு

தொடர்ந்து பல நாட்களாய்
நாசியில் தங்கியிருந்தது
மஞ்சள் மணம்
வருவோர் போவோரெல்லாம்
கன்னங்களில் அப்பியது
போக 
மிகப்பிடித்த பூத்துவாலையில்
எவரோ கைதுடைத்தும்
போயிருந்தனர்
ஆளரவமில்லா பகல்பொழுதில்
புத்தகம் திறந்து அமர்ந்தபோது
நுனிகளில் மஞ்சள் படிந்த
பத்திரிகைகள் வந்திருந்தன
அசந்தர்ப்பமாய் நினைவு வந்தது
அரவம் புகாதிருக்க
கல்லுப்பும் மஞ்சளும்
வேலி சுற்றிக் கொட்டிய நாள்
மெல்ல மெல்ல
கழுத்திலேறும் கொடியில்
மஞ்சள் பூசியது
ஒரு ஆண்மகன்தான்
நானே கண்டிருந்தேன்
இப்போது மிக நெருக்கத்தில்
இன்னும் இன்னும் மஞ்சள்
தலையணை முழுக்கவும்தான்
அந்த நாள் இரவு
வெண்சீலை தந்து
உடுத்திக் கொள்ளச் சொன்னவள்
மறுநாள் விடியலில்
தேடியது மஞ்சளின் ஊடே
கலந்திருந்த
சிவப்பை மட்டுமே

No comments:

Post a Comment