Sunday, 16 March 2014

இரவுகள்

அந்த நீரும் இந்த தீயுமாய்
பொழிந்து கொண்டிருக்கும்
இரவில்
எதைத் தேர்ந்தெடுப்பது
என்பதை
உடல் மட்டுமே
முடிவு செய்கிறது

---------------------------------------

பகலை உடைக்க
ஒரு சொல் போதும்
சொற்களால் ஆனதல்ல 
எந்த இரவும் என்பதே
பேரமைதி
தரக்கூடியதாய்
இருக்கிறதுதானே

-----------------------------------

மிகக் கடினமான
அந்தச் சொல்லின் பின்னே
எல்லா வரிகளையும்
மறைத்துவிட்டு நகர்கிறேன்
யுகமொன்று கழிந்ததும்
எல்லாம் பொடிகளாகி
இங்கு
பெரும் சொற்பாலை
உருவாகியிருப்பின்
அதன் ஒரே மென் தெய்வமாய்
அதே சொல் ஜனித்திருக்கும்

------------------------------------

சற்றுமுன்னர் நிகழ்ந்திருந்தது
அது
எங்கிருந்தோ வந்த
பெரிய பூனையொன்றால்
கழுத்து துண்டிக்கப்பட்ட
பூனைக்குட்டியை
நெகிழித்தாளில் இட்டு
புதைத்தாயிற்று

முதன்முறை
அச்சமாய் பார்க்கிறேன்
காலிடைப் புகுந்து
குழைந்து சரியும்
எல்லாப் பூனைகளையும்

பூனைக்குட்டியின் அளவு
பூஞ்சை கழுத்து
இருக்கும்வரை
இங்கு அச்சப்படவும்
துண்டிக்கப்படவும்
நிறையவே இருக்கின்றன


--------------------------------------------

No comments:

Post a Comment