Sunday, 16 March 2014

உலரா ரத்தம்

முகச்சாயலும்
விழிமணி அசைவும்
உன்னைப்போலவே
இருந்த ஒருவனை
கண்டேன் அன்று
நொடிநேர ஸ்தம்பித்தல்
ஒளிப்பிரவாகமில்லை பார்வையில்
நீயற்ற அவனை
இனியெங்கும் காணலாகாது
என்போல் ஒருத்தியை
நீயெங்கினும் கண்டால்
புன்னகைத்தேனும் செல்
அவளும் நானும் அறியாமலே


-----------------------------------------------------

செயற்கை ஈர்ப்புகளேதும்
இருக்கவில்லைதான்
அல்லிமலரொத்த மென்மேனியோடு
காவியேறிய பற்களால்
சிரித்தனள் ஆதிமகள்
கிழங்கு அகழவும்
காட்டெருமை தோலுரிக்கவும்
தனித்திறனுடையாள்
இருமரங்களிடையே
இழுத்துக்கட்டிய கயிறுகளில்
லாவகமாய் உறங்கினள்
உறவும் அதில்தான்
நாணத்துடன் செப்பினள்
நிறைமாத கர்ப்பிணியொருத்தி
குத்துகாலிட்ட நிலையில்
வழுவழுப்பாய் வெளியேற்றிய
சிசுவை அதே ஈரத்தோடு
முகத்தின் நேரே நீட்டினள்
சிறு உளிகளால்
உடம்பெல்லாம் செதுக்கிக்கொண்டு
முதலையின் கடுந்தோலுடை
ஆண்களே வேண்டுமென்றனள்
சிறுமகவின் விரல்பற்றி
நாட்டிற்குள் வந்தனள்
முதன்முறை உடுத்தினள்
முதன்முறை அஞ்சினள்
மனிதர் கண்டு

எவருமில்லா சிறுபொழுதில்
வனம் புகுந்தனள்
முட்செடியொன்றில் சிக்கியிருந்த
அவள் உடைகளை
கண்டெடுக்க அப்போதும்
நான் விரும்பவில்லை



-------------------------------------------------------
முன்னிருக்கையில் இருந்தவர்தான்
முதலில் கண்டார்
நடுசாலையில் படுத்திருந்தது
அந்த பூனை
மிரட்சி தெரிகிறது
அவர் அலறியதும்தான்
நானும் பார்த்தேன்
நாய்களும் பாம்புகளும்
கண்டிருக்கிறேன் நெடுஞ்சாலைகளில்
சிதைந்த உடல்களாய்
பூனை எப்படி?
எட்டு வாழ்வுகள் உண்டே!
சுற்றிலும் வாகனங்கள்
பூனையால் நகரவும் முடியவில்லை
கதவு திறந்து இறங்குவதெப்படி
தூக்க வந்த அந்த இளைஞனின்
கரங்களைக் கீறிவிட்டு
ஒருகால் விந்தியபடி
எங்கோ ஓடி ஒளிந்தது

சாலையில் சிலதுளி உலரா ரத்தம்
சென்ற வாரம் கண்ணாடிசில்லுகள்
கண்டிருந்தேன் இதே இடத்தில்
அப்போது உறைந்திருந்த ரத்தம்
எதனுடையது
அல்லது
எவருடையது

பூனை அறிந்திருக்கும்


--------------------------------------------------

No comments:

Post a Comment