Sunday, 16 March 2014

கதம்பம்

காலத்தைக் கருவாக்கித்
தருபவன்
மெல்ல மெல்ல முன்னேறி
இறுதி நொடியில்
குறு ஊசிபட்ட பலூனாய்
வெடித்துச் சிதறும்வேளை
உடலெங்கும்
முந்நூற்றி சொச்ச நாட்களாய்
பூத்துக் குலுங்குகின்றன
கழிவிரக்கமும் நிராகரிப்பும்
தளும்பும் நிமிடங்கள்
இனி கசடுகளாய்
வழிந்தோடியும்விடும்
ஒரு அறையிலிருந்து
மற்றோர் அறைக்குப்
பெயர்தல் போலே
ஆண்டுகளைக்
கடந்து கொண்டிருந்தபோதும்
தேங்கிய நினைவுகளை
புத்தம்புது அறைமூலைகளில்
மறைத்து வைக்கவும்
மறப்பதில்லை
ஒவ்வோர் வருடமும்

------------------------------

மொமொடாரொவின் துக்கம்
நதியெங்கும் வழிந்தோடியது
பீச் பழம் பிளந்து
ஜனித்த மற்றுமோர்
ஜீவன் தேடி அலைந்தவனின்
விழிகள் பழுத்த பீச்
போல் மாறவேயில்லை
பெற்றோரும் ஊராரும்
அறிய முடியா வேதனை
பீச்மரச் சருகுகளின்
ஓலங்களாய் மாறியிருந்தன
இவனழித்தப் பூதங்களின்
உதிரங்களிலும்
பூதங்கள் முளைத்தபோதும்
பீச் காடுகளில்
இவன் தேடியலைந்த
அந்த பீச்
ஏனோ கிடைக்கவேயில்லை
குளிர்நிலவு நிரம்பிய
அன்றைய இரவின் கனவில்
பீச் வண்ணச் சிறகுகளுடன்
அவளைக் கண்டதன் பிறகு
மொமொடாரொவை
எவருமே
எங்குமே கண்டதில்லை
சிறகுகளைத் துரத்திச்
சென்றவன்
பீச் மர வேரொன்றில்
இடறி விழுந்ததாய்
நீலப்பறவையொன்று
அரற்றிச் சென்றது
பெருவனத்தின் மூலையில்
அவனுள்ளிருந்து எழுந்த
பீச் மரத்தின் கனிகள்
அதன் பின்னர்
நதிகளில் விழுவதேயில்லை

--------------------------------

இத்தனைப் பெரிய கப்பலைச்
செலுத்துபவள்
டால்பின்களை ரசிக்கலாகாதாம்
ஆணையிடப்பட்டிருந்தது
கரங்கள் பற்றியிருக்கும்
சுக்கானில்
உப்பின் ஈரம் எப்போதும்போல்
தலைக்கு மேல் கடந்த
கடற்பறவையிட்ட எச்சத்தில்
கொஞ்சமாய் நில வாசனையும்
முழுநிலவின்மேல் காமுற்று
வீரியமாய் எழுந்த அலைகள்
கடல் மேலே வீழ்வதற்குள்
இவளும் அழுது முடித்திருந்தாள்
இந்தத் தீவுகளிலேனும்
மனிதம் பிழைத்திருக்குமோ
எனக் கூவியவளிடம்
எந்தத் தீவும் பதிலுரைக்கவில்லைதாம்
லேசாய் பிடி தளர்த்துகிறாள்
கடலில் இறங்கி நடக்கிறாள்
சுக்கான் தயங்கித் தயங்கிச்
சுழல்கிறது விசும்பல்களூடே
இனி இவர்கள் சந்திக்கவே
போவதில்லை
பயணிகள் அனைவரும்
ஆழ் நித்திரையில்
என்றும்போல்

--------------------------------

கொஞ்சமாய் கானல்நீரும்
நிறைய வெயிலும்
அள்ளியள்ளிப் பருகியவனின்
பாதங்களில் கொப்புளங்கள்
இதழிதழாய் பூத்திருந்தன
இரைதின்றக் கருநாகமென
புரளவியலாதிருந்த
நெடுஞ்சாலையில்
புழுதியாய் கிடந்திட
சலித்தவனில்லை
ஏதேனும் முணுமுணுக்கும்
வாயில் சத்தமாய் வெளிவருபவை
எல்லாமே துர்சொற்கள்தாம்
சித்தம் கலங்கியவனாயிருப்பினும்
வன்புணர்வுகள் செய்ததாய்
செய்திகளேதுமில்லை
தொலைதூரத்திலிருந்த
ஒற்றைமலையிலிருந்து
தனித்து இறங்கிவந்தவன்போலே
பிரிமயிரும் கெட்டிச்சதையுமாய்
இருந்தவனின்
இரவுநேர இருப்புகள் பற்றி
அறிந்தோர் எவருமில்லை
பெயரறியாப் பெருவாகனத்தில்
சிக்கிக் கூழாகிக் கிடந்தவனின்
வலது மணிக்கட்டில்
காற்றில் துடிக்கும் கருப்புக்கயிறு
முன் தின சாராயப் படையலில்
களித்திருந்த
மலைதெய்வத்தின் வருகை
தீர்க்கமாய் தெரிகிறது
அவனோடு சேர்த்துத்
தன் காப்புக்கயிறையும்
கொண்டுச் செல்லவே

----------------------------

No comments:

Post a Comment