Sunday, 16 March 2014

துளிகள்

மிகப்பெரிய சொர்ணத்தட்டின்
பின்னால்
அந்தப் பேருண்மை
இருப்பதாய் 
சொல்லிச் சென்றனர்
வெண்சாம்பல்பூத்த
வெளிர்மேனியுடையோர்
இதோ எதிர்நிற்கும்
இந்த மலைமட்டுமே
எனக்கான உண்மையென
உரக்கச் சொல்வதற்குள்
சென்றுவிட்டனர்
சொர்ணத்தட்டின் விளிம்புகள்
மலைமுகடுகள் போலவே
இருப்பதாய் அவர்கள்
பேசிச் சென்றனர் என மட்டும்
மலை சொன்னது
என்னிடம்


----------------------------------------------------

ஒரு மழைபோல்
உங்களைக்
கடந்து சென்று
விடத்தான் முயல்கிறது
இந்த மழை
விழித்தெழுந்ததும்
தேங்கிய நீர்கொண்டு
அது பொழிய மறுத்த
மேகங்களை
உங்களால்
தீர்மானித்துவிட
இயலாதென்பது
அதற்கும் தெரிந்தே
இருந்ததாலும்
ஒரு மழைபோல்
உங்களைக்
கடந்து சென்று
கொண்டிருக்கிறது
எல்லா மழையும்


-----------------------------------------------------

அந்த குகைக்கூரையில்
எந்நொடியும் விழுந்துவிடும்
வெண்பனிப்பாளம் சொட்டி
நாநுனியில் விழும்
சில் துளி
இதே உணர்வுதான்
இருந்திருக்கும்
பாளம் பெயர்ந்து
உச்சி பிளந்திருப்பினும்


------------------------------------------------------
சந்தியா பாஷையென
வடிந்து கொண்டிருந்தது
குருவிகளின் ராணி குரல்
ஒற்றைச் “சிர்ப்”பில்
இலக்கணங்கள் பிரித்து
அர்த்தம் புகுவதற்குள்
அவன் அஸ்தமனமாகியிருந்தான்


-----------------------------------------------------

No comments:

Post a Comment