Sunday, 16 March 2014

அவள்

கொஞ்சம் இசை உள்ளே
கொள்ளை மழை வெளியே
நனைதலில்லை
சிலிர்ப்புமில்லை
எங்கும் நெரிசல்
நிறைய சகதி
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
மழைமீறிக் குளிர்செய்யும்
உள்கட்டமைக்கபட்டக் கருவி
நெளிநீரோடும் ஜன்னல்வழித் தெரியும்
அந்த இருசக்கரவாகனக்காரன்
கால்சராயும் மேல்சட்டையும்
ஓரங்களில் நீர்சொட்டுதல்களுடன்
சொல்ல வேண்டும் அவனிடம்
அவனிருக்கும் மழை
அவன் மழை மட்டுமே


--------------------------------------------------

எவரிடமும் கூடுதலாய்
எதுவுமே இல்லாத
அனல் பொழுதது
நடுங்கும் கால்கள்
பீதியென செவ்வரியோடிய விழிகள்
வியர்த்து ஜில்லிட்ட கரங்கள் பற்றி
அவளைத் தலைமையாசிரியர்
அறைவாயிலில்
நான் தான் நிறுத்தினேன்
கடுமை மட்டுமே
தின்றுவளர்ந்த வதனம்
அவருக்கு
வசைச்சொற்களால் புனிதப்படுத்தி
அரைநாள் விடுப்பு தந்தார்

அடுத்த முறையேனும்
திகதியை நினைவுகொள்ளென
மட்டுமே சொல்ல முடிந்தது
என்னால்
சொற்களின் கறைகள்
அவள் மட்டும் அறிவாள்



--------------------------------------------


செயற்கை சுவாசக் குழல்கள்
திரவச்சொட்டுகள் வீழும்
கண்ணாடிக்குடுவை
இவைகளோடே
அடைகாப்புக்கருவிக்குள்
எடைகுறைவாய் ஜனித்த
அவளின் சிசு
அறுவை சிகிச்சையில்
மகப்பேறு பெற்று
சுயநினைவின்றி கிடப்பவளின்
வீறிடும் சிசுவணைத்து
ஊட்டும் அமுதில்
உப்புச்சுவை கலந்ததின்
மர்மத்துள் முயங்கிக்கிடப்பது
பிரபஞ்சத்தின் எது



---------------------------------------------------


அந்த அலுவலகத்தை
எப்போதோ இடம் மாற்றியிருந்தனர்
அதன் வெளியூர் கிளையில்
அவனிருக்கலாம்
அலுவலக வெள்ளிவிழாவில்
சந்திக்க நேர்ந்தது அவர்கள்
இருபது வருடங்களுக்கு முன்னர்
கண்ட அதே
அலைபாயும் விழிகள்
இருவரையும் ஒன்றுசேர
கிண்டல்செய்யும்
வாணியக்கா இப்போதில்லை
நிலம்நோக்கி
எதையோ தேடியபடி இருந்தான்
அன்று தவறவிட்ட சொல்லோ
காலமோ அங்கிருப்பதற்கில்லை
அறிந்தும் தேடினான்
கணவனின் வாகன ஒலிப்பானொலி
கேட்டு நகர்கிறாள்
இறுக மூடிய விரல்களின்
இடுக்கில் சிக்கியிருந்த
அவன் தொலைத்தச் சொற்கள்
வழிநெடுக புலம்புவதை
அவள் பொருட்படுத்துவதில்லை
எப்போதும்


---------------------------------------------------




















No comments:

Post a Comment