Sunday, 16 March 2014

பூக்காமம்

மிக அரிய ஒற்றுமையொன்று
அவர்களிடம் மட்டுமே
காண்கிறேன்
நாசிக்கும் பிரக்ஞைக்கும்
இருக்கும் தொடர்பை
மையமாய் சந்தேகிக்க
வைக்கிறார்கள்தான்
புழுக்கள் நெளியும்
நிணமொழுகும் பிணங்களோடு
பூட்டிய அறைகளுக்குள்
எப்படி இருந்தனர்
அத்தனை நாட்கள்?
மூடுபனி பிரதாப்பும்
நெள் ஜோடிபாஸ்டரும்
உணர்ந்ததை எப்போதும்
நான் அறியப்போவதில்லை
இறந்த அன்றே
மகவை எரித்தவள் நான்
செய்தித்தாள் புரட்டுகையில்
புத்தியில் அறைந்த செய்தியாய்
சென்றவாரம் இறந்திருந்த
தந்தையின் சவத்துடன்
ஐந்து நாட்கள் உடனிருந்த
அவர்
இறந்த உடலுக்கு
மருந்துக்களிம்புகள் பூசியிருந்தார்
புரிபடுகிறது
பிரக்ஞைகள் தேவையற்ற வாசங்களை
கண்டுணர முடிவது
இவர்களால் மட்டுமே

----------------------------------

நுனிப்பாதம் தொடங்கி
உச்சியடையும்
முத்தப் பயணம்
எங்கு வேண்டினும்
வழி தவறலாம்
என்பது மட்டுமே
அதிமுக்கிய
ஆட்ட விதியென உரைத்தவன்
மலையேறும் உடுப்புகளை
மறந்து வந்திருப்பது
சொல்லப்படாத
ஆட்டவிதி

------------------------------------

தாமரை மொக்குகளையும்
மகரந்தத்தேன் வாசத்தையும்
நினைவு படுத்தும்
மோகங்களில்
கரைகடக்கும் அலைகள்
மட்டுமே
கரை சேர்கின்றன

--------------------------------------

இங்கிருந்து அங்கு
கடத்துவதற்குள்
இடையூறுகள்
இல்லையேல்
இலக்கடைவதில்லை
அத்தனைப் பாரம்கொண்ட
பூக்காமம்

-------------------------------------

இத்தனைக்
குழைவான முத்தங்களிடுபவன்
அத்தனைக் காத்திரமாய்
ஒரு அணைப்பும் தந்து
முடித்து வைக்கிறான்
அல்லது
துவக்கி வைக்கிறான்

-------------------------------------

கன்னமும் கழுத்தோரமும்
பற்தடங்களால்
நிரம்பிய நாட்களை
எண்ணி எண்ணி
நிகழ்சமன் செய்கிறது
எலும்பு துருத்திய
முதுமை

------------------------------------

No comments:

Post a Comment