Sunday, 16 March 2014

துரோகச் செவ்வரளி

நீருக்குள் உறங்கும்
மழலைபோலக் கிடந்த
கூழாங்கற்களின் மென்மையோடேதான்
துவங்கியது அந்தச் சொப்பனம்
மெல்லிருட்டில்
பிணைந்திருந்த உடல்களில்
ஒன்று மிகப்பரிச்சயமாய்
இருந்தது
மற்றொன்றிலிருந்து
கந்தகமணம் வழிந்தபோது
கனவின் நிறம்
செவ்வரளியாய் மலர
அவள் முகமிருந்தப் பொழுதை
மிக நைச்சியமாய்
இடம் பெயர்த்திருந்தனர் அவ்விருவரும்
சிலீர் குளிர்ச்சியாய்
தண்டவாளம் பின்கழுத்தில்
உறைத்தவளின்
இறுதி உறக்கத்தில் விரிந்த
கனவிலும்
துரோக முடிச்சுகள்
அவிழ்ந்து அவிழ்ந்து
இறுகியபடியே இருக்க
விடிகாலை ரயிலின்
முதல் கூவலில்
அதே செவ்வரளி மலர்ந்திருந்தது
கூடுதல் சிவப்பாய்

No comments:

Post a Comment