Sunday, 16 March 2014

மழையிரவுத் துளிகள்

எந்த வனத்தின் 
மழையோ இது
அறியேனில்லை
என் வீதியெங்கும்
பொழிந்தலைகிறது
வேர்கள் வேண்டி
உறங்கும் குழந்தை
எழுப்பி
மழை காட்டும்
தாயைப்போல்
மழைக்கு
எனைக் காட்டி
நிற்கிறது குளிரிரவு


--------------------------------

மழையிரவுகள்
புனிதமானவை
ஆம்
வெள்ளை ஜானி
இறந்தபோது
கழுத்துக்கட்டி உடைந்து
சீழ் ஒழுகியபோது
உயிர்பிளந்த சொல்லொன்று
ஜனித்தபோது
துரோகத்தின் 
இறுதித்துளி வீழ்ந்தபோது
அடக்கிய கண்ணீர்
சிவப்பாய் படுக்கை
நனைத்தபோது
ஏந்தியக் குழவி
விழிநிலைகுத்தி
வெறித்தபோது
எங்கோ
மழை பெய்ததுதான்
இரவையும் தேடி


--------------------------------------
வயது முதிர்ந்த
பரிசாரகன்
இடுங்கிய விழிகளால்
கேள்விகள் உதிர்ப்பதுபோல்
ஈர இலைகள்வழி
நிலமெங்கும்
சுயமற்று சிதறிக்கிடக்கும்
மழைக்குப் பின்னான
இந்த வெயில்


------------------------------------

திட்டுத் திட்டாய் துருவேறிய
இரும்புத் தடியோ
உருகா நீள மெழுகோ
எண்ணெய் புட்டியோ
தாயின் உயிர்நிலையோ
பெண்களின் உதிரமோ
நினைவிற்கு வருமா
அவர்களுக்கு

கயிறு இறுக்கும்
அந்த தேவநொடியில்


--------------------------------
மிகத் தற்செயலாய்தான்
அந்தப் புகைப்படத்தைக்
காண்கிறேன்
அதனினும் இயல்பாய்
அந்தப் பெயரைக்
கேட்கிறேன்
அதிவேகமாய் விழிகள்
நகர்த்துகிறேன்
உலகின் ஒலியெலாம்
அழிந்திட வேண்டுகிறேன்
இனி எனக்காய்
ஆகும் அனைத்திற்கும்
நான் மட்டுமே
காரணியில்லை
உனக்கான காரணிகளில்
இனியெப்போதும்
நான் இடம்பெறப்
போவதுமில்லை


-----------------------------------

தொடர்ந்து கவனம்
கலைத்துப் பொழியும்
இந்த வானம்
பரல்தெறிப்பாய்
பரவும் ஓசையோடு
துளிகள் சங்கமித்து
பெருக்கெடுத்து ஓடினும்
கழிவுநீரோடை ஓரம்
கசகசத்த மண்சுவரும்
ஒழுகும் கூரையுமாய்
சிறுகுடிசைக்குள்
வாராத வாடிக்கையாளனுக்காய்
காத்திருந்து காத்திருந்து
பசியால் சுருண்டுமிருந்த
புதின நாயகி மட்டும்
விழிமுன் வருவதுதான்
எத்தனைக் கொடிய
நினைவு மீட்டல்



---------------------------------------


புழுக்கமும் நெரிசலும்
வியர்வை தோய்ந்த
வாசனைதிரவிய நெடியும்
கடந்து
பின்னங்கழுத்தில்
மெலிதாய் ஊதி
தன் இருப்பை
நிரூபிக்கும் அவனுக்கும்
தெரியும்
எழும்ப மறுக்கும்
உணர்வுகள்
வரமாகலாம்
என்றேனும்


---------------------------------------


புதிதாய் கட்டிய
வீட்டினுள்
தயங்கித் தயங்கி
நுழையும் இரவிடம்
எவ்வாறு சொல்வது
இருளலைகளுடன் வெளியேற
பின்வாசல் இல்லா
இல்லமதுவென


---------------------------------------

நானும்
இரவும்
மழையும்
கூடித் தனித்திருக்கும்
விசித்திர ஏகாந்தமிது
சன்னமாய் ஒலிக்கும்
எதுவும் கூட
வேண்டாமிப்போது
ப்ரத்தியேகமாய்
தனிச்செய்தியொலி
வேண்டவே வேண்டாம்


-----------------------------------------

கண்ணாடியோ
புகைப்படமோ
அகன்ற வாளி
நிரம்பிய நீரோ
மற்றோர் விழியோ
இல்லாத அறையொன்றில்
வெகுநேரமாய்
நின்றுகொண்டிருக்கிறேன்
என்னை நானே
பார்த்தபடி
அறையிலிருந்து
முதலில் யார் வெளியேறுவது
அறியவில்லை
இருவருமே


-----------------------------------------

ஜன்னல்வழி
இருகரம் நீட்டி
கொஞ்சமாய்
மழை ஏந்தி
உற்று நோக்கினேன்
வழிமறந்த
பொழிமுகிலொன்றாய்
வீற்றிருந்தது
பெருமழை
உள்ளங்கைச் சூட்டினுள்

5051Like ·  · Promote · 

------------------------------------மழையோடு சேர்ந்து
பொழிந்து 
போகவேண்டும்
இரவொடு கூடி
அமிழ்ந்து
போகவேண்டும்
இல்லையேல்
மழையிரவாய்
முடிந்தேனும்
போகவேண்டும்

--------------------------------------------


தாய்மை

பலநூறு சிறுசிறு
வண்ணக்குமிழிகள்
ஒருசேர
வெடிப்பதைப்போலவேதான்
முதலசைவு உணர்ந்தேன்
புன்னகைத்த பெண்மருத்துவர்
இதுதான் தொடக்கம்
என்றார்
அன்றிலிருந்து
இத்தனை அழகாய் இருக்கும்
தொடக்கங்கள் அனைத்தையும்
விரும்பத் தொடங்கியிருந்தேன்

-------------------------------------------------

மிகத் தெளிவாக
உணர்ந்தேயிருந்தேன்
அது கனவுதானென
உடல்முழுதும்
ஒருபக்கமாய் சரியும்
அவளை
வெகு விருப்பமாய்
கரங்களில் தாங்கிட
ஓடுகிறேன்
ஏனவள் இத்தனை
வசீகரித்து
தூரப்புள்ளியாய் மறைந்தாள்
என வினவும் முன்னரே
கனவு கலைய
விழிக்கிறேன்
இறந்துவிட்ட சமீப நொடியில்தான்
புகையாய் எவரோ
எழுந்து சென்றதைப்போல்
ஒரு பாரம்
மடியில்


---------------------------------------------

காட்சி மறைத்திட்ட
நீர்கோத்த விழிகளுடன்
”அவ்வாறெனில்.....நான் போகவா”
எனும் அந்த இறுதிக் கேள்விக்கு
“தாராளமாய்”
எனும் அந்த அலட்சியபதில்
உரைத்த உதடுகளையும்
முத்தமிட விரும்பியவளாகத்தான்
அப்போதுமிருந்தேன்
என்பது மட்டுமே
உன்மீது மிகு இரக்கம்
கொள்ள வைக்கிறது
இப்போதும்

வலி

சந்தைக்காகாதப் பொருளென
ஒதுக்கப்பட்டப் பிறகு
மூலையில் அமர்ந்து
தனதெல்லாம் 
அந்தப் புத்தகத்திடம் தந்து
மெய்மறந்துக் கிடக்கும்
அவளை 
நானறிந்த அளவிற்கு
அவர்கள் அறிந்ததில்லை
நல்லது
அவர்கள் அறியவில்லை

------------------------------------------
தொண்டையின் வெகுஅருகில்
அத்தனை நீள ஊசி
இறங்கியபோது
பெரிதாய் வலியில்லை
வெண்பஞ்சு ஒத்தி சிவப்பாய் எடுத்த
செவிலி ஆதுரமாய்
நெற்றி தடவுகிறாள்
முழுவீச்சில் செயல்பட்டு
அத்தனை சீழையும்
வெளிக்கொணர முயலும்
மருத்துவர் ஏன்
இத்தனை சாந்தமாய்
இருக்கிறார்
முடிவுகளை அவர்கள்
ஆராயும் வேளை
ஏதேனும் நகைச்சுவைக்காட்சி
ரசித்து சிரித்துக்கொண்டிருப்பாள்
நாளையும் வருவாள்
அதே புன்னகையோடு
ஊசி இறங்கும்முன்
செவிலியின் கரம்பற்றி
அழுத்துவாள்
வலிகடத்தியதாய் நம்புமவளை
கண்டு காற்றில் படபடக்கும்
மருத்துவமனை நாட்காட்டி


தூரிகை அறியும்

எத்தனை நீள விரல்கள்
தூரிகையோடு ஓடும் அவை
தீட்டும் கோடுகளெல்லாம்
உடனே உருவம்பெறுவதை
வியந்து ரசித்தபடி இருந்தபோதே
தீர்க்கமாய் வந்துவிழுந்தது
அந்த வாக்கியம் உன்னிடமிருந்து
அப்போதும் நான்குவிழிகளும்
ஓவியத்திலே தான்
நிலைத்திருந்தது என்பது
இன்றுவரை இருவருக்கும்
வியப்பான ஒன்றுதானே
அன்றே உனக்கு பதிலுரைத்திருக்க
வேண்டிய நான்
ஆகப்பெரிய நகைச்சுவை கேட்டதாய்
உன்னிடமே சிரித்துவிட்டிருந்தேன்
பெருங்குரலெடுத்து
அதற்கான காரணங்கள்
நீயும் அறிந்திருந்தாய்
நீ நகைத்தாயா என்பதுகூட
தெரியாதவாறு ஓவியத்தில்
லயித்திருந்தாய்
பிரிவின் இறுதிநொடிவரை பிறகு
நீ அந்த வாக்கியம்
உதிர்க்கவேயில்லை
எதிர்பாரா சந்திப்பொன்றில்
நலம் விசாரிக்கிறாய்
நலமாய் இருப்பதாயும் சொல்கிறாய்
அந்தச் சிரிப்பிற்காய் மன்னிப்புக்கோர
எனக்குத் தெரியவில்லை
அன்று நீ நகைத்தாயா என
வினவவும் இயலவில்லை
இதோ நான் விடைபெறுகிறேன்
இப்போது நகைத்துவிடாதே
உன் தூரிகைகளுக்கு
எல்லாம் தெரியும்

விடை தெரியுமா

உங்களுக்கு விடைகள்
தெரிய வாய்ப்பில்லைதான்
கடற்கரை மணலில்
கண்ணீருடன் நின்றிருந்த
அவள் சொல்ல விரும்பியதென்ன?
ஆடைவிலகி நடைபாதையில்
போதைவிலகாது கிடந்த
தகப்பனைத் 
தோழிகளுடன் இருந்த
அவள் எப்படி கடந்து சென்றாள்?
ஒருகண உடல்பசிக்காய்
ஒழுக்கம் தவறியவள்
தூக்குக்கயிற்றை
எத்தனை முடிச்சுகளிட்டு
நெருக்கினாள்?
காதுகூசும் வசவுகளால்
அனைவரையும் சாடியபடியே
தெருவில் ஓடும் அவள்
எப்போது மனநிலை தவறினாள்?
பொட்டிட்டு மையிட்டு
அலங்கரித்த சிசுவை
பேருந்து இருக்கையில் விட்டுச்செல்ல
எந்த நொடி முடிவெடுத்தாள்?
விடைகள் தெரியாதுதானே
அவள் விடைகளுக்காய்
காத்திருப்பதில்லை
வாழவோ சாகவோ
விடைகள் மட்டுமே’
போதுமானதாய் இருப்பதில்லைதானே

சிகை

ஐந்தாம் வகுப்புவரை
பாப் கட் தான் வைத்திருந்தாள் 
பெண்ணென்றால் கூந்தல்
என்பதுவும் குறியீடு
என உணர்ந்த தாய்
மெனெக்கெடத் தொடங்கியதும்
அடர்பச்சை மூலிகை எண்ணெயும்
வெட்டிவேர் மிதக்கும்
நாட்டுத் தேங்காயெண்ணையும்
மாதாந்திர மளிகைப்பட்டியலில்
வந்து சேர்ந்தன
பேனும் ஈரும் மண்டாதிருக்க
கற்பூரமிட்டுக் காய்ச்சிய
நல்லெண்ணைக் குளியலுக்கு முன்னர்
வேப்பங்கொழுந்து ஊறல்
அமாவாசை முடிந்த
மூன்றாம் நாள்
நுனிமுடி கத்தரித்தல்
சோற்றுக்கஞ்சியிலிட்ட சிகைக்காய்த்தூளிட்டு
துணி துவைப்பதுபோல்
முதுகில் வைத்தே அலசுவாள்
முட்டை கலந்த
ஹாலோ ஷாம்பூதான்
வெளியூர் சென்று விட்டால்
ஈரம்போக உலர்த்துகையில்
யார்கண்ணும் பட விடமாட்டாள்
டாம்ப்கால் நடத்திய
கல்லூரிப் போட்டிகளிலும்
பங்குபெற்றவளில்லை

உச்சவலியில் அலறியவள்
ஏனோ வேண்டிக்கொண்டாள்
சுகமாய் பிரசவம் உண்டாக்கினால்
முடிகாணிக்கை தருவதாய்
மலைக்கோவில் முருகனுக்கு
அம்மாவும் தடுக்கவில்லை
நேற்று ஸ்பரிசித்த சிசுவின்
உதிர வாசமூறிய
மென்சிகைத் தடவியவள்
தன்னிலை மறந்து
தொலைந்துபோனாள்
இதுவரைக் கண்டிராத
கரும் வனத்தினுள்

அவள்

கொஞ்சம் இசை உள்ளே
கொள்ளை மழை வெளியே
நனைதலில்லை
சிலிர்ப்புமில்லை
எங்கும் நெரிசல்
நிறைய சகதி
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
மழைமீறிக் குளிர்செய்யும்
உள்கட்டமைக்கபட்டக் கருவி
நெளிநீரோடும் ஜன்னல்வழித் தெரியும்
அந்த இருசக்கரவாகனக்காரன்
கால்சராயும் மேல்சட்டையும்
ஓரங்களில் நீர்சொட்டுதல்களுடன்
சொல்ல வேண்டும் அவனிடம்
அவனிருக்கும் மழை
அவன் மழை மட்டுமே


--------------------------------------------------

எவரிடமும் கூடுதலாய்
எதுவுமே இல்லாத
அனல் பொழுதது
நடுங்கும் கால்கள்
பீதியென செவ்வரியோடிய விழிகள்
வியர்த்து ஜில்லிட்ட கரங்கள் பற்றி
அவளைத் தலைமையாசிரியர்
அறைவாயிலில்
நான் தான் நிறுத்தினேன்
கடுமை மட்டுமே
தின்றுவளர்ந்த வதனம்
அவருக்கு
வசைச்சொற்களால் புனிதப்படுத்தி
அரைநாள் விடுப்பு தந்தார்

அடுத்த முறையேனும்
திகதியை நினைவுகொள்ளென
மட்டுமே சொல்ல முடிந்தது
என்னால்
சொற்களின் கறைகள்
அவள் மட்டும் அறிவாள்



--------------------------------------------


செயற்கை சுவாசக் குழல்கள்
திரவச்சொட்டுகள் வீழும்
கண்ணாடிக்குடுவை
இவைகளோடே
அடைகாப்புக்கருவிக்குள்
எடைகுறைவாய் ஜனித்த
அவளின் சிசு
அறுவை சிகிச்சையில்
மகப்பேறு பெற்று
சுயநினைவின்றி கிடப்பவளின்
வீறிடும் சிசுவணைத்து
ஊட்டும் அமுதில்
உப்புச்சுவை கலந்ததின்
மர்மத்துள் முயங்கிக்கிடப்பது
பிரபஞ்சத்தின் எது



---------------------------------------------------


அந்த அலுவலகத்தை
எப்போதோ இடம் மாற்றியிருந்தனர்
அதன் வெளியூர் கிளையில்
அவனிருக்கலாம்
அலுவலக வெள்ளிவிழாவில்
சந்திக்க நேர்ந்தது அவர்கள்
இருபது வருடங்களுக்கு முன்னர்
கண்ட அதே
அலைபாயும் விழிகள்
இருவரையும் ஒன்றுசேர
கிண்டல்செய்யும்
வாணியக்கா இப்போதில்லை
நிலம்நோக்கி
எதையோ தேடியபடி இருந்தான்
அன்று தவறவிட்ட சொல்லோ
காலமோ அங்கிருப்பதற்கில்லை
அறிந்தும் தேடினான்
கணவனின் வாகன ஒலிப்பானொலி
கேட்டு நகர்கிறாள்
இறுக மூடிய விரல்களின்
இடுக்கில் சிக்கியிருந்த
அவன் தொலைத்தச் சொற்கள்
வழிநெடுக புலம்புவதை
அவள் பொருட்படுத்துவதில்லை
எப்போதும்


---------------------------------------------------




















சிவந்தவன்

சிவப்பான மணமகன்தான்
வேண்டுமென்பது மட்டுமே
அவள் ஒரே கோரிக்கை
அவனாகியவனது 
முன்பக்கம் உள்வாங்கிய சிகை
குச்சிக்குச்சி கை கால்கள்
பியர் உபய தொப்பை
பெண்களென்றால் கிறக்கம்
(வயது தேவையா என்ன)
கத்தாழை நெடி
எதுவும் பொருட்டில்லை அவளுக்கு
நிறைய பவுனும்
ஒரு காரும் போதும்
அவளின் பொறியியல் பட்டம்
பிறந்தநாள்தோறும் ஆதரவற்றோருக்கு
அவளிடும் அன்னதானம்
அடிப்பிரதட்சணம்
எண்ணற்ற விரதங்கள்
அல்சர் வந்த காரணங்கள்
நிறைய ஃபேசியல்கள்
எல்லாம் தந்தது அவனை
கார்வண்ணத் தகப்பனே
நிறஞ்சொல்லித் திட்டிய நொடிதான்
இத்தனை இறுகியிருக்க
வேண்டுமவள்

தீ நதி

அத்தனை அரூபமாய்
பாய்ந்துகொண்டிருந்தது
அந்த நீல நதி
அவர்களிடையே

எத்தனை தொலைவையும்
கடந்திடக் கூடியது
புகையெழும்பி அனல்
சொன்னது 

அவன் வெப்பமெல்லாம்
வழிந்தோடி
அவள் கரைசேரும்
குளிர்விப்பது மட்டுமே
அவள் தொழிலாகும்

கெட்டித்து கெட்டித்து
மலையாகிக் கொண்டிருந்தான்
உள்ளுக்குள் தணல் சுமந்து

இதழ் படிந்த ஈரம்
ஒற்றியெடுத்த விரல்களில்
துளி தீ

நதியில் மூழ்க
உடைகள் எரிந்த உடல்கள்
மட்டுமே தேவையாய் இருந்தது
நதிகளுக்கும்

சிறுமி

சரசரவென சுழன்று
சடாரென அமர்கிறாள்
சிறுமி
கவிழ்ந்த குடைபோல்
விரிந்திருக்கும்
பாவாடை
உள்ளே சிறைபட்ட
காற்று காத்திருக்கிறது
சிறுமியின் உத்தரவிற்காய்

------------------------------------------

அத்தனைச் சிறியதாய்
அத்தனை உயரத்தில்
அத்தனை வேகமாய்
பறந்து கொண்டிருப்பது
விமானமா பறவையா
எனும் ஐயம்
அந்த சிறுமிக்கு
விமானத்திற்கு
எந்த ஐயமும்
இருக்கவில்லை
தான் பறவை என்பதில்

so simple

சிறுமி வரையும்
ஓவியங்களில் எல்லாம்
ஓர் இளவரசன் இருக்கிறான்
இளவரசர்கள் வரையும்
ஓவியங்களில்
இளவரசிகளே இருப்பது குறித்து
சிறுமி வருந்துவதில்லை
கிரீடம் வரைந்தால்
அவன் இளவரசன்
அழித்துவிட்டால்
குதிரைத் தொழுவ ஊழியன்
சிரித்துவிட்டு சொல்லுவாள்
so simple

இரவு

மூங்கில் கழிகளை
கரையான்கள் அரித்தெடுக்கும்
ஓசையினூடே
பயணிக்கும் இரவுகள்
சலங்கைகள்
அணிந்திருந்ததாய்
ஞாபகம்

-------------------------------------------

விழிப்புகளின் பின்னும்
படுக்கைவிரிப்புக் கசங்கலில்
ஓய்வெடுக்கும் இரவுகள்
மிக வசீகரமானவை

-------------------------------------------

ஒரு இரவின்
முதல் மூச்சினைப்போலவே
இறுதி மூச்சையும்
எவரும் அறிவதில்லை
இரவும் அறிவதில்லை

--------------------------------------------
கேடயமாய் நீளும்
இரவுகளே
பல நேரம் ஆயுதமாய்
மாறும்
குருதியாய் வழியும்
இருளில்
எதுவும் புலப்படுவதில்லை
ஆம்
எதுவும்

--------------------------------------------

ரம்மியக் கனாக்களின்
இடைவெளிகளில் நுழைந்து
ரசிக்க மட்டுமேனும்
இரவுகளை
அனுமதிக்கலாம்

-----------------------------------------------


பகல்சாலையெலாம்
இரவின் கரைகளில்
முடிந்து
பிறிதோர் நொடியில்
இங்கிருந்தே
தொடரும்

------------------------------------------------

திமிறித் திரண்டெழும்
கரும் அலைபோல்
கவியும் இந்த இரவில்
ஏக்கப் புள்ளியெனக்
கரைந்து இல்லாதுபோதலும்
சாத்தியமே