Tuesday 8 April 2014

சன்னதம், வெயில்

குவித்து வைத்திருந்த
மணல்திட்டிற்குள்
நாவைச் சுழற்றி
பசுவொன்று
மண் தின்பதையும்
பெண்நாய்
நிதானித்து உதிரப்பொட்டுகளை
நடுவீதியில் இட்டுச்
செல்வதையும்
வெறிக்கும் சிறுவனுக்காய்
தாழ்ந்து எரியும்
வெயில்

------------------

துளைவிழுந்த வாளி
நிரம்ப உப்புநீர்
துள்ளி நழுவி
வெளியேறும்
மீன்குஞ்சு நிலா

-----------------

கோடையின்
முதல் ஆசி போல்
வீழ்ந்தது மஞ்சள் மலர்
அடுத்தடுத்த ஆசிகளுக்காய்
முகம் உயர்த்திக்
காத்திருக்கும்
வாசற்கோலம்

-------------------

வேம்பில் பால்வடிந்த
தடத்தை உற்றுப்பார்ப்பவளின்
மார்புகளில் கசிவு
புற்றுக்குள்ளிருந்த நாகம்
மெல்லப் புரண்டு
விழிக்கிறது

----------------------

அழுகையை அடக்க
வாயில் திணிக்கப்பட்ட
நாட்டு பேரிக்காயுடன்
மார்பெங்கும் செடல் குத்தி
மெல்லக் கருவறைச்
சுற்றி வரும்
சிறுமிக்காய்
கூடுதலாய் குளிர்ந்து கிடந்தது
கோயில் குளம்

------------------------

விழிகள் சிவக்க
புகைமூட்டத்தின் நடுவில்
பொங்கல் வைக்கும்
அம்மாவுக்கு
அன்று
அம்மன் முகம்

-----------------------

சிறு வேல்களை
மேனியிலிருந்து அகற்றியதும்
புத்தாடையுடன்
அம்மன் தரிசிக்கும் சிறுமி
திரும்பிப்பார்த்துச்
சொல்லிச் செல்கிறாள்
கொஞ்சம் கால் மாற்றி
அமர்ந்து கொள்ளேன்

--------------------------

சன்னதம் கொண்டு
ஆடுபவளை
அச்சத்துடன் பார்க்கும் சிறுவன்
சில நொடிகள் முன்னர்
அவளுக்குள் இருந்த
தன் தாயைத்
தேடிச் சலித்து
மீண்டும் அச்சத்துடன்
பார்க்கும் சிறுவன்

----------------------------

No comments:

Post a Comment