பயணங்களால் ஆன நான்
_____________________________
பயணங்களால் ஆன வாழ்வு மட்டுமே ஆசீர்வதிக்கப் பட்ட வாழ்வு! குறுகிய வளைவுகளோடும், ஒருபக்கம் பாறைகளும் மறுபக்கம் பாதாளமும் கொண்டும், மாற்றுப்பாதையில்லா ஒற்றையடி வழித்தடமாய் கூடவும் நீளும் இந்த வாழ்வில், பயணங்கள் என்பது ஒரு வித யோக நிலையேதான், நம்மை நாமே தயார் செய்து கொள்வதற்கும், புதுப்பித்துக் கொள்வதற்கும்! என் வாழ்வின் மிக முக்கியப் பயணங்களை என் பதினெட்டு வயதுக்குள்ளேயே முடித்து விட்டாலும், பயணங்களின் மீதான ஒருவித மர்ம விருப்பம் இன்றும் தொடர்கிறது. பயணங்கள் யாவும் குடும்பத்துடனும், நண்பர்களுடனுமே இருந்தது என்பது, என்வரை சிறப்பான விஷயமே.
தனித்துவமான பயணமெனில் முதல் விமானப் பயணம் தான். முதன்முதலில் விமானம் ஏறியது பதினொரு வயதில், சென்னையிலிருந்து திருப்பதிக்கு. அப்போது இது போன்ற குறைவான தொலைவுகளுக்கெனவே "வாயுதூத்" என ஒரு சிறு விமானப் போக்குவரத்து இருந்தது. குறைவான எண்ணிக்கையிலேயே ஆட்கள் செல்ல இயலும் அதில். விமானம் நேராய் திருப்பதி கோயில் வாசலுக்கே சென்று இறக்கி விடும் என்ற அழகான குழந்தைமையுடன் விமானம் ஏறினேன் பெற்றோருடன். இரைச்சலுடன் குலுக்கலுடன் மேலெழுந்தபோது, பயத்துடன் ஒரு பறவையின் வயிற்றினுள் இருப்பது போன்ற ஒரு உணர்வு. ஏதோ ஒரு குட்டி மலையை வட்டமடித்து பயணித்தது விமானம். கீழே மாடுகள் எல்லாம் எறும்புகளாய்த் தெரிந்த போது, எறும்புகளை எப்படி கண்டு கொள்வது என யோசித்தேன் நான். மிக குறுகிய நேரத்தில் கீழ் திருப்பதி விமானத்தளத்தில் சேர்ந்தோம், அதே குலுக்கல் இரைச்சலுடன். இறங்கியதும் கோயிலைத் தேடி கண்கள் சுழல, அப்பா விளக்கினார், "மலை மேல பிளேன் நிறுத்த முடியாதும்மா, கீழ விழுந்துடும்!" என!!! கொஞ்ச நேரம் கழித்துதான் அவர் கிண்டல் புரிந்தது எனக்கு. பின்னர் அதே போல் இரண்டு முறை வாயுதூத் விமானத்தில் பயணம் செய்தேன். மற்றொருமுறை "ஏர் இந்தியா" வில் போனபோது அப்பாவிடம் கேட்டேன், "எங்கப்பா வாயுதூத்". அவர் பொறுப்பாக பதில் சொன்னார், "அடிக்கடி அந்த பிளேன் கீழ விழுந்து ஆக்சிடென்ட் ஆய்டுதாம், அதனால அந்த பிளேனை வெளிய விடறதில்ல!" என்றார். இன்று வரை அவர் சொன்னது உண்மையா கேலியா எனத் தெரியவில்லை. இது போல் பயணங்களில் சென்று சேரப்போகும் இடத்தை விடப் பயணமே போதுமானாதாய் இருந்து விடுகிறது, எல்லாவற்றுக்குமே!
நிச்சயிக்கப்பட்ட பயணங்களாய் இருப்பது வருடாந்திர கட்டாய பயணங்களாய் இருக்கும், கோவில்களுக்கு பொங்கல் வைக்கப் போகும் பயணங்களே. பெரிய பாளையம் கோவிலுக்குச் சென்று பொங்கலிட்டு தரிசனம் முடிந்ததும், சத்தமில்லாது அருகிலே(ஆந்திரா-தமிழக எல்லை) இருக்கும் "கோனே" அருவிக்கு செல்வது வழக்கம். நாவல்பழ மரங்களால் சூழப்பட்டு, மெலிதாய் வடியும் அந்த அருவியின் அழகு ஓங்காரமாய் கொட்டும் அருவிகளில் காண முடியாது. உடுத்தியிருக்கும் உடையோடே அருவியில் குளிப்பதும், அங்கேயே வெட்டவெளியில் நின்று நனைந்த உடைகளைக் காய வைப்பதும் தனி சுகம். நாவல் பழங்களைத் தேடி கிளைகளெல்லாம் கண்கள் அலைபாய்ந்தாலும், ஒன்று கூட கிடைக்காது. இருந்தாலும் விடாமல் தேடிவிட்டே வண்டிக்கு வருவோம். அருகிலேயே "சுருட்டப்பள்ளி" கோயில், ஆலகால விஷமருந்திய ஈசனைப் பார்வதி கழுத்தைப் பிடித்து விஷத்தை நிறுத்தியதும், விஷத்தின் தன்மையால் மயங்கிய ஈசன் இங்கு ரங்கநாதரைப் போன்று பள்ளி கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு விட்டு , அதோடே அவர் மீது அணிவிக்கப்பட்ட மலர்களில் துள்ளி ஓடும் கரப்பான்களையும் தரிசித்து விட்டு, வீடு திரும்பும் பயணங்கள், உயிர்த்திருத்தலை நேசிக்க வைப்பவை.
ரயில் பயணங்கள் முற்றிலும் வேறுபட்டவை, இங்கு ரயிலும் ஒரு சக பிரயாணி போல் உடன் வரும் விந்தை நிகழும். முதல் ரயில் பயணம், பெங்களூரு நோக்கி "பிருந்தாவன்" எக்ஸ்ப்ரெசில்! நடைமேடையில் நடையாய் நடந்து, நமக்கான பெட்டி தேடி, எண்களை சரி பார்த்து, நமக்கு முன்னே எவரும் அங்கு அமர்ந்துகொண்டு அடாவடி செய்யவில்லை என்ற திருப்தியுடன் ரயிலில் அமர்ந்ததும், இந்த அலைச்சல் குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளாது நகரத் துவங்கியது ரயில். உடனே தொடங்கினோம், சாப்பாட்டு பொட்டலம் பிரிக்கும் வைபவம், மிளகாய்ப் பொடி தூவிய இட்லி, புளிசாதம், கத்திரிக்காய் வதக்கல், தோசை, காரசட்னி, தயிர்சாதம், நாரத்தை ஊறுகாய் என அந்த கம்பார்ட்மெண்ட் கதம்ப வாசனைகளால் மூழ்க, ரயில் தாய் போல் ஆடி ஆடி தாலாட்ட,உண்டு முடிப்பது, எந்த ஐந்து நட்சத்திர விடுதியில் உண்டாலும் சர்வ நிச்சயமாய்க் கிடைக்காது. சிறிது நேரத்தில் எல்லோரும் கண் அயர, ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து, நான் - ரயில் - ஓடும் காட்சிகள் ஆகிய மூவர் மட்டும் சஞ்சரிக்கும் உலகை தரிசிக்கத் துவங்கி விட்டேன். நிறுத்தங்களில் எல்லாம் ஏறும், இறங்கும் வித விதமான மனிதர்களை காண்பதை ஆகச் சிறந்த பொழுது போக்காக்கி விடுகிறது ரயில் பயணம். பெங்களூரு ரயில் நிலையம் நுழையும் முன்னே, ரயிலடிச் சுவரில் நான் கண்டது ஒரு தமிழ்ப்பட சுவரொட்டி. தமிழைக் கையோடு கன்னட தேசத்திற்கு அழைத்து வந்த பெருமையோடு ரயிலை விட்டு இறங்கினேன்.
இதே போல் தென்னிந்தியா முழுக்கவும், சில வட இந்திய ஊர்களிலும் சுற்றி, கண்டு, உணர்ந்தவை எல்லாம், பயணத்தின் நடுவே குறுக்கிடும் பாலம் போலவே குறுக்கிட்டு நிதர்சனங்களை நினைவுகளோடு சேர்த்து விட்டு நகர்ந்து கொண்டே இருக்கின்றன, பயணங்களைப் போலவே!
No comments:
Post a Comment