ஒன்றின் பின் என்றும்
----------------------------------------
பேனாக்கள் மேல் இருந்த விருப்பம் எப்போது கைப்பைகளிலும் காலணிகளிலும் திரும்பியது எனச் சரியாக சொல்லத் தெரியவில்லை, நிச்சயம் மாணவியாய் இருந்தவள் பெண்ணாய் உணர்ந்த ஏதோ ஒரு அந்தி சாயும் பொழுதாக அது இருந்திருக்கக் கூடும். பேனாக்கள் சேகரித்து வைத்துக் கொள்வது என்பது ஆர்வத்தையும் கடந்து ஒரு வித பெருமிதத்திற்கு உரிய செயலாகவே கருதப்பட்டது பள்ளிக்காலங்களில். அதனாலேயே மை தீர்ந்தவை , வாங்கிய அன்றே எழுத அடம் பிடித்தவை, எழுதும்போதே மை கசிபவை, எழுத்துக்களை மொந்தையாய் வரைபவை ஆகியவற்றை கூடப் பையில் வைத்திருந்தேன்.
மிகவும் விரும்பியது பத்தாம் வகுப்பு படிக்கையில் அப்பா வாங்கி தந்த பூப்படம் போட்ட ஹீரோ பேனா, அப்போதே 48 ரூபாய் அது. வழக்கமாய் அடர் மெரூன் வண்ணத்திலேயே பார்த்திருந்த ஹீரோ பேனா, வெளிர் சாம்பல் வண்ணத்தில் பூக்கள் படம் போட்டு இருந்ததே பெரும் வியப்பாய் இருந்தது. மாணவர்களின் ஆதர்ச கடையென இருந்த கௌதம் அங்காடியில்தான் வாங்கினேன் அதை. சக தோழர்களிடம் காட்டி, அவர்களுக்கும் அதைக்கொண்டு எழுத ஒரு சந்தர்ப்பம் தந்து, பொக்கிஷம் போல் பாதுகாத்தேன். பொதுத்தேர்வின் போது பிள்ளையாரின் அருகில் ஹால் டிக்கெட்டோடு அமர்ந்து கொஞ்சம் பாடம் படித்து விட்டு வந்தது அதுவும். இசைவான மதிப்பெண்கள் தந்தது, சுய முயற்சியோ ஆசிரியர் பயிற்சியோ அன்றி அந்தப் பேனா தான் என தீர்க்கமாய் எண்ணி வளைய வந்தக் காலம் அது. எப்போதும் அணிந்திருக்கும் சட்டையில் குத்திக்கொண்டே சுற்றினேன்.
ஆண் பிள்ளைகள் சட்டை பாக்கெட்டில் பேனாக்களை வசீகரமாய் குத்திகொள்வதைப் பார்த்தபோதுதான் முதல்முறை ஆணாய் பிறக்காததிற்கு வருந்தினேன், பேனா மேல் இருந்த காதலால். நல்ல மதிப்பெண்களுக்காய் நாகேஷ் தியேட்டர் அருகில் இருந்த டைடன் கைக்கடிகார கடையில் அப்பா முதல்முறை கைகடிகாரம் வாங்கித் தந்தபோதும், அதன் அருகிலேயே இருந்த ஹீரோ மிதிவண்டிக் கடையில் இருந்த போதும் கூட, சட்டையில் இருந்தது அந்த பேனா. அதன் பின்னர் வந்த பதினோராம், பன்னிரெண்டாம் வகுப்புகளிலும் என்னோடு பயணித்த அது, ஒருநாள் தொலைந்து போனது. விளையாட்டு வகுப்பில் மைதானத்தில் இறகுப்பந்து விளையாடும்போது தொலைந்து போனது! அதற்காய் குழந்தை போல் அழுததும், தோழிகள் மைதானத்தை சல்லடை போட்டு தேடியதும்,முதலில் கிண்டல் செய்த சக ஆண் மாணவர்கள் பின்னர் ஆறுதல் சொல்லியதும் எதுவுமே தொலைந்த பேனாவின் இழப்பால் ஏற்பட்ட வலியை ஈடு செய்யவில்லை. அதன் பின்னர் எத்தனையோ பேனாக்கள் வந்து சென்றது, எதுவும் அந்தப் பேனா போல் இல்லவே இல்லை.
என் மகன் இப்போது பேனாக்களின் மேல் அதீத ஆர்வத்துடன் இருப்பது தொலைந்த அந்த பேனாவிற்கு நான் செய்யும் நன்றி போல தோன்றுவதும் விந்தைதான். கவிதைகள் எழுத தட்டச்சுப் பலகையே போதுமானதாய் உள்ளது. ஆசிரியை ஆன பிறகு சிகப்பு மையால் அடித்து, திருத்தி, கற்பித்து எனப் பேனாவுடன் இருந்த நெருக்கமே சுருங்கி விட்டது. எனினும், மாணவர்கள் எவரேனும் புது வடிவப் பேனாக்கள் கொண்டு வந்தால், ஒரு குழந்தைபோல் அவற்றை வாங்கி "ஹீரோ பேனா" என எழுதிப் பார்ப்பது மட்டும் இன்று வரை தொடர்கிறது!
No comments:
Post a Comment