Wednesday 25 June 2014

சிறுமி, முதியவள், சிறுவன்.... மற்றும் பல

தும்பைப்பூத்தூவல்களாய்
ஆலயவாசல் கடைகளில்
பொழிகிறது
மழை
நனைந்திருந்த 
ஒற்றை மலர் மூலமாய்
தேவியிடம்
மழையைச் 
சேர்ப்பிக்கிறாள் சிறுமி
--------------------------------------

பச்சைக்கல் மூக்குத்தி
அணிந்து
வீற்றிருக்கிறாள் தேவி
மலையேறி வந்தவளின்
நீள் மூச்சுகள் பட்டதும்
அசைந்து அசைந்து
ஒளிர்கிறது அது
மகவை அடையாளம் கண்ட
ஊமைத்தாயின்
சமிக்ஞை போல

-------------------------------------
சிற்றூர் சந்தையில் 
கூடை நிறைக்கப்
புளியந்தளிர்களுடன்
காத்திருக்கிறாள் மூதாட்டி

உறைந்த உதிரத்துளிகளாய்
சிவந்திருக்கும் ஈச்சங்கனிகளில்
மொய்க்கும் ஈக்களில் 
இரண்டு
அவள் விழிகளென
மாறியிருந்தன

-----------------------------------
அடிமுறிந்து
விழுந்துகிடக்கும்
பெருமரம்

காதலனின் முன்நெற்றி
முடிக்கற்றை விலக்கி
இறுதியாய்
முத்தமிடும் பெண்போல்
நிலம் பதிந்து கிடக்கும்
நாளைகளற்ற மலர்கள்

--------------------------------------

மொழியறியாச் சிறுவன்
எலுமிச்சைச்சாறு
தரும்போது
ஒரு புன்னகையையும்
சேர்த்தே தருகிறான்
கோப்பைக்கும்
விரல்களுக்கும் இடையே
அது
வசதியாய் அமர்கிறது

------------------------------------------

உட்புறமாய் வளைந்திருக்கும்
மெலிந்த கால்கள்
அழுத்தி நிமிர்த்துகிறார்
மருத்துவர்
வீறிடும் மழலை
காணச் சகியாது
கண்ணாடிக்காகிதமாய்
நீர் மறைக்கும் விழிகளுடன்
முகம் திருப்புகிறாள் தாய்

ஜன்னல் வானில்
பறவையொன்று கடக்கிறது
அதன் கால்கள்
உட்புறமாய் மடங்கியிருந்தன


--------------------------------------------


அலறும் பாடல்
ஒலிக்கும் கைபேசிகளுடன்
பீகார் சிறுவர்கள்
உணவக வேலை முடித்து
நடுநிசியில் திரும்புகின்றனர்

பழவண்டு போல்
அவளின் கனவைக்
குடைந்து நுழைகிறது
பாடலின்
இறுதி வரி

-----------------------------------------



No comments:

Post a Comment