Wednesday 25 June 2014

பட்டாம்பூச்சிபோல் அமர்ந்து முடிகிறது

பாதங்களை மொய்க்கும்
மீன்குஞ்சுகளை விரட்டியபடி
நீரள்ளிக் கொட்டிக்கொள்கின்றனர்
பெண்கள்
நனைந்த ஆடைகளோடு
புகைப்படமெடுத்துத் தர
கரையில் நின்றபடி
முப்பது ரூபாய் கேட்கிறான்
உள்ளூர் புகைப்படக்காரன்
விசிறிச் சென்றிருந்த 
உள்ளாடைப் பாவங்களை
வலைக்கூடைகளில் அள்ளிச்
சேகரிக்கிறான் முதியவனொருவன்
மிகத் தனியாய்
மிகுந்த நிதானமாயும்
கடந்துச் செல்கிறது
சிகப்புச்செதில் மீனொன்று
வான் பார்த்து கிடக்கும்
அழகுப்பெண்போல் எதிரில்
கிடக்கிறது மலைத்தொடர்
இடதுபுறம் பாலமும்
வலதுபுறம் அணைக்கட்டுமாய்
திணறித் திணறித்
நகர்ந்து கொண்டிருந்தது நதி
துயில் களைந்து எழுந்ததுபோலே
பரவத்துவங்குகிறது குளிர்
கோவிலின் இறுதி மணியோசை
உடை மாற்றும் தாயின்
ஈர ஆடைகளோடு
காத்திருக்கும் சிறுமியின்
மடிகளில்
ஒரு பட்டாம்பூச்சிபோல்
வந்து அமர்ந்து
முடிகிறது

No comments:

Post a Comment