நிராகரிப்பின் கரிப்புத்துளிகள்
--------------------------------------
அத்தனைக் கோரமாய்
நெளிகிறது
உனதிந்த உதாசீனம்
அதற்கான
ஒற்றைக் காரணமாய்
அது மட்டும்
இருந்திடவே கூடாதென
அரற்றி ஓலமிடும்
இதனை நோக்கி
அதோ உன் வருகை
விரல்பற்றி வருகிறது
அதே
ஒற்றைக் காரணம்
அத்தனைக் கோரமாய்
நெளிந்தபடி
-----------------------------------------
அன்றே அந்த
அழைப்பை
நீ நிராகரித்திருக்க
வேண்டும்
இன்று நிராகரிக்க
எனைத் தேர்வு
செய்வது
உன் முட்டாள்தனமேயன்றி
வேறேதும் இதில்
விசேஷ செய்தியில்லை
------------------------------------------
உண்மைதான்
வெற்றுக்கூடுகளும்
வசீகரமானவைதான்
ஆனால்
கூடுடைத்துதானதை
அறிய வேண்டுமெனில்
அதற்கு
கூடுகள் போதுமே
பொக்கிஷங்கள் எதற்கு
--------------------------------------------
விழிநிறைய
உயிர்தேக்கி
யாசித்து நிற்குமதை
நோக்கி நீளும்
அந்த விரலிடுக்கில்தான்
எத்தனை அழகான
வைர ஊசி
--------------------------------------------
எது குறித்தும்
பிரஸ்தாபிக்க
உத்தேசமில்லைதான்
ஆனால்
அங்கும்
இதுவே
இருப்பதற்கான
சாத்தியக்கூறுகள்
குறித்து
முன்னரே
நிரூபித்தாயிற்று
இடைவெட்டாய்
விழுந்த
அந்த
ஒற்றைச்சொல் மூலம்
----------------------------------------
மிதந்த சருகின்
நிழல்பட்டு
கறுத்துப்போன
நதியின்
தன்மையிது
சருகோடு நிழலும்
தெளிநதி மூழ்கி
சாபல்யம் பெறும்
காலமுமிதுவே
-------------------------------------------