Friday 8 August 2014

விழுந்து உருளும் வெயில்பழம்

சிகப்பு விளக்கு ஒளிர்வதை
தொலைவில் இருந்தே
கண்டுவிட்டதும்
வெயிலை வடிகட்டி ஒழுக்கியிருந்த
மரத்தின் கீழ் நிற்கிறீர்கள்

நடைபாதையில் முகம்மூடிப்
படுத்துக்கிடக்கும் உருவத்தின்
வெளித்தெரியும் பாதங்கள்
ஆணுடையதுதானோ எனச்
சந்தேகிக்கிறீர்கள்

நேற்றைய மழைநீர் தேக்கியிருந்த
சாலைப்பள்ளத்தின் விளிம்புகள்
சமீபத்தில் உங்களைச் சலனப்படுத்திய
பெண்ணின் காதுமடல் வளைவுகளை
உங்களுக்கு நினைவுறுத்துகிறது
ஒரு பெருவாகனம் காதுமடல்களின்
மீதேறி முன்னே செல்கிறது

கண்ணாடிச்சில்லுகள் பதித்திருந்த
சுற்றுச்சுவரை காயமில்லாது கடந்துவிடும்
முறைகளை யோசிக்கிறீர்கள்
இரத்தம் என்பது
சாகசங்களின் தேவன்
என முடிவு செய்கிறீர்கள்

சுவரில் ஒட்டப்பட்டிருக்கும்
இறுதியஞ்சலி வாசகங்களைக் கண்டு
மெல்லியதாய் புன்னகைக்கிறீர்கள்
உங்களைக் கண்டு வாசகங்களின்
மேல் இருப்பவனும் புன்னகைக்கிறான்

தேர்ந்த போர்வீரன் போல்
எண்கள் முன்னோக்கி ஓடுகின்றன
பெரும் இரைச்சலுடன் விழிக்கும்
மிருகம் போல்
வாகனங்கள் உறுமுகின்றன
நீங்கள் நகர்ந்து வேகம் கூட்டுகிறீர்கள்

அத்தனை நேரம்
உங்கள் உச்சியில்
வெயில் கொண்டு
மரம் எழுதியிருந்த
அந்த மஞ்சள் ஓவியம்
ஒரு கனி போல்
சாலையில் விழுந்து
உருள்கிறது

No comments:

Post a Comment