Friday 8 August 2014

சாட்டின் ரிப்பன் புறாக்கள்

புதிதாகப் போடப்பட்டிருந்தத்
தார்ச்சாலையின் குறு ஜல்லிக்கற்கள்
பள்ளி வாகனத்தின் தகடுகளில்
பட்டுத் தெறிப்பதை
தன் பாதங்களால்
ரசித்தபடி அமர்ந்திருக்கிறாள்
நீலச்சீருடைச் சிறுமி

பிரமிடும் குட்டி குட்டி ஒட்டகங்களும்
தெர்மாக்கோலில் இருந்து
அவள் மடிமீது விழும் சமயத்திற்காய்
காத்திருந்தன

வெண்ணிறச் சாட்டின் ரிப்பன்களை
புறாக்கள் போல்
அவள் சூடியிருப்பதாய்
புறாவொன்று என்றேனும்
அவளிடம் சொல்லவும்கூடும்

புதிதாய் அறிமுகமாயிருக்கும்
கருப்பு போர்பான் குறித்து
அம்மாவற்ற நேரத்தில்
அப்பாவுடன் ஆலோசிக்கவும்
சுமித்ரா மிஸ்ஸிற்கு
பிறந்தநாள் வாழ்த்து சொல்லவும்
வார்த்தைகளைக்
கோர்த்துக் கொண்டிருந்தவளைக் கடந்து
செல்பவன்
நிதானமாய்
ஆபாச சமிக்ஞை செய்கிறான்

நீலச்சீருடையையும்
அதனுள் பொதிந்திருந்த
பெண்ணுடலையும்
அந்த நொடி அவள் உணர்கிறாள்

அவை
ஒரு கொடிய விலங்கு போல்
அவளை நோக்கித்
திரும்புகின்றன

No comments:

Post a Comment