Saturday, 5 April 2014

பயணங்கள்

அந்தத் தெருவினுள்
பேருந்து செல்லுமெனத்
துளியும் எதிர்பார்க்கவில்லை
வழிகாட்டுபவன் முன்னரே
ஜன்னல்கண்ணாடிகளை
ஏற்றிவிடச் சொல்லியிருந்தான்
படீரென கண்ணாடியில்
அடிகள் விழுந்ததும்தான்
சுற்றியிருந்தவர்களை கவனித்தேன்
திருநங்கைகளின் இரைச்சலும்
சிரிப்பொலியும்
ஒலியற்றப் படிமங்களாய்
அகக்கண்ணில் இன்றும்
எல்லா வாசல்களிலும்
அதீத ஒப்பனை முகங்கள்
நெடிய வீதி முழுக்க
பெண்கள் பெண்கள் பெண்கள்
சிறுமியொருத்தியின் சிரிப்பு
எல்லா தெய்வ அறங்களையும்
அங்கு சிதைத்துக் கொண்டிருந்தது
வீதியைக் கடந்ததும்
ஜன்னல்கள் திறந்தன
மும்பையின் பிரபல
கோவில் நோக்கிச் செல்வதாய்
சொன்ன அறிவிப்பில்
ஏன் அன்று
புனிதமே இருந்திருக்கவில்லை

------------------------------

கோவா கடற்கரையில்
கண்டேன் அவளை
சட்டையும் பாவாடையுமாய்
பியர் விற்றுக்கொண்டிருந்தவள்
பதப்படுத்தப்பட்டப்
பாதிரியின் உடலிருந்த
தேவாலயத்தில் மெழுகுகள்
விற்றுக்கொண்டிருந்தவளின்
இறுக்கமில்லை இவளிடம்
வெகு இயல்பான
உடல்மொழியுடன் திரிந்தவளிடமிருந்து
பார்வையைப் பெயர்த்து
கடலுக்குள் செலுத்துகிறேன்
நுரைத்துப் பொங்கும்
அலைகளிலும்
பியர்குமிழிகளைத்தான்
பார்த்ததாய் ஞாபகம்

-------------------------------

நவாபின் கோட்டை வாயிலில்
அவர்தம் வீர பராக்கிரம
வாக்கியங்கள் அறையப்பட்ட
ஒற்றை மரம்
அதன் விதைகளைக்
காற்றில் விசிறினால்
ஹெலிகாப்டர் போல்
பறந்துத் தரையிறங்கும்
நவாபின் காலத்தில்
குழந்தைகள் அதில்
விளையாடியிருக்கக்கூடும்
எனினும்
கோட்டையின் உள்ளே
அந்த மரங்களே இல்லை
ஹெலிகாப்டர் மரங்கள்
குறித்து அறியாமலேயே
மாண்டு போயிருந்த
நவாபின் குழந்தைகள்
பற்றி எந்த
மரத்திலும் வாசகங்கள்
அறையப்பட்டிருக்கவில்லை

-------------------------------

குறுக்கும் நெடுக்குமாய்
பிணைந்தோடும்
அட்டைகள் விட்டுச்சென்ற
வெள்ளிப்பாதைகள்
குழம்பிய வெளியின்
புதிர்ப்படம் போல்
இரவுநேரத் தோட்டம்

------------------------------

அள்ளிய மணலோடு
வந்துவிட்ட பாம்பு
ஊருக்குள்
இடம்மாறியிருந்த
ஆற்றுத்தடத்தினைக் கண்டு
வியக்கிறது

------------------------------

1 comment:

  1. அனைத்தும் அருமை....

    முதலாவது கலக்கல்..

    ReplyDelete