Wednesday, 26 February 2014

மீண்ட இரவுகள்

மீண்ட இரவுகள்
-------------------------

இரவுக்காவலாளியின்
விசில் சத்தத்தில்
மிரண்ட இரவு
உடலெல்லாம் புண்களடர்ந்த
சாலையோர ரோகியின்
போர்வைக்குள் புகுந்தது

அவன் விழிகளில்
மின்னி மறைகிறான்
மூன்று காலங்களுக்குமான
நொடிநேர இறைவன்

-------------------------------

உங்களுக்கும் கேட்கிறதா

குட்டிகளைக் காக்க
ஆண்பூனையிடம்
போரிடும் தாய்ப்பூனையின் கதறல்
நகரிடை அமைந்த காட்டில்
திடீர் ஓசையோடு
கருகி நொறுங்கும் எலும்பினோசை
ஜூரவேகத்தில்
ஒரு மழலையின் அனத்தல்
அடங்கிய காமத்தின்
பெருமூச்சொலி
சன்னமாய் வெளியேகும்
கண்ணீரின் லயம்

இல்லையெனில்
இரவுகள்
உங்களை மன்னிப்பதாயில்லை
உங்களைப் போன்றே
இரவுகளுக்கும் இரக்கமில்லை

--------------------------------

பூரணமாய் பெயர்த்து
பெருங்காட்டிற்கு
எனைக் கடத்தும்
இந்தக் கனவு
இதே ஓக்மரப்படுக்கையில்
எனைச் சேர்க்கும்வரை
வழி தவறிடக்கூடாது
இந்த இரவு
எந்த ஓக்மரக்காட்டிலும்

-------------------------------

இளநீலநிற புகைமூட்டம்போல்
படர்ந்திருக்கும் வலைவழி
இறங்கும் இரவை
கருவுற்றிருக்கும் பல்லி
உற்று நோக்குகிறது
வழமைபோல் துணுக்குற்று
சமாதானமடைகிறேன் நானும்
பல்லியிருப்பது வலைக்கு
வெளிப்புறத்தில்தானென

------------------------------

மாக்கோலங்களை அழித்துக் கொண்டு
வாசலில் அலையடிக்கும்
அதே கடல்
கூம்புவடிவ மலையை
சிறகுகளின்றி வட்டமிடும்
அதே நான்
பிழைகளற்ற ஆங்கிலத்தில்
அதே காதல் கடிதத்தை
என் நண்பியிடமும் தரும்
அதே அவன்

தொடர்புகளற்று
தொடர்ந்து கொண்டிருக்கும்
அதே கனவை
முடித்துவைக்க
முடியா இரவுகளின்
சலிப்பூட்டும்
அதே காலடியோசைகள்

------------------------------

No comments:

Post a Comment