Wednesday, 3 April 2013

மலரும் நினைவுகள்


மலரும் நினைவுகள்
-----------------------------------

                         முதிர்ச்சி என்பது வயது தொடர்பானதும் தான் என நிரூபிக்கவெனவே இந்நிகழ்வைச் சொல்லலாம். கல்லூரிக் காலங்களில் செய்யும்  குறும்புகளும், கிறுக்குத் தனங்களும், பின்னாளில் நாம் நினைவுப்  படுத்தி,  நம்மை நாமே பார்த்து  பரிகாசம் செய்து கொள்ளவும்தானே! சன் தொலைகாட்சியில் "சித்தி" நெடுந்தொடர் மிக வெற்றிகரமாக ஓடி, தமிழகத்தையே கட்டிப் போட்டிருந்த 2001இல் நடந்தது இது! இரவு ஒன்பதிலிருந்து பத்து மணிவரை ஒலிபரப்பப் பட்ட இந்தத்  தொடருக்காய் திரையரங்குகளில் காட்சிகளின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டதும், ஒளிபரப்பாகும் நேரத்தில் மருத்துவமனைகள் கூட காற்றாடியதும், உலக வரலாறு. அப்போது நான் கல்லூரி இறுதி வருடம் பயின்றுகொண்டிருந்தேன். கல்லூரியில்  மதிய உணவு இடைவேளைகளில் கூட முன்தினம் பார்த்த தொடரைப் பற்றியே பேசும் அளவிற்கு "ராதிகா"வும், தொடரின் அசர வைக்கும் அசுரப் போக்கும் எங்களை கட்டிபோட்டிருந்தார், கட்டிப் போட்டிருந்தது. 
                      இந்த நிலையில் ஒரு நான் சன் தொலைகாட்சியில் ஒரு அறிவுப்பு,' "சித்தி" ராதிகாவுடன் இன்றைய பெப்சி உங்கள் சாய்ஸில் உரையாடுங்கள்' எனக்  கூறி நான்கு மணியிலிருந்து 5 மணிக்குள் ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு அழைக்கச் சொல்லியிருந்தனர்.அவ்வளவுதான், எனக்கு தலை கால் புரியாத கொண்டாட்டம். உடனே தொலைபேசி(அப்போது செல்பேசி இல்லை) அருகிலேயே தவம் கிடந்து தொடர்புக்கு முயன்றேன். REDIAL பொத்தானை அன்று அமுக்கிய வேகத்தை கின்னசில் கூட போட்டிருக்கலாம். திடீரென அந்த பக்கம் ரிங் போகும் சத்தம் கேட்டது, உடம்பெல்லாம் ஒரு முறை சிலிர்த்தது. ஐந்து ரிங் போனதும், "ஹலோ" என ஒரு ஆணின் குரல்,( ஐயையோ ராதிகா குரல் இப்படி இருக்காதே, உமா குரல் மாதிரியும் இல்லையே  ராங் நம்பர் போட்டுட்டோமோ என விழித்தபோது) அவரே சொன்னார், "சன் ஸ்டுடியோ தாம்மா, சொல்லுங்க!"என்றார். நான் தயங்கியபடி "சார், பெப்சி உங்கள் சாய்ஸ் ப்ரோக்ராம் தானே, ராதிகா மேடம் கிட்ட பேசணும்"என்றேன். அவர், "பேசலாம் பேசலாம்! இங்கதான் இருக்காங்க, சொல்லுங்க என்ன பேசப்  போறீங்க?"என்றார். நானும், "சித்தி சீரியல்ல அவங்க நடிப்பு பத்தியும், கதையோட தன்மை பத்தியும் சார்"னு ரொம்ப பவ்யமா சொன்னேன். அவர், "அப்புறம்? அவங்க கிட்ட ஏதாவது கேள்வி கேக்கணுமே, என்ன கேப்பீங்க?"என்றார். அவங்க கிட்ட என்ன கேக்குறது, கைமாத்தா 100 ரூபாயோ ஊர்நாட்டுல மழைத்தண்ணி எப்படின்னோ கேக்கக் கூட முடியாதே என நான் திணறிய போது, அவரே சொன்னார்,"சரத்குமார் பத்தி கேளுங்க!". எனக்கு முதன்முறையாக கை கால் நடுங்கத் தொடங்கியது, ஏனெனில் ராதிகா சரத்குமாருடன் திருமணம் செய்த விஷயம் அவர் சொல்லித்தான் எனக்கே அப்போது தெரியும், இந்த நிலையில் நான் எப்படி கேப்பது, அதுவும் தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம் பற்றி. என் மூலமாக அவர்தான் இந்தக்  கேள்வியை கேக்க விரும்புகிறார் எனத்  தெளிவாகப்  புரிய, "இதெல்லாம் கேக்கலாமா சார்?"என கேட்டேன். அவரோ, "அதெல்லாம் கேக்கலாம், தப்பில்லே, கேளுங்க, இருங்க லைன் கனெக்ட் பண்றேன்!" என்றார்.
                                  சிறிது நேர பீப் ஒலிக்குப் பின், தொடர்பு கிடைத்தது. என் இதயம் துடிப்பது எனக்கே கேட்டது. முதலில் பேசியவர் உமா,"ஹலோ சொல்லுங்க, இது பெப்சி உங்கள் சாய்ஸ், உங்களிடம் பேச இன்று சித்தி ராதிகா இருக்காங்க, சொல்லுங்க உங்க பேர் என்ன?"என்றார். நானும் என் பெயர், படிக்கும் கல்லூரி பெயர், எடுத்த குரூப் என எங்கள் வீட்டு நாய்க்குட்டி பெயர் தவிர எல்லாம்   ஒப்பித்தேன். "ராதிகா மேடம் கிட்ட பேசுங்க ஷஷிகலா!" என்றார் உமா. கணீர் குரலில்   ராதிகா, "சொல்லுங்க ஷஷி, எப்படி இருக்கீங்க?" என்றார். ஜென்ம சாபல்யம் அடைந்ததுபோல் பரவசமாய், "Doing fine, Madam!  உங்க சித்தி சீரியல் னா ரொம்ப விருப்பம் எனக்கு, அதுவும் உங்க அந்த ஆளுமையான கதாபாத்திரமும் உங்க நடிப்பும் அருமை!"என சொல்லி இன்னும் பல  கூறினேன். அப்போது உமா குறுக்கிட்டு, "அவங்க கிட்ட ஏதாவது கேக்கணும்னா கேளுங்க ஷஷிகலா" என்றுக்  கோர்த்து விட்டார். எச்சில் விழுங்கி, பதவிசாய் கேட்டேன், "மேடம், சரத்குமார் சார் கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன?" என்று. அவ்வளவுதான்     ஞாபகம் இருக்கிறது, அவர் அதற்கு சொன்ன பதில் அந்தக்  கேள்வி கேட்ட பதட்டத்தில் இன்று வரை நினைவுக்கு வரவில்லை, ஆனால் ஏதோ நல்ல விதமாய்தான் சொன்னார் என்பது மட்டும் தெரியும். மறுபடியும் உமா குறுக்கிட்டு, "ஷஷி, அவருக்கு இவங்க கிட்ட என்ன பிடிக்கும்னு கேளுங்க" என மறுபடி மறுபடி கோர்த்து விட்டார். நான் உஷாராக உமாவிடம். "உமா மேடம், இந்தக் கேள்வியை நான் சரத்குமார் சார் கிட்டதானே கேக்கணும்!" எனச்  சொல்ல, நல்லவேளை ராதிகா துணைக்கு வந்தார், " ஆமா உமா, இதை அவர்கிட்டதான் கேக்கணும்!"என்றார். நல்லவேளை, தப்பித்தேன். பின் எனக்குப் பிடித்த பாடலாய் அப்போது சக்கை போடு போட்டுக்கொண்டிருந்த, "உள்ளம் கொள்ளை போகுதே" படத்திலிருந்து "அஞ்சலா. அஞ்சலா" பாடல் கேட்டு விட்டுத்  தொடர்பைத் துண்டித்தேன்.
                            இந்த நிகழ்ச்சி மேலும் சில வாரங்கள் ஒளிபரப்பாகும் என்றபடியால் யாரிடமும் இதைப் பற்றி மூச்சு விடவில்லை நான். இரவு 8.30க்கு நிகழ்ச்சி ஒளிபரப்பானது, முதல் தொலைபேசி உரையாடலாய்  எனது ஒளிபரப்பானது, என் குரலை நானே கேட்ட அந்த நொடி மிகவும் விசித்திரமாய் இருந்தது. உடனே ஊரிலிருந்தும், கல்லூரி நண்பிகளிடம் இருந்தும் தொலைபேசி அழைப்புகள். கொஞ்ச நேரம் நானே சித்தி தொடரில் நடித்து பெயர் வாங்கியதுபோல் இருந்தது. அப்படி இருந்தும், "பல்கலைக்கழக தேர்வுகளுக்கு படிக்காம தொலைக் காட்சி நிகழ்ச்சிக்கு பேசிக்கிட்டு இருக்கியா??" எனும் பேராசிரியைகளின் திட்டுகளுக்கு பயந்து, மறுநாள் கல்லூரியில் மரங்களின் பின் ஒளிந்து அவர்கள் கண்களிலிருந்து தப்பியது வரலாற்றில் கிழிக்கப்பட்ட பக்கங்கள்!

No comments:

Post a Comment