Friday 11 October 2013

கார்னெட்டும் காப்பித்தூளும்

வெண்முத்து மாலைபோல்
அத்தனை 
வசீகரிப்பதில்லைதான்
கார்னெட் மாலைகள்

ஒழுங்கென்பது இல்லாது
பலவடிவப் பொடிக்கற்கள்
கோர்த்ததாய்
காப்பித்தூள்வண்ண
அந்த மாலைமேல்
ஏனத்தனைப் பிடித்தம்
முன்பற்களால் மாலைக் கடித்தபடி
யோசிப்பதில்
ஏனத்தனை மெய்மறத்தல்
உறக்கத்தில் புரள்கையில்
கனவாய் கிசுகிசுக்கும்
அந்த நெருடலில்
ஏனத்தனை ஏகாந்தம்

ஏனிந்த விழிகள்
காப்பித்தூள்வண்ணமாய்
இருக்கின்றன
என்ற
அன்றைய கேள்விக்குப்
புன்னகைத்த நொடியில்தான்
கார்னெட்கள்
உயிர்பெற்றிருக்க வேண்டும்

1 comment:

  1. தோழி
    உங்கள் கவிதைகள் அத்தனை சுயமாக இருக்கின்றன. அண்மையில் என்னால் வாசிக்கப்பட்ட சுயமான கவிதைகள் இவை. கவனம் பெறாமல் போன கவிதாயினிகள்!
    - அப்பணசாமி
    jeon08@gmail.com

    ReplyDelete