Tuesday 16 July 2013

பார்வைகளின் தீட்சண்யம்


பார்வைகளின் தீட்சண்யம் 
-----------------------------------

பாங்கு ஒலியோடு
துவங்கும்
அந்திப்பொழுதை
இரவின் வாயில்
சேர்ப்பிக்கும்
நிறையிசையாய்
பொழிகிறது
பெருமழை

-----------------------------------

அவர்கள் தொலைத்த
எதுவும் இங்கில்லை
அவற்றின் சாயல்களும்
இங்கில்லை
மனமகழ்ந்து என்னதான்
தேடலோ அறியேனில்லை
இதுவும் என்றோ 
எங்கோ
எவராலோ
தொலைக்கப் பட்டதுதான்
இருப்பினும்
அவர்கள் தொலைத்ததாய்
அர்த்தம் செய்திட்ட
எதுவும் இங்கில்லைதான்

----------------------------------------------
இன்றோடு நிறுத்தி விடலாம்
என்பவர்களின்
அந்த இன்றை நோக்கி
நகர்ந்து கொண்டிருந்தது
ஏனைய நாளைகள்

------------------------------------------------
கீரைக்கட்டினுள்
பொதிந்து வந்த
பச்சைப் புழுவின்
அடுத்தடுத்த காலைகள்
எத்தனைச் சூரியன்
கொண்டவைகளாய்
இருக்குமென்ற கேள்வி
முடியுமுன்னே
குக்கர் விசிலடித்துவிட்டது
---------------------------------------
தயங்கித் தயங்கி
மிதந்து வருகின்றன
முனைகளில்
கூர்மை மின்னிடும்
சொற்கள் 
உடனடி மரணத்திற்காய் 
எதை தேர்ந்தெடுப்பது என
குழம்பித் தவிக்கும்
பெருவெளிப்பறவை
------------------------------------------------
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்
அரசியல் பிழைத்தோருக்கு
அறமே கூற்றாகும்
உரைசால் பத்தினியை
உயர்ந்தோர் ஏத்துவர்
மாணவர்க்குக் கற்பித்தபின்
இழையோடும்
ஒற்றைப் புன்னகையில்
எத்தனைதான் மறைப்பது

No comments:

Post a Comment