Thursday, 18 September 2014

கவிதைகள்

உங்கள் விழிகளோடு
என் விழிகள்
மிகச்சரியாய் பொருந்தியதும்
எனக்குத் தெரிவதெல்லாம்
தெளிந்த
உங்கள் நிர்வாணம் மட்டுமே
உங்கள் சொற்களால்
அதனைப் போர்த்த
முயன்று முயன்று
நீங்கள் தோற்பதையும்
நான் ரசிப்பதை
இதே விழிகள்மூலம்
உங்கள் விழிகளுக்குச்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
மீண்டும் மீண்டும்
நீங்கள்
தோல்வியடைந்தபடியே
இருக்கிறீர்கள்

-------------------------------

இழுத்துக்கட்டப்பட்ட
மஞ்சள்வண்ண நெகிழித்தாளின்
கீழே அவர் இருந்தார்
பல்வேறு அளவின் காலணிகளும்
அவருடன் இருந்தன
தைக்கும் ஊசிகளின்
எண்ணிக்கைக் குறித்துத்
தெளிவாய் தெரியவில்லை
அவரின் இரண்டு மனைவியரும்
அவருடன் இருந்தனர்
பின்னொருகாலத்தில்
ஒரு அம்மன் சிலையும்
அவருடன் இருந்தது
திரைப்படக்காட்சி முடிந்த
நடுநிசி சலனங்களில்
இருந்தும்
மூச்சடைக்கும் சிறுநீர்
வாடையிலிருந்தும்
அந்த அம்மன் சிலை
அவர்களைக் காத்ததாய்
அவர்கள் நம்பினர்
சலனப்பட்டோரும்
அடக்கிக் கொண்டோரும்
கூட
அதையே நம்பினர்
மழை வலுக்கத் துவங்குகிறது
அச்சுறுத்தும் நோய்போல்
திறந்து கிடந்த
அண்மை மருத்துவமனையின்
வாகன நிறுத்தப்பகுதிக்கு
அவர்கள் இடம்பெயர்ந்ததும்
சிதறிக் கிடக்கும்
காலணிகள் மீது
பொழிவதுபோலவே
அம்மன் மீதும்
இறங்கிக் கொண்டிருந்தது
மழை
அத்தனைத் தனிமையுடன்
அத்தனைக் கருணையுடன்

----------------------------------
உள்ளே வர ஒரு வழியும்
வெளியேற மற்றொரு வழியும்
இருப்பதன் அவசியத்தை
இனியேனும் உணர்
இன்றும்
உன் ஒரே வாயிலில்
இருவேறு பிரார்த்தனைகளுடன்
நாங்கள் சந்தித்துவிட்டோம்
துப்பாக்கிக்குண்டுகள்
துளைத்த மார்புடன்
தேவனைக் காண்பதில்
எனக்கு உடன்பாடில்லை
பிரார்த்தனை நேரத் துப்பாக்கிகள்
புனிதமானவை
சரித்திரப் புகழ்பெற்றவையும் கூட

-------------------------------

கூண்டினுள் இருந்து
மிருகத்தை விடுவிப்பதைப்
போல் அல்ல
உடலில் இருந்து
உயிரை விடுவிப்பதைப்போல்
அதைச் செய்யுங்கள்
இனியெப்போதும்
கூண்டின் அகலமும்
உடலின் சிலிர்ப்பும்
நினைவில் எழும்பவியலாதபடி
அதைச் செய்யுங்கள்
உடனடித் தேவை
என் இந்த விடுதலை மட்டுமே
உங்களிடமிருந்தும்
உங்கள் இருளில்
விலங்கிடப்பட்டிருக்கும்
தூயக் கண்களையுடைய
என் கருணையிலிருந்தும்

-----------------------------------
ஒவ்வொரு அதிர்விலும்
பலவீனமாகிக் கொண்டே செல்லும்
நிலத்தகடுகள் போல்தான்
நீங்களும் இருக்கிறீர்கள்
உங்களை உடைத்து உடைத்து
மேலும் பலவீனங்கள்
உங்கள் மீது
காலூன்றி நிற்கின்றன
இறுதி அதிர்வில்
அவற்றோடு
நீங்களும் புதையுண்டு போகிறீர்கள்
உங்கள் மேல்
புதுத் தகடுகள்
முளைக்கின்றன
தயைகூர்ந்து
அதனை
மறுபிறப்பு என மட்டும்
சொல்லாதீர்கள்

--------------------------


நீண்ட நாட்களுக்குப்பின்
அந்தச் சிறுமியைக் கண்டேன்
நீலப் பினபோர் அணியாத சிறுமி
விரல்களால் செவிகளை
அடைத்தபடி
ஒவ்வொரு இடியோசைக்கும்
உடல் குலுங்கினாள்
அடுத்த வான் அதிர்விற்காய்
அச்சத்துடன்
காத்திருந்தாள்
மழையில் நனைய விரும்பாதவள்
மழை விரும்புபவள்
அலறியபடி நகரும் ஒரு ஒளிமரவட்டைப்போல்
கடந்து செல்லும் இடிகள் கேட்டு
நடுங்குகிறாள்
வாழ்வில் எத்தனையாவது
முறையாகவோ
தாயின் சேலைநுனி தேடிச் சலித்து
தன் மழலையின் விரல்
பிடித்துக் கொள்கிறாள்
கடலுக்குள் இறங்கிச்செல்லும்
இடிகளின்
காலடி ஓசைகள் கூட
கேட்கிறது அவளுக்கு
ஒரு மந்திர உச்சாடனம் போல்
இடிகளின் முன் பெய்தது போலவே
பின்னரும்
மழை பொழிகிறது
சிறுமி மீண்டும் பெண்ணாகிறாள்
நான் உறங்கத் துவங்குகிறேன்

-------------------------No comments:

Post a Comment