Monday 25 August 2014

விடுவித்து விட்டேன்

இந்த ரணத்தில் இருந்து
உங்களை முற்றிலும்
விடுவித்து விட்டேன்
இனி எந்தச் சிறு முயல்விலும்
உங்களால்
அழிவுணர முடியும்
அல்லது
முயல்வுகள் அற்றும் கூட

பறக்கத் தொடங்காத
விழிதிறவா குஞ்சுப்பறவையின்
சிறகுகளை
செவ்வெறும்புகள் சுவைப்பதுபோல்
உங்கள் அசைவுகளை
தொடர்ந்து
ரசித்து வருகின்றேன்

உங்களை முற்றிலும்
விடுவித்து விட்டேன்
ஆம்
உங்கள் வானில் இருந்தும்
உங்கள் சிறகுகளில் இருந்தும்

விஷக்காலம்

விஷம்போல்
காலம் சொட்டிக் கொண்டிருக்கிறது

புகைப்பட விழிகளை
எத்தனை நேரம்தான்
வெறிப்பது?
மூளைக்குள் எதிரொலிக்கும் குரலின்
நரம்புகளை
எப்படி அறுப்பது?

சட்டைப்பொத்தானில் சிக்கிய
கூந்தலைப் பிரித்தெடுத்தபோது
உயிர் நிரப்பிய வாசம்
ஒரு மிருகம்போல்
எதிரில் நிற்கிறது

விஷம்போல்
சொட்டிக்கொண்டிருப்பது
காலம் மட்டுமேதானா?

சிங்கமுகன்

மீண்டும் கதை சொல்லத் 
துவங்குகிறார் வழிகாட்டி
பிளந்து கிடந்த மலையின்
இடையே 
ஒரு மொட்டுபோல் எழும்பியிருந்தது
அந்தக் கோயில்

சிங்கமுக தெய்வம்
அரக்கனொருவனை
மலைமுழுதும் சுழற்றியடிக்கிறது
சமர்புரிந்த இடங்களிலெல்லாம்
கோயில் கொள்கிறது

தெறித்து விழுந்த
அரக்கனின் கண்மணிகளை
இறகு முழுதும் தெளித்தாற்போல்
சிறு பொட்டுகளுடன்
ஒரே வண்ணப்
பட்டாம்பூச்சிகளைக் காண்கிறேன்

கோவில் மதிற்சுவர் சிதைத்து
முளைத்திருக்கும் செடியின் மலரில்
வறண்டு கிடந்த குளத்தில்
கோவில் படிகளில்
ஈச்சம்பழம் விற்கும் சிறுமியின் கூடையில்
இரக்கத்திற்காய் பெருநோய்க்காரன்
திறந்து வைத்திருந்த அழுகிய பாதங்களில்
என
எங்கும் அதே பட்டாம்பூச்சிகள்

கதைசொல்லி முடித்து
கட்டணக்கழிவறை நோக்கி விரையும்
அவரையும்
ஒரு பட்டாம்பூச்சி கடந்து செல்கிறது

பட்டாம்பூச்சிகளின் நிலத்தில்
சமர் செய்த சிங்கமுகனை
அவை
மன்னிக்கத் தயாரில்லை
என்பதை
அவர் சொல்லவேயில்லை

கோவில் வளாகத்துள்
எங்குமே
பட்டாம்பூச்சிகள்
இருக்கவில்லை

Wednesday 13 August 2014

மாதுளைக் கண்கள்

விலகி இரும் ஈசனே
நீண்ட அலகுடன் 
பட்சியென வந்த
உமக்கான
கடைசி தானியத்தை
விதைத்துவிட்டேன்

இனி அதில் பழுக்கும்
நெற்றிக்கண்களை
மாதுளை முத்துக்கள் போல்
உடைத்துக் கொறிப்பேன்

கடலும் அவளும்

மேடாகி நிற்கும்
புதுத் தார்ச்சாலையின்
இருமருங்கும்
தயங்கித் தேங்கும்
மழைநீர் குழந்தையை
விரல் பிடித்து அழைத்துச் செல்லும்
முதியவன் போல்
தள்ளாடிச் செல்லும்
சிறுமியின்
ஒற்றைக் காகிதக்கப்பல்

-----------------------------------------------

கடல்வரைச் சென்ற
நதியை
உடலுக்குள் வீசிய புயல்
திசை திருப்புகிறது

மிரண்டு போகும்
நதி
மலைக்குகைகளுக்குள்
ஓடி ஒளிகிறது

நீங்களும் அதனை
அருவியென
அழைக்கிறீர்கள்

கடலில்
கலக்கும் அருவிகள்
நதியெனும் பெயரோடு
வருவதில்லை எனக்
கடல்கள் அறியும்

கடலென்பது
புவியீர்ப்புவசத்தால்
சற்றே தாழ்ந்திருக்கும்
அலையடிக்கும் அருவிதாம்
ஓடி ஒளியும்
நதியல்ல


--------------------------------------

சிறுமி கிளிஞ்சல்கள்
சேகரிப்பதுபோலவே
இவள்
இத்தனைக் காதல்களை
சேமித்திருந்தாள்

அலைகளின் இடையில்
கிளிஞ்சல்களை
வீசிவிட்டு நகர்பவளின்
கால்களைப் பற்றியிழுக்கும்
கடல் மேல்
அவள்
அதீத கருணையோடிருந்தாள்
அன்று


-----------------------------------------------
அதே பாவனைகளுடன்
அதே அலைகள்
அல்லது
புதிய அலைகள்
அதே கடல்
அதே பறவைக்கூட்டம்
அல்லது’
அவற்றின் வம்சாவளி இறகுகள்
அதே உடைந்த பானைகள்
அதே நண்டுகள்
அதே நண்டுகளின்
மிகப்பழைய கொடுக்குகள்
அதே மணலின்
அதே ஈரம்

பின்னர்
அதே அவள்
அல்லது
புதிய அவள்
முன்பொருமுறை நிகழ்ந்ததுபோல்
இன்றும் மூழ்கினாள்
அல்லது
இன்று வெளியேறினாள்


------------------------------------------

Friday 8 August 2014

குற்றமற்றதன் புகல்

பயணப் பாதையில்
விசித்திரமாய் ஓசையிட்டு
மறையும் பறவையினுடையதைப் போல்
அந்தக் குரல்
அத்தனைப் புதியதாய் 
இருந்தது இன்று

இரண்டு ஜன்னல்களுக்கும் இடையே
இருந்த
அத்தனைத் தொலைவையும்
இந்த மழை
சிலந்தி உமிழ்ந்த இழைபோல்
இணைத்துக் கொண்டிருந்தது

கொஞ்சம் கொஞ்சமாய்
தழையத் துவங்கியிருந்தக் குரல்களின்
நிழலில்
ஆதியுணர்வை புதைப்பதுதான்
எத்தனைச் சிரமமாய்
இருந்து விடுகிறது?

நிலத்தின் வெம்மை
மெல்லிய நூலாடைபோல்
எழும்பத் துவங்கியதும்
மறுபக்கம் இருந்தத் துளிகள்
கூச்சமாய்
நெளிந்து விழுந்தன

குற்றமற்ற ஒன்றைப்
பொழிந்துவிட்டதன் ஆறுதலோடு
அந்தக் கடைசிச் சொல்
காற்றிலாடும்
ஒற்றை வர்ண ஒளிபோல்
மினுங்கி மினுங்கி
வளைமாற்றுப்புள்ளிக்குள்
நுழைந்தது

சாட்டின் ரிப்பன் புறாக்கள்

புதிதாகப் போடப்பட்டிருந்தத்
தார்ச்சாலையின் குறு ஜல்லிக்கற்கள்
பள்ளி வாகனத்தின் தகடுகளில்
பட்டுத் தெறிப்பதை
தன் பாதங்களால்
ரசித்தபடி அமர்ந்திருக்கிறாள்
நீலச்சீருடைச் சிறுமி

பிரமிடும் குட்டி குட்டி ஒட்டகங்களும்
தெர்மாக்கோலில் இருந்து
அவள் மடிமீது விழும் சமயத்திற்காய்
காத்திருந்தன

வெண்ணிறச் சாட்டின் ரிப்பன்களை
புறாக்கள் போல்
அவள் சூடியிருப்பதாய்
புறாவொன்று என்றேனும்
அவளிடம் சொல்லவும்கூடும்

புதிதாய் அறிமுகமாயிருக்கும்
கருப்பு போர்பான் குறித்து
அம்மாவற்ற நேரத்தில்
அப்பாவுடன் ஆலோசிக்கவும்
சுமித்ரா மிஸ்ஸிற்கு
பிறந்தநாள் வாழ்த்து சொல்லவும்
வார்த்தைகளைக்
கோர்த்துக் கொண்டிருந்தவளைக் கடந்து
செல்பவன்
நிதானமாய்
ஆபாச சமிக்ஞை செய்கிறான்

நீலச்சீருடையையும்
அதனுள் பொதிந்திருந்த
பெண்ணுடலையும்
அந்த நொடி அவள் உணர்கிறாள்

அவை
ஒரு கொடிய விலங்கு போல்
அவளை நோக்கித்
திரும்புகின்றன

புதியவை

புதியவை சில சேர்ந்து
புதிய ஒன்றைச் செய்தன
பழையவை எல்லாமும் கூடி
புதியதை வெறுத்தன
பழையவைகள் ஒவ்வொன்றாய்
உதிரத் தொடங்கின
புதியவைகள் செய்த
புதிய ஒன்று
உதிர்ந்த பழையவைகளுக்காய்
இரங்கற்பா ஒன்றைப் பாடித்
தன் ஆட்சியைத் துவங்கியதும்
மண்ணுள் புதைந்த
பழையவைகள்
சவப்பெட்டியைப் பிராண்டும்’
ஓசையுடன்
அன்றைய இரவு துவங்கியது

மழை

தன்னைக் கடக்கும் 
மழையைத் 
தங்கச்சரடுகளாக்கி
வியந்து கொண்டிருக்கும்
தெருவிளக்கு

அதன் நெளிந்தோடும்
மஞ்சள் ஒளிப்புழுக்களைத்
உண்பதற்கு
சரேலென இறங்கும்
பறவையாய்
இந்தக் கூர் அலகு மழை

தெருவிளக்கையும்
மழையையும்
கவனியாது
ஒரு திரை போல்
அசையும் சில் இரவு


---------------------------
ஜன்னலின் மிக அருகே
எழுதப்படும்
இந்த வரிகளின்
முடிவில் தெறிக்கிறது
ஒரு துளி

வழிதவறி எங்கோ
சென்றுவிட்ட தன் மழலையை
தேடும் தாயென
வெளியே
அலறிப்பொழியும் மழை


---------------------

அசையும் மேடை மேல்
நடனமிடும்
பேரழகு நங்கைபோல்தான்
இந்த மழை
இந்த நொடி
அந்தக் கடல் மேல்
பொழிந்து கொண்டிருக்க வேண்டும்


----------------------------

சலனமற்றத் தவசிபோல்
இறங்கி வரும் மழை
ஆதியோடந்தம் தன்னைத்
திறந்து கொள்ளும் நிலம்
நொடிநேரக் கலப்பில்
பெரும் ராட்சசன் போல்
உருவாகும் மண்வாசம்
ஒரு மர்மப்புகையாய்
அனைத்தையும்
விழுங்கும்


----------------------------------

முதல் சீம்பால் போலும்
தொடக்கத்தில் கெட்டித்தும்
பின்னர் நீர்த்தும்
பொழிவதாய்
மாய்மாலம் செய்கிறது
இந்த
வெளிர்மஞ்சள் மழை


-------------------------

இரவுகளின் பின் அலைபவள்

இரவுகளின் பின் அலைபவள்
குறித்து 
உங்கள் மதிப்பீடுகள் 
அனைத்தையும் பரிசீலிக்கிறாள்
அவள்

நோய் முற்றியவள்
மனநல ஆலோசனை வேண்டியிருப்பவள்
பகலில் உறங்குபவள்
காமம் தீராதவள்
காலைச் சமையலுக்கு
பணிப்பெண் அமர்த்தியிருப்பவள்
என
இன்னும் பல

ஒரு கனவில் இருந்து
மற்றொன்றிற்குச் செல்கையில்
வழிதவறி இங்கு
வந்துவிட்டவள் அவள்
என்பதை
ஒரு மரங்கொத்திபோல்
உங்கள் இரவுகளைப்
பிளந்து கொண்டிருக்கும்
ஏதோ ஒன்று
மிகச்சரியாய் மதிப்பிட்டதை
ஏன்
அன்று உதாசீனப்படுத்தினீர்?

கைகாட்டி மரம்

எல்லா கைகாட்டி மரங்களும்
ஒரே
புதைகுழிக்கு
இட்டுச் செல்கின்றன
இறுதியாய் பார்த்த
கைகாட்டிமரம்
மிகுந்த அன்னியோன்யமாய்
இருந்தது
ஒரு மலரும் சில இலைகளும்
பரிசளித்து அனுப்பி வைத்தது

அவை
அந்த கைகாட்டி மரத்திலேயே
துளிர்த்திருந்தன

பிணங்களின் நகரம்

பிணங்களின் நகரம்
-------------------------------

வாசல் வாதாம் மரத்தின்
வேர்கள்
ஒரு பிணத்தின் கரம்பற்றிக்
கிடந்திருக்கும்

இன்று தலைமேல் உதிர்ந்த
மஞ்சள் மலரில்
முந்தைய
மழலைப் பிணத்தின்
விழித்திரை அசைந்திருக்கும்

மழையில் ஊறிய பிணங்கள்
வரலாற்றின்
ஊற்றுக்கண்களை
அடைத்ததும்
பொன்னிற அரவம்போல்
இருந்தக் கடற்கரையின்
மணற்துகள்களெல்லாம்
பிணவீச்சத்தில்
அதிர்ந்திருக்கும்

பிணம்போல்
பிரக்ஞையற்றுக் கிடந்தவை
நோக்கி
ஆதிக்கப் பிணங்கள்
சிரித்திருக்கும்

பிணங்களின் மீது
எழுந்து நிற்கும்
நகரம்
மீண்டும் மீண்டும்
பிணங்கள் விழுங்கி
இன்னும் இன்னும்
பிணங்களால்
எழுந்து
பிணங்கள் நோக்கி
நகர்ந்து கொண்டே
இருக்கும் நகரம்

விழுந்து உருளும் வெயில்பழம்

சிகப்பு விளக்கு ஒளிர்வதை
தொலைவில் இருந்தே
கண்டுவிட்டதும்
வெயிலை வடிகட்டி ஒழுக்கியிருந்த
மரத்தின் கீழ் நிற்கிறீர்கள்

நடைபாதையில் முகம்மூடிப்
படுத்துக்கிடக்கும் உருவத்தின்
வெளித்தெரியும் பாதங்கள்
ஆணுடையதுதானோ எனச்
சந்தேகிக்கிறீர்கள்

நேற்றைய மழைநீர் தேக்கியிருந்த
சாலைப்பள்ளத்தின் விளிம்புகள்
சமீபத்தில் உங்களைச் சலனப்படுத்திய
பெண்ணின் காதுமடல் வளைவுகளை
உங்களுக்கு நினைவுறுத்துகிறது
ஒரு பெருவாகனம் காதுமடல்களின்
மீதேறி முன்னே செல்கிறது

கண்ணாடிச்சில்லுகள் பதித்திருந்த
சுற்றுச்சுவரை காயமில்லாது கடந்துவிடும்
முறைகளை யோசிக்கிறீர்கள்
இரத்தம் என்பது
சாகசங்களின் தேவன்
என முடிவு செய்கிறீர்கள்

சுவரில் ஒட்டப்பட்டிருக்கும்
இறுதியஞ்சலி வாசகங்களைக் கண்டு
மெல்லியதாய் புன்னகைக்கிறீர்கள்
உங்களைக் கண்டு வாசகங்களின்
மேல் இருப்பவனும் புன்னகைக்கிறான்

தேர்ந்த போர்வீரன் போல்
எண்கள் முன்னோக்கி ஓடுகின்றன
பெரும் இரைச்சலுடன் விழிக்கும்
மிருகம் போல்
வாகனங்கள் உறுமுகின்றன
நீங்கள் நகர்ந்து வேகம் கூட்டுகிறீர்கள்

அத்தனை நேரம்
உங்கள் உச்சியில்
வெயில் கொண்டு
மரம் எழுதியிருந்த
அந்த மஞ்சள் ஓவியம்
ஒரு கனி போல்
சாலையில் விழுந்து
உருள்கிறது

எண்களுடன் விளையாடுபவள்

உலர்ந்த ரொட்டித்துண்டுபோல்
விறைத்து விழுந்து கிடந்தது
அந்தப் பகல்
பிரம்மாண்ட தொழில்வளாகத்துள்

குதிகால் உயர்ந்த செருப்புகளால்
அதை
நொறுக்கி நொறுக்கி
முன்னேறிக் கொண்டிருந்தவளைக்
கலைக்கிறது காற்று

நாபிச்சுழியில் சிக்கி
அலைபாய்வதாய்
பன்னாட்டுக் நிறுவனக் கட்டிடங்களும்
ஒரு நொடி
சுழன்று நின்றன


------------------------

எண்களுடனும்
எண்ணங்களுடனும்
விளையாடிக் கொண்டிருப்பவளை
மனதால் பிறழ்ந்த குழந்தைகளின்
காப்பகத்திலிருந்து அலைபேசி
அழைக்காதே நண்பா

பார்
பூஜ்யத்தின் வட்டத்திலிருந்தும்
சதுரங்க முனைகளில் இருந்தும்
நான் நழுவி
விழுந்துகொண்டே
இருக்கிறேன்

அத்தனை உயரத்திலிருந்து
விழுந்து விழுந்து
அந்தக் காப்பகத்தின் முகப்பில்
இன்று மாலைக்குள்
மூர்ச்சையாகிக் கிடப்பேன்

அப்போது உற்றுப் பார்
அங்கிருக்கும்
அனைத்துப் பாதைகளிலும்
என் பழைய காலடிகள்
புதைந்திருக்கும்
உடன்
ஒரு ஜோடி
இளைய காலடிகளும்


=----------------------------