Sunday 13 July 2014

சிறுவர்கள் பெண்களாகிக் கொண்டிருந்தனர்

பெண்கள் எல்லோரும்
ஒருமனதாய் முடிவு செய்தபின்
அது நிகழ்ந்தது
அடுத்திருந்த பால்வீதியின்
ஏதோ ஒரு
மணற் துணுக்கிற்கு
அந்த இரவில்
அவர்கள் இடம்பெயர்ந்தனர்
அதிகாலை முதல் காப்பியின்
தாமதத்துடன்
கண்விழித்த ஆண்கள்
காலைக்கடன்களை
நிலுவையில் வைக்க நேரிட்டது
குழந்தைகள்
வெகு தைரியமாய்
பள்ளி செல்ல மறுத்தனர்

முப்பத்திமூன்று சதவிகிதத்திற்காய்
இனிக் கூச்சல்கள் இல்லை
பர்தாக்கள் இல்லை
கௌரவக் கொலைகள் இல்லை
பிரசவ மருத்துவமனைகள்
அழகு சாதனங்கள்
உறுப்புவர்ணனைக் கவிச்சித்தர்கள்
ஆடித் தள்ளுபடிகள்
குழந்தைப் பேறு அருளும்
தெய்வ அவதாரங்கள்
திரைத்துறை அதிபர்கள்
இன அழிப்பிற்காய்
குண்டுகள் செய்தவர்கள்
காய்கறிச் சந்தைகள்
வகைவகையானக் கோயில்கள்
விபச்சார விடுதிகள்
பேருந்தின் பெண்கள் இருக்கைகள்
நாப்கின் தயாரிப்பாளர்கள்
என
இன்னும் பலதுகள்
ஸ்தம்பித்ததும்
முதல் பெண்போல்
இயந்திர பொம்மை
செய்தவன்
அன்றைய இரவே
தன் தாயின் சேலை நுனியில்
முடிச்சிட்டு மாண்டான்

தலைகீழ் இயற்கைச்சுழற்சியில்
கனி மலரானதுபோல்
சிறுவர்கள்
பெண்களாகிக் கொண்டிருந்தனர்

வாயிற்காப்பாளன்போல் சம்பிரதாயப் புன்னகை

சாளரத் துளைகள் மூலமாய்
பாயும் ஒளிக்கீற்றுகளின்
இடையே
மறித்து வைத்து
இரத்தச் சிவப்பாகும்
கை விரல்களை
வியந்து நோக்குகிறாள்
சிறுமி

இறுதி வெளிச்சத்தைக்
கடந்து கொண்டிருந்த
கடைசி பறவை
ஒரு கணம்
நிதானித்துவிட்டு
திசை மாறுகிறது


-----------------------------------

துளிர்த்த நாள்
முதலாய் உதிரத்
துவங்கியதுபோல்
அத்தனை
ஆயாசத்துடன் கிடக்கும்
சில சருகுகள்

உதிர்ந்த நொடியே
மலர்ந்து
விட்டதைப்போல்
அருகில் ஒரு மலர்

மிகச் சரியாய்
தண்ணீர் லாரியின்
சக்கரங்கள்
காலத்தை அரைத்துப்
பயணிக்கின்றன


-----------------------------------------

நேற்றையக் குயிலின் குரல்
ஒரு இறகுமெத்தை போல்
படர்ந்து கிடந்த
மரக்கிளையில்
அடிவயிற்றின்
மென் உரோமங்கள் உரச
தணிந்து கிடக்கிறது
தாய்ப்பூனை


-------------------------------------------

சிறுமழையின் பின்
படிகளில் ஓடிவரும்
நீரைச் சிறு ஓடையென
எண்ணுகிறாள் சிறுமி
கொஞ்சம் புற்கள்
சில மீன்கள்
தூர மலையும்
வெறிக்கும் மேகமும்
வரைந்த பிறகு
ஓடையைத் தாண்டிச் 
செல்கிறாள்

அவளின் சாலையில்
கடல்
காத்திருந்தது


-------------------------------------------
பிணைத்திருந்த
உள்ளங்கைகளில்
ஒவ்வொரு விரலாய்
பிரித்தபின்னர்
ஒரு பிரிவு சாத்தியமானதுதான்
அன்று உண்ட
திராட்சை ஏன்
அத்தனைப் புளிப்பாய்
இருந்தது என விவாதிக்கவும்
இருவரும் மறந்திருந்தோம்
ஒரு வாயிற்காப்பாளன்போல்
சம்பிரதாயப் புன்னகையுடன்
ஒவ்வொரு நாளும்
காத்திருக்கும்
அந்த
இறுதி முத்தத்தைத்தான்
என்ன செய்வதென்று
இருவருக்கும்
தெரியவில்லை
இன்றுவரை


-------------------------------------------

கொல்லைப்புற முருங்கைகளுக்கான பழக்க விழிகள்

காய்ந்து 
வெடித்து
நீண்டிருக்கும்
காய்களுடன்
ஸ்ரீசைலம் மலை முழுக்க
முருங்கை மரங்கள்
வழக்கத்தைவிடப்
பெரிய இலைகளுடன்

முருங்கை மரங்கள்
காட்டிற்கு உகந்த
மரங்களல்லவே
என எண்ணும்போதே
சிங்கம் போல்
உருவகப் பிழையுடன்
ஒரு பாறை
மரங்களின் இடையே
துருத்தி நிற்கிறது

முருங்கைக் காடுகளில்
சிங்கம் வசிக்குமா
எனக் கேள்விகள் கேளாமல்
ஒரு கணம்
திடுக்கிட்டுத் திரும்புகிறது
கொல்லைப்புற முருங்கைகளுக்கான
பழக்க விழிகள்

என் மழலைகள் குறித்து நீங்கள் அறிந்தது இல்லை

இவற்றை
எப்படிச் சொன்னால்
உங்களிடம் மிகச்சரியாய்
வந்து சேரும்?

கையெழுத்துகளின்
பிரதிபோல்
என்னை உபயோகிப்பதை
இனியேனும் நிறுத்துவீர்களா?
உங்கள் மேல் 
எறியப்பட்ட அழுகிய தக்காளிகளை
வழித்தெறிய
டிஷ்யூ காகிதம்போல்
இனியும் என்னை
உபயோகிக்க மாட்டீர்கள்தானே?
உங்கள் மழலைகளை
எவர் அடித்தாலும்
அவரின் இல்லத்தின்
வாசல்வரை
என்னையும் துணைக்கழைப்பதை
இனி முயல மாட்டீர்தானே?

நினைவு கொள்ளுங்கள்
என் மழலைகள்
குறித்து நீங்கள்
அறிந்தது இல்லை
அல்லது
அறிந்ததே இல்லையென
பாவனை செய்கிறீர்கள்

அங்கீகாரத்தின் சிவப்பு முத்திரை

முன்னரே இதுபோல்
நிகழ்ந்துள்ளதுதான்
மிக அரிதான
நிகழ்வும்தான்
எனினும் நேற்று மீண்டும்
நிகழ்ந்தது
முதல் முறையின்
திடுக்கிடல் போல்
அதே திடுக்கிடல்

வகுப்பறையில் இருந்தே
அவளின் தாயாரை
காற்றலைகள் மூலமாய் அழைத்திருந்தேன்
உதிரக்காட்டில்
முதன்முறையாய்
வழிதவறி நிற்கும்
அந்தச் சிறுமியை
கிளையிலிருந்து விழுந்தக்
குஞ்சினைத் தாய்ப்பறவை
அணைப்பதுபோல்
காத்திட எனக்குத்
தெரியவே இல்லை

தன்னிடம் சொல்லப்பட்டிருக்கும்
இயற்கையின் செய்தி
இம்முறை
வன்முறையோடு
இருப்பதாய்
அவள் முடிவெடுத்திருக்கக்
கூடும்தான்

அங்கீகாரத்தின்
சிவப்பு முத்திரை
இன்று
தன் உடல் மேல் அழுந்தப்
பதிந்திருப்பதாய்
நிலத்தோடு அமிழ்ந்து
அமர்ந்திருந்தாள்

மெல்லிய புயல்போல்
நுழைந்தத்
தாயைக் கண்டதும்
சிறுமியின் உடல்
ஒருமுறை அதிர்ந்து
அடங்கியது
கடைசி சுவாசத்தின்
முன் நிகழும்
வீரிய உதறல் போல

பீச் பழங்களை உண்பவளில்லை

மணமக்களின் பின்
பூத்திருந்தன
பீச் வண்ண 
மலர்கள் 

புகைப்படம் எடுத்துக்கொள்ள
மேடையேறியச் சிறுமி
எவருமறியாது
ஒன்றைப் பறித்து
வியர்த்திருந்த கைகளுக்குள்
பத்திரப்படுத்துகிறாள்
அவள் பீச் பழங்களை
உண்பவளில்லை

விரல்களின் வழியே
மேலேறி
அச்சத்தில் துடிக்கும்
அவள் இதயத்தை
பீச் வண்ணப் புகைபோல்
சூழ முயல்கிறது
ஈர மலர்

நிதானமாய் எரியத் துவங்குகிறது சிதை

நீண்ட நேரமாய்
ஒரு தனிமைக்குக்
காத்திருந்தாற் போல்
கடைசி ஆளும்
சென்று விட்டபிறகு
நிதானமாய்
எரியத் துவங்குகிறது
சிதை

-------------------------------------------

தன் வயிற்றில்
ஜனித்த சிசுவின்
எரிப்பிற்குப் பின்
பானையில் எஞ்சியிருக்கும்
சாம்பல்

எரியாத மூட்டெலும்பை
நுகர்ந்து பார்க்கத்
தவிக்கும் அவளை
குரூரமானவள் எனச்
சொல்வீர்களா
நீங்கள்

-----------------------------------------------

மருத்துவர்
உறுதி செய்வதற்கும்
இறுதி சிறுநீர் 
பிரிவதற்கும்
இடையே
சில நொடிகள்
இருந்ததென்பது
மட்டுமே
மூர்ச்சையாவதற்கு முன்னதான
அல்லது பின்னதான
அவளின்
ஒரே சிந்தனை

-----------------------------------------------

கரையில்
மிக லாவகமாய்
கால்களை நீட்டி
கடலில் இருந்து
பிரிந்து வந்த
ஒற்றை அலைபோல்
அமர்ந்திருக்கிறாள் அவள்

அவளின்
குழந்தை அலை
தவழ்ந்து தவழ்ந்து
எப்போதோ
நடுக்கடலுக்குச்
சென்று விட்டிருந்தது


----------------------------------------------

பச்சை சம்பங்கி

பச்சை சம்பங்கியை
அந்தப் பூக்கடையில்
பார்த்ததில்
மிகுந்த அதிர்ச்சி

எல்லா மலர்களும்
விற்பனைக்கு வருவது
ஏன் அத்தனை
உவப்பானதாய்
இருப்பதில்லை?

----------------------------------------


குளிரூட்டப்பட்ட
காய்கறிக்கடையின்
வாசலில் குழறியபடி
பால்யகாலத்தின்
ரிக்‌ஷாக்காரர்

வெண்டையின் நுனிகள்
மிக
மிக
மிக
நிதானமாக
உடைந்து விழுகின்றன

-----------------------------------------
இந்தப்
பெருமழையின் பின்
மாநகரத்தில்
மிருதுத்தன்மை
கூடியிருக்கிறது

மொட்டைமாடி 
துணி உலர்த்தும்
கம்பியை
உரசிச் சென்ற
பேரிடி
இறுதியாய்
எங்கு முடிந்திருக்கும்


------------------------------------------

எனக்கான பட்டாம்பூச்சிகள்
எல்லாம்
சிகப்பு மரவட்டைகளாக
மாறிவிட்டிருந்தன

ஒவ்வொரு மழைக்காலையிலும்
கதவிடுக்குகளில்
நசுங்கி இறந்துகிடக்கும்
சிகப்பு மரவட்டைகள்
சிறகுகளைத்
தொலைத்த கதைகளைதான்
என் புத்தகங்களில்
இன்றும் தேடினேன்


-------------------------------------------

பழுப்பும்
மஞ்சளும் பச்சையுமாய்
விரிந்து கிடக்கும்
வாசல் மரத்தைத்தான்
மயிலென
உருவகித்திருந்தாள் சிறுமி

முதன்முறையாய்
மயிலம் கோவிலில்
கூண்டிற்குள்
மயிலைக் கண்டதும்
கூண்டு தேவைப்படாத
மரத்தினை எண்ணி
ஆசுவாசமடைகிறாள்


---------------------------------------

Tuesday 1 July 2014

கனி நழுவி விழுதல் போல்

மஞ்சள் பூசணிமலர் போல்
அத்தனை அழகாய்
விரிந்திருந்தது
வயிறு

இட வலமாய் நகரும்
மருத்துவச்சியின்
விரல்களில்
படிந்திருந்தது
மகரந்தத்துகள் அசைவு

---------------------------------------------------

உள்ளுக்குள்
சுழன்று சுழன்று
மரத்திலிருந்து
கனி நழுவுவதுபோல்
வெளியேறும் சிசு

தன்னைத் தானே
தின்னும் மிருகம் போல்
அழுந்தக் கடித்திருந்த
உதடுகளில் 
முதல் இரத்தத் துளி

-----------------------------------------------------
கட்டுகளில் இருந்து
அவிழ்க்கப்பட்டதும்
ரயில்பெட்டிகளாய்
தடதடக்கும் கால்களுடன்
இறங்கி நடக்கிறாள்

ஆதுரமாய் அவளைப்
பற்றிட வழியறியாது
திணறித் தவிக்கும்
நிலம்

---------------------------------------------------------