Monday 12 May 2014

மஞ்சள் கீதங்கள்

கனவுகளென்றால்
அச்சம் கொள்பவளை 
அறிவீரா

புத்தக அலமாரியிடுக்கில்
இரவுகளைப் புதைப்பவளை
கனவுகள் விரட்டிவருவதாய்
உறுதியாய் நம்புபவள்

புனைவுக் கதைகளுக்குத்
தன்னை ஒப்புக்கொடுத்திருந்த
நல்லிரவொன்றில்
தன்னிச்சையாய் சிக்கிக்கொண்டனள்
வழமைக்கனவில்

வெளிறிய முகத்தோடு
பூங்காமூலையிலிருந்து
அந்த மஞ்சளுடைச் சிறுமியை
வெகுநேரம் அழைத்தபடியிருந்தாள்

வழமைபோல் ஏனையோர்
அவளைப் பைத்தியமாய்
சித்தரித்துச் சிரித்தனர்
அவர்தம் விழிகளுக்கு
புலப்படாதிருந்தச் சிறுமியை
தொடர்ந்து விளித்தனள்

அருகில் வந்தச் சிறுமி
வழமை புன்னகையுதிர்த்து
பெருமரம் பின் மறைந்தனள்

வெள்ளி முளைக்கத்துவங்கிய
நேரம் கண்ணீருடன்
அலறி எழுந்தவள்
நினைவிலிருந்து நழுவிய
ஏதோவொன்றை
இழுத்து அணைத்துக்கொள்கிறாள்

அது சன்னமாய் ஒலிக்கத்
துவங்குகிறது
இறுதிநாளில்
மஞ்சளுடை அணிந்திருந்த
அவள் மகவின்
கீதங்களை

சுழித்து ஓடுகிறது பூங்காற்று

யுகங்களாய்
சூரியக்கணைகளால்
துளைக்கப்படாதச்
சுனையில் இறங்குகிறாள்
சிறுமி
அவசரச்செய்தி சொல்பவன்
போல் மலையெங்கும்
சுழித்து ஓடுகிறது
பூங்காற்று

-------------------------------

குகைகளுக்குள்
சித்தர்களை அவள்
எதிர்பார்ப்பதில்லை
செண்பக மலர்கள்
தூவிக்கிடக்கும்
படிகளின் மீது
சற்றே அழுந்தப் பாதம்
பதித்து நடக்கிறாள்

--------------------------------

வள்ளி மஞ்சளரைத்தக்
கல்லுடன்
அந்தக் குளம்
அங்கேயே கிடந்தது மலைமேல்
பாறை மறைவிலிருந்து
விடுபட்ட அவர்களைக்
கண்டு கல்லுக்கடியில்
நாணிப் பதுங்குகிறது
பழைய தேரை

--------------------------------

அனல் தகிக்கும்
வள்ளிமலை படிகளில்
ஈரச்சேலையுடன்
ஏறிச் செல்பவளை
வெயில் வழியும் விழிகளுடன்
உற்று நோக்குகிறது
மரத்துக் குரங்கும்

-----------------------------------

Thursday 1 May 2014

வெயில்

மீன்சந்தையில்
விரால்கள் மிதக்கும்
நீரின் மேல்
கடலில் காயும் வெயில்

-----------------------------------------------------------------
\
கிளிஞ்சல்கள் சேகரிக்கும்
சிறுமியின் பின்
எதை சேகரிக்க அலைகிறது
இளம் வெயில்

------------------------

ஆண் மயிலிடமிருந்து
பெண் மயிலிடம்
இடம் பெயர்கிறது
வெயில்

-----------------------

வெயில் போர்த்தி
கவிழ்ந்து கிடக்கும்
பிணங்களை
கடந்து சென்று கொண்டே
இருக்கின்றன
சரக்கு ரயில்கள்

-----------------------

உச்சிப் பொழுதுகளில்
தலைமேல்
கனக்கும் வெயிலை
மெல்ல இறக்கி
மார்போடணைத்து
அமுதூட்டத் தொடங்குகிறாள்
வனாந்திரப் பேச்சி

----------------------

வெயில் சேமிக்கும்
தேனீக்கள் குறித்து
உங்களை விடவும்
மலர்கள்
நன்கறியும்

----------------------