Thursday 27 February 2014

விசுவாசித்தலும்

நோவா பேழையின்
இருள் மூலை கிடந்த
வெண்பன்றியின்
தகனபலிக்கான நடுக்கம்
குளிரினால்தானென
ஹீப்ரூவில்
மொழிபெயர்க்கப்பட்டதும்
பூமிக்கு மேலாகத் தோன்றிய 
முகில் வில்லின் வண்ணங்கள்
பன்றியறிய வாய்ப்புகள்
தரப்படவில்லை

காகம் பற்றி
எவரும் கவலைப்படவில்லை
அது ஒன்றும் அத்தனை
நித்திய ஜீவனில்லைதானே

ஒலிவ இலையுடன்
திரும்பிய புறா
பலிபீடத்திலிருந்து
தப்பிக்கவே உடன்படிக்கைகள்
இடப்பட்டதாய்
பன்றியும் நம்பியது

ஆயுள் குறைக்கப்பட்ட
மனிதன் பலிவரிசையின்
இறுதியில் இருந்திருக்கலாம்

கொழுத்தக் கழுத்தின்
இறுதி நரம்புமுடிச்சை
கூர்முனை சுவைக்கும்முன்
தலை உயர்த்திப் பார்த்த
பன்றியின் கண்களில்
தெரிந்ததென்ன
தரைதட்டிய கலமாய்தான்
இருக்குமென
அதன் கருவில் புரண்ட சிசு
இறைவனுக்காகவும்
விசுவாசித்தது

Wednesday 26 February 2014

துண்டிப்பு

அன்றும் அந்த நாளாக
அமைந்தது அவளுக்கு
நிதானமாய் பேருந்தில் ஏறியவள்
ஆண்களை உரசினாள்
ஆண்களை மட்டுமே
ஓட்டுனர் மட்டும் விடுபட்டிருந்தார்
எதிர்வினைகளில் அத்தனை
பாதகமொன்றுமில்லை
சலித்துப் போனாள்
மிக நிதானமாய் இறங்கியவள்
எதிர்ப்படும் எல்லா ஆண்களையும்
நின்று ரசித்தாள்
விழியோடு விழி நோக்கி
குட்டை நெட்டை
கருப்பு வெளுப்பு
வழுக்கை பிடரிமயிர்
எல்லாரையும்தான்
மிக வசீகரித்தோரை
நோக்கிக் கண் சிமிட்டினாள்
பதறி விலகியோரைக் கண்டு
விழுந்து விழுந்து சிரித்தாள்
மெல்ல கடற்கரை ஏகினாள்
இருள் தேடி அமர்ந்தாள்
எதற்காகவோ காத்திருந்தாள்
அவளுக்கு சகாப்தம்
படைக்க வேண்டியிருந்தது
மிக மிக அவசரமாய்
அவள் கண்களின் ஜுவாலை
படகுகளின் நிழல்கள் கடந்தும்
அதோ அவர்களை ஈர்க்கின்றது
போலும்
இன்று அவள் தேவை
நான்கோ அல்லது ஆறோ
கூர்தீட்டிய ஓரடி நீளக்கத்தி
எத்தனைக் கிள்ளியெறியுமென
மிகச்சரியாய் அறிந்தவளில்லை
குருதி தெறித்த மணலள்ளி
சமாதிகள் சிலவற்றில்
சேர்ப்பதில் வெகு மும்முரமாய்
இருக்கிறாள்தான்
எனவே
துண்டித்ததும் துடித்து வீழும்
அவற்றின் கணக்குகள் மாறலாம்
இன்றும்

இல்ல வனம்

எந்நேரமும் உதிர்ந்துவிடும்
அபாயத்துடன் 
கம்பியிலாடும் நீர்த்துளியாய்
யோசித்து யோசித்து
மலையேறிக் கொண்டிருந்தவளை
கைநீட்டித் தடுத்தவர்
வனம் எங்கிருந்து துவங்குவதாய்
வினவுகிறார்

எந்த அறிவிப்புப்பலகைகளையும்
நம்புபவர் இல்லை போலும்
இவளைப் போலவே

வனத்தின் முடிவு
எங்கிருந்து தொடங்கும்
என்பதை மட்டுமே
அறிந்தவள் அவளென்பதை
எந்த வனமும் மறுப்பதில்லைதான்

தம் இல்லத்திலிருந்தே
தன் வனம் தொடங்கிவிட்டதாய்
பதில் சொன்னவளைக் கண்டு
அவர் விழிகள் ஏன்
அத்தனை படபடத்தன
மலரிலிருந்து வழி தவறிய
ஒரு தேன்சிட்டு போல

தொலைந்து போனவர்கள்
பட்டியலில் மேலும்
இரு பெயர்கள் சேர்வதற்கான
சாத்தியங்கள் இருந்ததை
இருவருமே உணர்ந்தனர்
ஆம்
தொலைந்தது பெயர்கள்
மட்டுமே என்பதையும்
இருவரும் அறிவர்

சிறுதுளிகள்

அருவியின் அருகில்
அமைந்திருக்கும்
உடைமாற்றும் அறைபோல்
இருக்கும் உன் மனது
அத்தனை ஈரமாய்
அத்தனைக்
காலடித் தடங்களுடன்

----------------------------------------------------

பச்சை மரம் 
அறுபடும் வாசம்
மலையுச்சிக் கோவில்
மதிற்சுவர் விரிசல் கிளைத்த
அரசமர வேர் குளுமை
பெருகிய குருதி தடுத்திட்ட
பச்சைக் கற்பூரத் தகிப்பு
கடந்து செல்வோரை
ஏளனமாய் நோக்கும்
அரிய மூலிகைச் செருக்கு

இதிலெது மிதந்தது
மயிரடர்ந்த மார்பில்
அன்றென வினவவும்
பதிலுரைக்கத் திறந்த
இதழ்களில் இருந்தது
என்ன
மரமறியாது மண்தொட்டப்
பழ மணம்


---------------------------------------------------------

இனி சுரக்கும் எல்லாம் விடமாகக் கடவது

அமிலக்குமிழிகள் உடைப்பது
வெகு சுலபமாய்
இருப்பதாய் சொல்லிச்
சென்றவர்களின்
மாமிசநெடி வீசும் முகம் நோக்கி
அடிவயிற்று 
உட்புறச் சுவர்களில்
சுரந்ததைச் சுரண்டி
பந்தாய் சுருட்டி
எறிந்தனள் அவள்

சிதைந்த சிசுவொன்று
கண்ணிமைகளில்
சொட்டுச் சொட்டாய்
இறங்கும்போதும்
மிக சிரத்தையாய்
சக்தியவளின் உயிர்வழிக்குள்
சிந்திக் கொண்டிருந்தனர்
முன் தினம் அவள்
வெளியேற்றிய
முலைப்பால்
அனைத்தையும்

தலை உயர்த்தி
வெறித்தவள்
ஒற்றைவரி செப்பிவிட்டு
எழுந்துச் சென்றனள்

இனி சுரக்கும் எல்லாம்
விடமாகக் கடவது

பசித்தப் பறவை

சூழலுக்குத் தொடர்பேதுமில்லாது
அங்கு அந்தப்
பறவையைக் கண்டேன்
அத்தனை இரைச்சல்களூடே
அதன் மென்குரல்
என்னைத் தீண்டியபடியே இருந்தது
இறகுகளுக்குள் அலகுபொருத்தி
எதையோ உதிர்த்து
என்னிடம் தந்தது
ஆடை பற்றியிழுத்த
மகவின் தடைகடந்து
கரம் நீட்டியதும்
நண்பனின் எச்சரிக்கை
பறவை என்னை விழுங்கிவிடப்
போவதாய்
ஒரு பறவையின் ஆகாரமாய்
ஆகிவிடுதல்
அத்தனை எளிதல்ல நண்ப
என்கிறேன்
அவன் மற்றோர்
பசித்தப் பறவையையும்
அறிமுகம் செய்விக்கத்
தொடங்குகிறான்

முதலைக் கனல்

முதல் கல்லறையில் தொடங்கி
மிகச்சரியாய் ஏழாவதை
முற்றிலும் மறைத்திருந்தது
காலைப்பனி
திரைவிலக்கி உயிர்த்து
வந்தவரைப்போல்
கடந்துச் செல்கிறது
திடீர்ப்பறவையொன்று

----------------------------------------------------------

அத்தனை உயரக் கோட்டை
மதிற்சுவர் நோக்கி
தவம் கிடந்தன
அகழியில் இனப்பெருக்கம்
துவக்கியிருந்த முதலைகள்
வெண்கலத் தட்டு நிறைக்க
கங்குகள் அள்ளியிட்ட
பச்சைநரம்போடும் கரங்களுடைய 
சேவகி படுக்கைவிரிப்புகளின் கீழ்
தீயைப் பத்திரம் செய்கிறாள்
தூரத்தில் முழங்கும்
போர்முரசுகள்
அலையலையாய் படர்ந்து
அரசியின் மேடிட்ட வயிற்றினில்
மேலேறுகிறது
இடமா வலமா
எந்தப் பக்க மார்பில்
நாகத்தை அணிந்துகொள்வதென
அவளுக்குக் குழப்பமேதுமில்லை
உயிரற்ற உடலையும்
கிட்டங்கியில் கிடத்தி
பின்னிப் பிணையப்போகும்
பாம்புகள் குறித்த அச்சத்தில்
சிசு லேசாய் புரளும்போதெலாம்
மட்டும்
சாம்பல் பூக்கிறது நெருப்பு
முதலையின் கண்கள்
போலவே


------------------------------------------------------------

கல்லறைப் புத்தகம்

அணுவளவும் மிச்சமின்றி
எங்கும் இறக்கிவைத்தாயிற்று
வைர ஊசிகளை
எலும்புமஜ்ஜையில் நிரடி
கூர்முனைகள் செதுக்கியவை
பல சமயம் கவிகளாய்தான்
மாறியிருந்தனவாம்
இடப்பற்றாக்குறையால்
இறுதியாய் 
விழிமணி மையத்தில்
அவர்கள் செருகிய
ஊசிநுனியில் பளபளத்த
ஒளியின் கூர்மையை
மட்டும்தான்
இன்றுவரை
வியந்து கொண்டிருக்கிறேன்


---------------------------------------------

எத்தனைப் பேர்
கவனித்திருக்கக்கூடும்
அடுக்கிவைத்தப் புத்தகங்கள்
போலவே
மிகச்சரியான இடைவெளிகளோடிருந்தக்
கல்லறைகளை
புத்தகச்சந்தை வாயிலில்

துரிதமாய் பேசியபடி
தொடர்ந்து சிரித்தபடி
நண்பனுடன் அவற்றைக்
கடக்கும்போது
சுற்றுச்சுவர் கடந்து
வெறிக்கும்
பொறிக்கப்பட்டப் பெயர்கள்

இறுதியாய் படித்தப் புத்தகத்தோடே
சவப்பெட்டிக்குள்
இறங்கியவரின் விழிகளில்
நிலைத்திருந்த
வரிகள் போல
கனக்கத் தொடங்குகிறது
காகித மூட்டை
முதன்முறையாய்


----------------------------------------------

நெகிழித்தாள் மரணம்

ஒளிரும் எதையும்
சேகரிக்கும் காகம்
நிதானமாய் எரித்திருந்தது
வீட்டுக்கூரையை
பழியேற்பதற்காய்
காத்திருக்கும் மின்மினிகளின்
சிறகுகளில்
ஒளிர்வது என்னவென
அறியும்வரை
காகங்களை
நாம் தண்டிப்பதுமில்லை

---------------------------------------------

நெடுஞ்சாலையோரம் கிடந்த
இளரோஜா வண்ண நெகிழித்தாள்
கனரகவாகனம் வீசியெறிந்தப்
பெருங்காற்றில்
தன்னிச்சையாய் எழும்பி
மெல்ல மெல்லப் பெருநகரம் கடந்து
தொலைதூர மலையை
அருகிருக்கும் கடல்தனை
மறைந்துபோன மகவை
காத்திரமானக் காதலை
எஞ்சியிருக்கும் ஈரத்தை
விரும்பமறந்த மனதை
தொடர்ந்துவரும் காமத்தை
சிதறிக்கிடக்கும் நேர்மையை
நேற்றைய கொலைக்கருவியை
கனன்று அணைந்த துரோகத்தை
இரக்கமற்ற தெய்வத்தை
உதிரப்போகும் மலர்களை
கழித்துப்போட்ட பாவங்களாகிய
எல்லாம் தொட்டுவிட்டு
இறுதி இலைகொண்ட
மரக்கிளையில் வந்தமர்கிறது

நீங்கள் சிறுபறவை என்றோ
கவிதையென்றோ
சொல்லிச் செல்கிறீர்
அதனை

நெகிழித்தாளாக
மட்டுமே அது
மரித்துக் கிடந்ததை
அறியாமல்


---------------------------------------------------

ஊழிப்பெருவலி எங்கும் உள

வழியும் குருதியைக்
கண்டதும் மூர்ச்சையாகுபவள்
முற்றிலும் மாறியிருக்கிறாள்

குடல்கிழிந்து
நெடுஞ்சாலையெங்கும்
சதைத்துணுக்குகளான
நாய்களை
ஒவ்வொரு பயணத்திலும்
அனிச்சையாய் தேடுகிறாள்
கார்ட்டூன் பூனைகளிடம்
இறுதிவரை பிடிபடா எலிகள்
அலுப்பூட்டுகின்றன
அவற்றின் குரல்வளைகள்
கிழிபடுவதற்காய் மட்டுமே
என நம்புகிறாள்

அகாலவேளை
தொலைபேசி அழைப்புகளுக்காய்
மரணம்போல் காத்திருக்கிறாள்
இறுகும் கயிறுகளின்
தடங்கள் தேடுகிறாள்
குறைந்தபட்சம்
ஒரு முயல்வேனும்
தேவைப்படுகிறது
இன்றைய அவளுக்கு

உயரங்களில் நிற்கையில்
பிளந்த கபாலங்களையும்
ராட்சத சக்கரங்களின்
அருகண்மையில்
சிதைந்த கால்களையும்
நினைவு கொள்கிறாள்

பெரிய கற்பனைகளின்
பெரிய வலிகள்
வேண்டியிருக்கிறாள்

மகவின் காயத்தில்
களிம்பிடும்போது
அழுத்தித் தேய்க்கிறாள்
வலிபிதுங்கி
வெடிக்கும்போழ்தும்
சன்னமாய் முனகுகிறாள்

ஊழிப்பெருவலி
எங்கும் உள

மார்புகளிடை ஒட்டும் பாலைமணல்

நீலமலர்கள் சிந்திக்கிடந்த
பாதைகளை
நினைவுகளால் கடந்துவிட்டதாய் 
எத்தனைதான் நடிப்பது
பாதக்கொப்புளங்கள் வெடித்துத்
தடுமாறி வீழ்ந்தபோது
இதழ்களில் ஒட்டியப்
பாலைமணலை
எந்த மார்புகளினிடையில்
புதைப்பது
யுகங்களின் பசியோடு
துரத்தும் செந்நாய்போன்ற
காலத்தை
எந்த மணல்கடிகையில்
அடைப்பது
நுரைத்த அலைகளின்
ஆயுளொத்தக்
காதல்களுக்காய்
எத்தனை முறை
மரிப்பது
கருப்பு வெள்ளை வனம்போலும்
விரிந்து கொண்டே செல்லும்
இந்தக் கனவை
என் செய்வது

திடுக்கிட்டு விழிக்கையில்
முகத்தருகே இருந்து
நொடிமுன்னர் விலகியதாய்
தடயம் விட்டுச்சென்ற
அந்த பிம்பத்தையும்தான்
எப்போது மன்னிப்பது

மலர்தலின் கணம்

பவளப்பாறையிடுக்கில்
புகுந்து 
வெளியேறும் வழி மறந்த
சிறு மீனாய்
தணியா வேட்கையொன்று
உள்ளெல்லாம்
நிரம்பித் தவிக்க
கடைசிச் சொட்டிலும்
இனித்துக் கிடந்த
பனிக்குழைவானச்
சூழல் நோக்கி
நம்மை
அழைத்துச் சென்றவர்
எவரென
இருவரும் அறியோம்தானே


---------------------------------------------------------

இரு உயரம் சமன் செய்ய
மெல்ல இடை பற்றி
லேசாய் உயர்த்தி
தீஞ்சுவை ஈரங்கள்
இடம்மாறிட
இடப்படும் முத்தங்களின்
இறுதியில்
முளைக்கும் சிறகுகள்
வெகுவாய் கனக்கின்றன
இரு பறவைகளுக்கும்


----------------------------------------------------------
நெகிழ்ந்து விலகும்
இடுப்புக்கச்சைபோல்
அகாலவேளை
அவிழும் மலர்களில்
மட்டும் ஏன்
இத்தனைத் தேன்
வழக்கத்திற்கு மாறாய் என
வியக்கும் வண்டுகள்

காற்றறியும் எல்லாம்


--------------------------------------------------
மலருக்கும் காற்றுக்கும்
இடையே
தத்தளித்தபடி
மலர்தலின் கணம்

---------------------------------------------------





மீட்பரின் கணக்குகள்

முன்னறையில் 
கணக்குகளின் சூத்திரங்கள்
விடுவித்தபடி இருந்தவள்
முகம் சுளிக்கிறாள்

என் சமையலறையிலிருந்து
இறைச்சி வாடை
விழிகளிழந்த மழலைபோல்
பிரயாசையுடன்
எங்களை நோக்கி வருகிறது

தனது பூஜ்யங்களை
நம்பிக்கையின் பேரில் என்னிடம்
புதைத்து வைத்திருப்பவள்

பக்கங்களில் விரியும்
விடைகளை
சிறகுமுறித்து அழகுசெய்யவும்
நானே கற்றுத்தந்திருந்தேன்

அனைத்து எண்களையும்
ஒரு தேர்ந்த
கசாப்புக்கடைக்காரன் போலேதான்
நான் எப்போதும்
கையாள்கிறேன் என்பதை
எந்த கிளார்க்ஸ் டேபிளும்
அவளிடம் கூறாதவரை

அவள் என்னை
மீட்பராகவே
காணட்டும்

அவள் அறையெங்கும் அவன் வெளிச்சம்

பெருந்தெய்வங்கள் ஆற்றும்
தவம் போல்
நிகழ்ந்து கொண்டிருந்தது
அது

காட்டு வெள்ளத்தில்
புரண்டு வந்து கரை சேர்ந்த
பூக்குவியலின் மேல்
கண்டேன் அவர்களை

ஒலிகளனைத்தும்
ஸ்வரங்களாகி மீண்டன
குவியலும் அசைந்தபடிதான்
இருந்தது

கனன்று வீசிய மணத்தில்
வனம் மதம் கொண்டது
மிரண்டு பதுங்கிய
விலங்குகளின்
மயிர் கூச்செரிப்புகளில்
சுருண்டு கொண்டது காலம்

கந்தர்வர்களின் காதல்
தாளாது
அழுந்தி எழுகிறது
நிலமும் நிலம் சார்ந்த அனைத்தும்

சீற்றங்கள் பெருகியதும்
ஈரங்களின் வெம்மை
கூடுகிறது காற்றிலும்

இருள் போல்
கவிந்துவிட்ட
மோனம் கனத்து
அவ்விடம் அகல
முற்படும் கணம்
ஒளி வெள்ளம்

அவள் அறையெங்கும்
அவன் வெளிச்சம்

ஒரே மழையைதான் பார்க்கிறோமா?

பக்கத்து மேஜையில்
எச்சில் ஒழுக
பருக்கைகள் சிந்தி
உணவருந்தும்
மனநலம் பிறழ்ந்த சிறுவன்
உணவக ஜன்னல்வழி
மழை பார்க்கிறான்

அவனும் நானும்
ஒரே மழையைதான்
பார்க்கிறோமா

---------------------------------------------------

வலதுபக்கம்
சொர்ண கோபுர விதானம்
இடதுபக்கம்
மங்கிய இரண்டாம் நாள் நிலவு

இரண்டையும்
நேர்க்கோட்டில் இணைக்க
அத்தனை வேகமாய்
பாய்கிறது
அந்தச் சிறுபறவை

-----------------------------

என்னோடு மலையேறி
வந்துவிடேன் எனக்கூறி
விரல்பிடித்து
அழைத்துச்செல்லத் தூண்டுகிறது
பயணிகளற்று நிற்கும்
அந்தத் தொடர்வண்டி

-----------------------------

லேசாய் பதறி
பாதங்களை உயர்த்திக் கொண்டேன்
கருமையின் முந்தைய
நிறத்தில் கந்தல்துணி
வைத்திருந்தவன்
கடலைத்தொலிகளை
அகற்றுகிறான்
தடுப்பவளை நோக்கி
அவன் வீசிய பார்வையில்
யுகங்களின் ஏளனம்
ஊனமென்பது உண்மையில்
என்னவென
மற்றொருமுறை கேள்வியொன்று
எழுகிறது உட்சுவர்களில்
சில்லறைகள் பெற்று
தவழ்ந்து நகர்பவனிடம்
எப்போது சொல்வேன்
நான் தொலிநீக்கிய கடலைகள்
உண்பவள் இல்லையென

------------------------------

வெடவெடக்கும் குளிரடக்க
புகையிலை அதக்கிய வாயோடு
நீலச் சீருடையும்
பச்சை வண்டியுமாய்
மாநகரத் துப்புரவாளர்கள்
கடும் வீச்சத்தினூடே
சகதியாய்
குவிந்த குப்பைகளிடை
கடமையாற்றும் காலை
மட்டும்
மழை வேறு முகம்
காட்டுகிறது எனக்கும்
மழைப்பிரியர்களான
உங்களுக்கும்

----------------------------

கட்டி முடிக்கப்படாத
வீட்டின் ஜன்னலிலிருந்து
மழை பார்க்கும் பூனையை
மழையும் பார்த்துக் கொண்டிருந்தது
இருவரையும் பார்க்கும்
என்னை
அந்த வீடும் பார்த்துக் கொண்டிருந்தது
நிறைய மழையும்
கொஞ்சம் பூனையும்
சுமந்தபடி

----------------------------

பாதாளங்கள் விரிந்தபடியே
தொடர்கின்றன
கவிழ்ந்து விழ
அவர்கள் தரும்
நேரமும் மிகக்குறைவாகவே
உள்ளது இக்காலங்களில்

படிக்கட்டுகள்வழி
இறங்க விரும்புபவளை
பின்னிருந்து தள்ளிவிட
எப்போதும் காத்திருக்கும்
அரூப கரங்களை
என் செய்வதென அறியாதவள்
முன்னர் விழுந்து எழுந்த
பாதாளங்களிடம்
ஆலோசிக்கிறாள்
கரங்கள் துண்டிப்பது
எவ்வாறென

அதே புன்னகையுடன்

------------------------------

துளித்தேன் சொர்க்கம்

மிக சமீபத்தில்தான்
தெரிந்துகொண்டேன்
பெண்மூட்டைப்பூச்சிகளின்
வயிற்றைக் கிழித்தே
ஆண்மூட்டைப்பூச்சிகள்
கரு உருவாக்குமென
ஒரே நேரத்தில்
ஆணாகவும் பெண்ணாகவும்
மாறிப் புணருமாம் 
ஓர் வகை நத்தை
அங்கும் ஒரு சிக்கல்
தோற்பவர்(எதில்?) பெண்ணாகி
கருக்கொள்ள வேண்டும்
ஆழ்கடல் இருளில்
துணைதேடியலையும் ஆண்மீனொன்று
பெண்ணை அடைந்ததும்
உடலையே இழந்து
கரு உருவாக்குமாம்
மெக்சிகோ விப்டெயில் பல்லிவகையில்
ஆண்வர்க்கமே இல்லை
பெண்கள் மட்டுமே
கருப்பு விதவை சிலந்தி
பற்றி நீங்களும் அறிவீர்கள்தானே
பறவைகளில்
அன்னமும் வாத்தும் மட்டும்
கொஞ்சம் ஆணாதிக்கம்
கொண்டவை போலும்
குட்டிகளை சுமக்கும்
ஆண்கடற்குதிரைகள்
மாலைநேர நடைப்பயணங்களை
இழந்ததிற்காய்
வருத்தப்பட்டன

இத்தனைக்குப் பிறகும்
அவைகள் கூடுகின்றன
இறக்கின்றன

சொல்கேளாது பழமுண்ட
ஒற்றைக் காரணத்திற்காய்
இறுதிநொடியில் துளித்தேன் சொர்க்கம்
வைத்து
மனித இனத்தைப்
பழிதீர்த்த இறைவன்
துணைதேடி மைல்கணக்கில்
அலைந்து கொண்டிருந்த
ஆண்பனிக்கரடியின்
இறுகிப்போன உணர்வுகளில்
ஒளிந்துகொண்டதாக
பெண்கரடி சொல்லிப் போனது

மீண்ட இரவுகள்

மீண்ட இரவுகள்
-------------------------

இரவுக்காவலாளியின்
விசில் சத்தத்தில்
மிரண்ட இரவு
உடலெல்லாம் புண்களடர்ந்த
சாலையோர ரோகியின்
போர்வைக்குள் புகுந்தது

அவன் விழிகளில்
மின்னி மறைகிறான்
மூன்று காலங்களுக்குமான
நொடிநேர இறைவன்

-------------------------------

உங்களுக்கும் கேட்கிறதா

குட்டிகளைக் காக்க
ஆண்பூனையிடம்
போரிடும் தாய்ப்பூனையின் கதறல்
நகரிடை அமைந்த காட்டில்
திடீர் ஓசையோடு
கருகி நொறுங்கும் எலும்பினோசை
ஜூரவேகத்தில்
ஒரு மழலையின் அனத்தல்
அடங்கிய காமத்தின்
பெருமூச்சொலி
சன்னமாய் வெளியேகும்
கண்ணீரின் லயம்

இல்லையெனில்
இரவுகள்
உங்களை மன்னிப்பதாயில்லை
உங்களைப் போன்றே
இரவுகளுக்கும் இரக்கமில்லை

--------------------------------

பூரணமாய் பெயர்த்து
பெருங்காட்டிற்கு
எனைக் கடத்தும்
இந்தக் கனவு
இதே ஓக்மரப்படுக்கையில்
எனைச் சேர்க்கும்வரை
வழி தவறிடக்கூடாது
இந்த இரவு
எந்த ஓக்மரக்காட்டிலும்

-------------------------------

இளநீலநிற புகைமூட்டம்போல்
படர்ந்திருக்கும் வலைவழி
இறங்கும் இரவை
கருவுற்றிருக்கும் பல்லி
உற்று நோக்குகிறது
வழமைபோல் துணுக்குற்று
சமாதானமடைகிறேன் நானும்
பல்லியிருப்பது வலைக்கு
வெளிப்புறத்தில்தானென

------------------------------

மாக்கோலங்களை அழித்துக் கொண்டு
வாசலில் அலையடிக்கும்
அதே கடல்
கூம்புவடிவ மலையை
சிறகுகளின்றி வட்டமிடும்
அதே நான்
பிழைகளற்ற ஆங்கிலத்தில்
அதே காதல் கடிதத்தை
என் நண்பியிடமும் தரும்
அதே அவன்

தொடர்புகளற்று
தொடர்ந்து கொண்டிருக்கும்
அதே கனவை
முடித்துவைக்க
முடியா இரவுகளின்
சலிப்பூட்டும்
அதே காலடியோசைகள்

------------------------------