Sunday 31 March 2013

பயணங்களால் ஆன நான்




பயணங்களால் ஆன நான் 
_____________________________

                             பயணங்களால் ஆன வாழ்வு மட்டுமே ஆசீர்வதிக்கப் பட்ட வாழ்வு! குறுகிய வளைவுகளோடும், ஒருபக்கம் பாறைகளும் மறுபக்கம் பாதாளமும் கொண்டும், மாற்றுப்பாதையில்லா ஒற்றையடி வழித்தடமாய்  கூடவும்  நீளும் இந்த வாழ்வில், பயணங்கள் என்பது ஒரு வித யோக நிலையேதான், நம்மை நாமே தயார் செய்து கொள்வதற்கும், புதுப்பித்துக் கொள்வதற்கும்! என் வாழ்வின் மிக முக்கியப் பயணங்களை என் பதினெட்டு வயதுக்குள்ளேயே முடித்து விட்டாலும், பயணங்களின் மீதான ஒருவித மர்ம விருப்பம் இன்றும் தொடர்கிறது. பயணங்கள் யாவும் குடும்பத்துடனும், நண்பர்களுடனுமே இருந்தது என்பது, என்வரை சிறப்பான விஷயமே.
                          தனித்துவமான பயணமெனில் முதல் விமானப் பயணம் தான். முதன்முதலில் விமானம் ஏறியது பதினொரு வயதில், சென்னையிலிருந்து திருப்பதிக்கு. அப்போது இது போன்ற குறைவான தொலைவுகளுக்கெனவே "வாயுதூத்" என ஒரு சிறு விமானப் போக்குவரத்து இருந்தது. குறைவான எண்ணிக்கையிலேயே ஆட்கள் செல்ல இயலும் அதில். விமானம் நேராய் திருப்பதி கோயில் வாசலுக்கே சென்று இறக்கி விடும் என்ற அழகான குழந்தைமையுடன் விமானம் ஏறினேன் பெற்றோருடன். இரைச்சலுடன் குலுக்கலுடன் மேலெழுந்தபோது, பயத்துடன் ஒரு பறவையின் வயிற்றினுள் இருப்பது போன்ற ஒரு உணர்வு. ஏதோ ஒரு குட்டி மலையை வட்டமடித்து பயணித்தது விமானம். கீழே மாடுகள் எல்லாம் எறும்புகளாய்த் தெரிந்த போது, எறும்புகளை எப்படி கண்டு கொள்வது என யோசித்தேன் நான். மிக குறுகிய நேரத்தில் கீழ் திருப்பதி விமானத்தளத்தில் சேர்ந்தோம், அதே குலுக்கல் இரைச்சலுடன். இறங்கியதும் கோயிலைத் தேடி கண்கள் சுழல, அப்பா விளக்கினார், "மலை மேல பிளேன் நிறுத்த முடியாதும்மா, கீழ விழுந்துடும்!" என!!! கொஞ்ச நேரம் கழித்துதான் அவர் கிண்டல் புரிந்தது எனக்கு. பின்னர் அதே போல் இரண்டு முறை வாயுதூத் விமானத்தில் பயணம் செய்தேன். மற்றொருமுறை "ஏர் இந்தியா" வில் போனபோது அப்பாவிடம் கேட்டேன், "எங்கப்பா வாயுதூத்". அவர் பொறுப்பாக பதில் சொன்னார், "அடிக்கடி அந்த பிளேன் கீழ விழுந்து ஆக்சிடென்ட் ஆய்டுதாம், அதனால அந்த பிளேனை வெளிய விடறதில்ல!" என்றார். இன்று வரை அவர் சொன்னது உண்மையா கேலியா எனத் தெரியவில்லை. இது போல் பயணங்களில் சென்று சேரப்போகும் இடத்தை விடப் பயணமே போதுமானாதாய் இருந்து விடுகிறது, எல்லாவற்றுக்குமே!
                                   நிச்சயிக்கப்பட்ட பயணங்களாய் இருப்பது வருடாந்திர கட்டாய பயணங்களாய் இருக்கும், கோவில்களுக்கு பொங்கல் வைக்கப் போகும் பயணங்களே. பெரிய பாளையம் கோவிலுக்குச் சென்று பொங்கலிட்டு தரிசனம் முடிந்ததும், சத்தமில்லாது அருகிலே(ஆந்திரா-தமிழக எல்லை) இருக்கும் "கோனே" அருவிக்கு செல்வது வழக்கம். நாவல்பழ மரங்களால் சூழப்பட்டு, மெலிதாய் வடியும் அந்த அருவியின் அழகு ஓங்காரமாய் கொட்டும் அருவிகளில் காண முடியாது. உடுத்தியிருக்கும் உடையோடே அருவியில் குளிப்பதும், அங்கேயே வெட்டவெளியில் நின்று நனைந்த உடைகளைக் காய வைப்பதும் தனி சுகம். நாவல் பழங்களைத் தேடி கிளைகளெல்லாம் கண்கள் அலைபாய்ந்தாலும், ஒன்று கூட கிடைக்காது. இருந்தாலும் விடாமல் தேடிவிட்டே வண்டிக்கு வருவோம். அருகிலேயே "சுருட்டப்பள்ளி" கோயில், ஆலகால விஷமருந்திய ஈசனைப்  பார்வதி கழுத்தைப் பிடித்து விஷத்தை நிறுத்தியதும், விஷத்தின் தன்மையால் மயங்கிய ஈசன் இங்கு ரங்கநாதரைப் போன்று பள்ளி கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு விட்டு , அதோடே அவர் மீது அணிவிக்கப்பட்ட மலர்களில் துள்ளி ஓடும் கரப்பான்களையும் தரிசித்து விட்டு, வீடு திரும்பும் பயணங்கள், உயிர்த்திருத்தலை நேசிக்க வைப்பவை.
                           ரயில் பயணங்கள் முற்றிலும் வேறுபட்டவை, இங்கு ரயிலும் ஒரு சக பிரயாணி போல் உடன் வரும் விந்தை நிகழும். முதல் ரயில் பயணம், பெங்களூரு நோக்கி "பிருந்தாவன்" எக்ஸ்ப்ரெசில்! நடைமேடையில் நடையாய் நடந்து, நமக்கான பெட்டி தேடி, எண்களை சரி பார்த்து, நமக்கு முன்னே எவரும் அங்கு அமர்ந்துகொண்டு அடாவடி செய்யவில்லை என்ற திருப்தியுடன்  ரயிலில் அமர்ந்ததும், இந்த அலைச்சல் குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளாது நகரத்  துவங்கியது ரயில். உடனே தொடங்கினோம், சாப்பாட்டு பொட்டலம் பிரிக்கும் வைபவம், மிளகாய்ப் பொடி தூவிய இட்லி, புளிசாதம், கத்திரிக்காய் வதக்கல், தோசை, காரசட்னி, தயிர்சாதம், நாரத்தை ஊறுகாய் என அந்த கம்பார்ட்மெண்ட் கதம்ப வாசனைகளால் மூழ்க, ரயில் தாய் போல் ஆடி ஆடி தாலாட்ட,உண்டு முடிப்பது, எந்த ஐந்து நட்சத்திர விடுதியில் உண்டாலும் சர்வ நிச்சயமாய்க் கிடைக்காது. சிறிது நேரத்தில் எல்லோரும் கண் அயர, ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து, நான் - ரயில் - ஓடும் காட்சிகள் ஆகிய மூவர் மட்டும் சஞ்சரிக்கும் உலகை தரிசிக்கத் துவங்கி  விட்டேன். நிறுத்தங்களில் எல்லாம் ஏறும், இறங்கும் வித விதமான மனிதர்களை காண்பதை  ஆகச்  சிறந்த பொழுது போக்காக்கி விடுகிறது ரயில் பயணம். பெங்களூரு ரயில் நிலையம் நுழையும் முன்னே, ரயிலடிச் சுவரில் நான் கண்டது ஒரு தமிழ்ப்பட சுவரொட்டி. தமிழைக் கையோடு கன்னட தேசத்திற்கு அழைத்து வந்த பெருமையோடு ரயிலை விட்டு இறங்கினேன். 
                                   இதே போல் தென்னிந்தியா முழுக்கவும், சில வட இந்திய ஊர்களிலும்  சுற்றி,  கண்டு, உணர்ந்தவை எல்லாம், பயணத்தின் நடுவே குறுக்கிடும் பாலம் போலவே குறுக்கிட்டு நிதர்சனங்களை நினைவுகளோடு சேர்த்து விட்டு நகர்ந்து கொண்டே இருக்கின்றன, பயணங்களைப் போலவே!










சிரிப்பின் பின்




சிரிப்பின் பின்  
 -------------------- -

அவர்கள் சிரிக்கின்றனர்
நானும் சிரிக்கின்றேன் 
அவர்கள் சிந்திக்கின்றனர் 
நானும் சிந்திக்கிறேன் 
அவர்கள் போதிக்கின்றனர் 
நானும் போதிக்கிறேன் 
அவர்கள் பார்வை கோணலாக்கினர் 
நான் மேலும் போதிக்கிறேன் 
அவர்கள் தோள் பற்றுகின்றனர் 
நான் விலகுகிறேன் 
அவர்கள் புறக்கணித்தனர் 
நான் வெளியேறுகிறேன் 
அவர்கள் சிரிக்கின்றனர் 
நானும் சிரிக்கின்றேன் 
அல்லது 
என்னைப் போலவே 
அங்கு வேறு  எவரோ 
சிரித்துக்கொண்டிருந்தனர் 


Saturday 30 March 2013

நிகழ்தலின் துளிர்ப்பு




இறந்துபோனக்  காலங்களை 
மனவெளியெங்கும் 
புதைத்து  
நீரூற்றவும் மறுத்து 
வெற்றுணர்வு களையெடுத்து 
நேசமேகம் நீந்தா நிலம் கீறி 
மௌனித்தப்  பொழுதொன்றில் 
நிகழ்தலின் நக இடுக்கில் 
பெயர்ந்து வந்தது 
எனக்கே எனக்காய் 
துளிர்விட்ட நினைவொன்று 





Friday 29 March 2013

இரவின் துளிகள்

தறிகெட்டோடும் இரவினின்று 
இடறி விழும் போதெல்லாம் 
ஏந்திக்கொள்ள 
ஒரு விடியல் 
வந்து விடுகிறது 

*************************************************

திட்டமிடப்படாத 
ஒற்றை இரவின் 
விளிம்பில் ஊசலாடுகிறது 
உலகின் அத்தனை 
நெறிகளும்

*************************************

பகலை வெல்ல 
ஒரு சொல்லும் 
இரவை வெல்ல 
ஒரு அணைப்பும் 
போதும்

**************************************

இருள்மழை பொழியும் 
ஒரு இரவின் தூய்மை 
உள்ளங்காலில் பதிந்த 
முத்தம் போலவே 
புனிதமானது

**************************************
பாய்ந்தோடி வரும் 
இந்த இரவால் 
அடித்துச் செல்லப்பட்டு 
ஒதுங்கலாம் 
யாரோ ஒருவரின் 
கனவுக்கரையில்

**************************************

ஒன்றின் பின் என்றும்




ஒன்றின் பின் என்றும் 
----------------------------------------
பேனாக்கள் மேல் இருந்த விருப்பம் எப்போது கைப்பைகளிலும் காலணிகளிலும் திரும்பியது எனச் சரியாக சொல்லத் தெரியவில்லை, நிச்சயம் மாணவியாய் இருந்தவள்  பெண்ணாய் உணர்ந்த ஏதோ ஒரு அந்தி சாயும் பொழுதாக அது  இருந்திருக்கக் கூடும். பேனாக்கள் சேகரித்து வைத்துக் கொள்வது என்பது ஆர்வத்தையும் கடந்து ஒரு வித பெருமிதத்திற்கு உரிய செயலாகவே கருதப்பட்டது பள்ளிக்காலங்களில். அதனாலேயே மை தீர்ந்தவை , வாங்கிய அன்றே எழுத அடம் பிடித்தவை, எழுதும்போதே மை கசிபவை, எழுத்துக்களை மொந்தையாய் வரைபவை ஆகியவற்றை கூடப்  பையில் வைத்திருந்தேன். 
                 மிகவும் விரும்பியது பத்தாம் வகுப்பு படிக்கையில் அப்பா வாங்கி தந்த பூப்படம் போட்ட ஹீரோ பேனா, அப்போதே 48 ரூபாய் அது. வழக்கமாய் அடர் மெரூன் வண்ணத்திலேயே பார்த்திருந்த ஹீரோ பேனா, வெளிர் சாம்பல் வண்ணத்தில் பூக்கள் படம் போட்டு இருந்ததே பெரும் வியப்பாய் இருந்தது. மாணவர்களின் ஆதர்ச கடையென இருந்த கௌதம் அங்காடியில்தான் வாங்கினேன் அதை. சக தோழர்களிடம் காட்டி, அவர்களுக்கும் அதைக்கொண்டு  எழுத ஒரு சந்தர்ப்பம் தந்து, பொக்கிஷம் போல் பாதுகாத்தேன். பொதுத்தேர்வின் போது பிள்ளையாரின் அருகில் ஹால் டிக்கெட்டோடு  அமர்ந்து கொஞ்சம் பாடம் படித்து விட்டு வந்தது அதுவும். இசைவான மதிப்பெண்கள் தந்தது, சுய முயற்சியோ ஆசிரியர் பயிற்சியோ அன்றி அந்தப் பேனா தான் என தீர்க்கமாய் எண்ணி வளைய வந்தக் காலம் அது. எப்போதும் அணிந்திருக்கும் சட்டையில் குத்திக்கொண்டே சுற்றினேன். 
                             ஆண் பிள்ளைகள் சட்டை பாக்கெட்டில் பேனாக்களை வசீகரமாய் குத்திகொள்வதைப் பார்த்தபோதுதான் முதல்முறை ஆணாய் பிறக்காததிற்கு வருந்தினேன், பேனா மேல் இருந்த காதலால். நல்ல மதிப்பெண்களுக்காய்  நாகேஷ் தியேட்டர் அருகில் இருந்த டைடன் கைக்கடிகார கடையில் அப்பா முதல்முறை கைகடிகாரம் வாங்கித் தந்தபோதும், அதன் அருகிலேயே இருந்த ஹீரோ மிதிவண்டிக்  கடையில் இருந்த போதும் கூட, சட்டையில் இருந்தது அந்த பேனா. அதன் பின்னர் வந்த பதினோராம், பன்னிரெண்டாம் வகுப்புகளிலும் என்னோடு பயணித்த அது, ஒருநாள் தொலைந்து போனது. விளையாட்டு வகுப்பில் மைதானத்தில் இறகுப்பந்து விளையாடும்போது தொலைந்து போனது! அதற்காய் குழந்தை போல் அழுததும், தோழிகள் மைதானத்தை சல்லடை போட்டு தேடியதும்,முதலில் கிண்டல் செய்த சக ஆண் மாணவர்கள் பின்னர் ஆறுதல் சொல்லியதும் எதுவுமே தொலைந்த பேனாவின் இழப்பால் ஏற்பட்ட வலியை  ஈடு செய்யவில்லை. அதன் பின்னர் எத்தனையோ பேனாக்கள் வந்து சென்றது, எதுவும் அந்தப் பேனா போல் இல்லவே இல்லை. 
                                         என் மகன் இப்போது பேனாக்களின் மேல் அதீத ஆர்வத்துடன் இருப்பது  தொலைந்த அந்த பேனாவிற்கு நான் செய்யும் நன்றி போல தோன்றுவதும் விந்தைதான். கவிதைகள் எழுத தட்டச்சுப்  பலகையே போதுமானதாய் உள்ளது. ஆசிரியை ஆன பிறகு  சிகப்பு மையால் அடித்து, திருத்தி, கற்பித்து எனப்  பேனாவுடன் இருந்த நெருக்கமே சுருங்கி விட்டது. எனினும், மாணவர்கள் எவரேனும் புது வடிவப் பேனாக்கள் கொண்டு வந்தால், ஒரு குழந்தைபோல் அவற்றை வாங்கி "ஹீரோ பேனா" என எழுதிப் பார்ப்பது மட்டும் இன்று வரை தொடர்கிறது!



Thursday 28 March 2013

முளைப்புகள்




துரோகம் இடறி
மண்ணில் வீழும்
சூனிய நொடிகள்
சிறு விதைகளாகி
ஆழப் புதைந்து
மூளை கீறி
வெடித்து வெளிவர
துளிர்கள் எங்கும்
விரவும்
அனிச்சை உள்ளுணர்வு
உந்த பூத்திடும்
குறுமலர் கொய்து
மனதால் செய்த
சுண்டுவிரலொன்றில்
அழுந்தப் பதிக்க
சிதறும் மகரந்தமெங்கும்
துரோகத்தின் வீச்சம்
பரவ
சுமக்கவியலா பாரமாய்
நிலமெங்கும்
அதே முளைப்புகள்

பிரபஞ்ச குமிழிகள்

குழந்தையொன்று 
ஊதித்தள்ளும் 
குமிழிகளாய் 
இங்கனைத்து காட்சிகளும் 
கைதொட்டு 
பத்திரம் செய்யவும்
வழியின்றி
இருப்பதில் பெரியதை
வியந்து நோக்குங்கால்
வெடித்து மறைவதுமாய்
அத்தனையும் ஒருசேர
பின்தொடரவும் திணற
ஓடி ஓடி
எல்லாம் ரசிக்க விடாது
கடிகார ஒலி தடுக்கையில்
பாதத்தின் கீழ் உருளும்
பிரபஞ்ச சிறு குமிழியின் 

மேல் ஒய்யாரமாய்
ஆயுள் அளக்கும்
பெருங் குமிழியாய்
ஒருத்தி
ஒருவன்
ஒரு நாம்

விடம் தாங்கும் சட்டைகள்


கொவ்வைக் கொடி
பின்னிய வேலியின்
கூர்முனையில் தொங்கி
வெயில் பருகி
கிடக்கும்
அந்தச் சட்டையின்
சிறு இழைகளில்
பனிச் சொட்டாய்
வடியும்
கால வெளியின்
சுவரெங்கும்
தடம் பதித்துச்
செல்லும்
அந்த ஊமை உயிரை
பின்தொடர்ந்து
செல்கையில்
கழிவிரக்கம் சுமந்த
நொடியொன்றில்
நா நீட்டி 


விடம் கக்கி
சட்டை உரித்த
மேனி தாங்கி
வேறொரு யுகம்
புகுந்து
மறைந்து போகும்
அதுவும்

தெரியாமலேயே போயிடுச்சு

கண்ணாலத்துக்குக்  கட்டுன 
கூறைப்புடவை எடுத்து 
உத்தரத்துக்  கழியில 
இறுக்க முடிச்சுபோட்டு 
ஒண்ணுக்கு ரெண்டு வாட்டி 
இழுத்து பலம்  பாத்து 
புள்ளயக் கெடத்த 
சரியான உசரம் வெச்சு 
அம்சமான தூளி ஒண்ணை 
நல்ல நேரத்திலக் கட்டி 
பழைய பருத்தித்துணியில 
பொறந்த சிசுவைப்  பொதிஞ்சு 
ஒருகையில புள்ளைய ஏந்தி 
மறுகையில தூளி வெலக்கி 
தூங்கறப்  புள்ளைய 
அலுங்காம சாய்ச்சி 
காத்தோட்டத்துக்கு 
நடுவுல கட்டை வெச்சு 
பூமேல பூ வெக்கற மாதிரி 
மெலுக்கா ரெண்டு ஆட்டு ஆட்டி 
சன்னமா ஒரு பாட்டையும் பாடி 
எல்லாம் முடிஞ்சுதுன்னு 
சமையக்கட்டு பக்கம் போனா 
தரையில ஈரக் கோலம் போட்டு 
சிணுங்கறப்  புள்ளைய
வாரியெடுத்து பால் 
குடுக்குற சுகமெல்லாம் 

ராவெது பகலெது தெரியாம 
எதையோ தொலைச்சு 
என்னென்னமோ  வாங்க 
வம்பாடுபட்டு ஓடி ஓடி ஒழைக்கிற 
நகரத்துக்கு வாக்கப்பட்ட 
எம் மவளுக்கு 
தெரியாமலேயே போயிடுச்சு 


நிறப்பிரிகை வேண்டாத வட்டங்கள்


சிறிதாய் துவங்கும்
அந்தப் புள்ளி
கொஞ்சம் கொஞ்சமாய்
வட்டமாகி
இரு புருவமும்
தொட்டு நிற்கும்

வட்டம் கோபுரமாவதும்
சிகப்பு கருப்பாவதும்
அரிதான நிகழ்வுகள்
அம்சமான தோரணைகளுடன் 

வியர்வையில் வழியும்
சிகப்பில்
நிறைய காதல் கொண்டதாய்
ஒருமுறை
கேட்டதும் உண்டு

கண்ணீரில் கரைந்த
சாந்தின் நிறம்
எப்போதேனும்
உதிரமாயும்
ஆகியிருக்கலாம் 

மாறிய காட்சிகளோடு
எல்லாமும் அழிந்து
துளிப் பிசினோடு
அலங்காரப் பொருளாகியது

மிதியடியிலும்
கண்ணாடி விளிம்பிலும்
படுக்கை விரிப்பிலும்
கழுத்தோரத்திலும்
இருந்து
காணாமலே போகும்
இவற்றில்
ஈர்ப்பேதுமிருப்பதில்லை
அடையாளமாய் மட்டுமே
ஆனதின் பின்னர்



திரிபுக் காட்சியின் சூத்திரதாரிகள்

அக்கறையாய் 
எந்த அந்தரகத்தினுள்ளும் 
எளிதாய் நுழையலாம்

சுண்டி எறிந்த
கண்ணீர்த்துளிகள்
உகுத்தவர் அறியாது
சேமித்து
சபையில் ஏளனம்
செய்யலாம்

ஒரு கிழிசலின்
வழிப் புலனாகும்
அனைத்திலும்
வக்கிரம் பதியலாம்

ஊசிமுனை
அழுத்தம் தந்து
சூழலெங்கும்
நஞ்சு பாய்ச்சலாம் 


நட்புக் காதலாகவும்
காதல் மற்றொன்றாகவும்
திரிந்து போக
துணை போகலாம்

எல்லாம் செய்யலாம்
இயல்பாய் திரியலாம்
நமக்காய் எல்லாம்
செவ்வனே ஆகும்வரை

வாசம் மொய்த்த வரிகள்



சமீபத்தில் பிரசவித்தவள்
இல்லம் நிறைந்திருக்கும்
தாய்மை நெடி

மதிய உணவு இடைவேளை
பள்ளிகள் சுமந்திருக்கும்
பசி வாசனை

விளைந்த பயிரெல்லாம்
பால் பிடிக்கும்
மகிழ் மணம்

சூழலேதும் பாராது
உணர்வுகள் எழுப்பும்
மோக நாற்றம்

மலைப்பாதை முழுதும்
சிதறிக்கிடக்கும்
வன வாசம்

இறப்பொன்றை
அறிவித்து செல்லும்
ரோஜா வீச்சம் 

இந்த வரிகள் மொய்த்து
ஆடைவிலகி கிடக்கும்
கோப்பை தேநீர்

எல்லாமும்
நிறைத்துக்கொள்ளும்
ஒற்றை நாசி
சுவாசிக்கவும் செய்யும்

உறைந்த பெண்மை

அந்தச் சிற்பம் கண்டு 
வியந்து நிற்கிறேன் 
இத்தனை நேர்த்தியும் 
சமரசமில்லா கலைநயமும் 
கொண்டிருந்த 
சிற்பியின் விரல்களை 
சிறப்பாய் அவதானிக்கிறேன்
எத்தனை கோடி விழிகள்
இதனை
தழுவிச் சென்றிருக்கும்
வியக்கிறேன்
கல்லாய் உருக்கொள்ளுதல்
பெண்மைக்கான மறைசேதியோ
ஐயமுறுகிறேன்
பயன் குறித்தெல்லாம்
வாதம் செய்வோரை
புறம்தள்ளி மென்வருடல்
புரிகிறேன் 


சில நொடிகள்
சிற்பமாய் சமைகிறேன்
கூர் உளி பட்ட வலி
உறைக்க நேர்கிறேன்
இதே நொடி
சிற்பத்தினுள்ளும்
சில நரம்புகள்
வேரோடியிருக்கலாம்
ஆம் உணர்கிறேன்

குளிர்த்தீ

வெப்பம் அணைக்க 
வெப்பமே வேண்டும் 
விசித்திரம் என்றுமே 
முரணழகு

**********************

காரணமற்ற ஒன்றை 
காரணமின்றி எரிக்க 
காரணங்கள் தேவையா 
என்ன

**********************

ஒற்றைப் போர்வைக்குள் 
ஒளிரும்
இரு ஜோடி விழிகள் 
எரிக்கலாம் 
ஒற்றை இரவை

**********************

இங்கு 
எரிவதற்காய் 
ஒரு தீயும் 
எரிப்பதற்காய் 
ஒரு தீயும் 
நிச்சயம் உண்டு

************************


தைலம் கமழும் நிராகரிப்பின் பொதி

பாதங்களும் உதடுகளும் 
சிறிது தைலம் 
பூசிக்கொண்ட பின் 
அயர்கின்றன
தலையணைகளில்

பகல் முழுமையின்
தனிமைகளை
சன்னமாய் ஒலிக்கத்
துவங்கின
விசும்பல்களுடன்

செவிகளில் வழிந்த
இரக்கத்துடன்
தைல வாசம் சுமக்கும்
முத்தமொன்று
தரப்பட்டது

ஆசுவாசமாய்
இமை மூடி
எடையும் இழந்து
ஆழ் நித்திரை
சென்றது 


ஒப்பித்தச் சொற்களெல்லாம்
பித்த வெடிப்புகளில்
இளைப்பாற
வாசப்பொதியாய்
கிடந்தது மற்றொன்று

புள்ளிகள்

பெருநகர வீதியோரம் 
கிளைத்தெழும் செடிகள் 
பேரிரைச்சல் 
பருகியும் 
வாழப் பழகுகின்றன

**************************

ஈசலொன்றின் பின் 
ஓடிய பார்வை 
குழல்விளக்கில் தொங்கும் 
எண்ணெய் படர்ந்த
தாளில் ஒட்டியது 

கொஞ்சம் கொஞ்சமாய் 
உதிரத் தொடங்குகிறது 
பார்வையின் 
கண்ணாடிச் சிறகுகள்

**************************

பெயர் தெரியா 
பறவையொன்றின் 
எச்சத்தில் விளைந்த 
மரத்தினின்று 
விழும் முதல் கனி போல் 
நழுவும் பேறு 
பெற்று விடுகின்றன 
சில சொற்கள்

***************************

வியர்வை தோய்ந்த வற்றலின் மாடிகள்

கைப்பிடிச் சுவரோரம் 
தேங்கும் மழைநீர் 
இளம் நா துருத்திப் 
பருகும் புது வெயில் 

உலர்த்திய துணிகள்
சேகரித்த அந்திப்பொழுது
இருள்மூலையில் கண்ட
வெளிர் உருவம்

மீந்த சாதம்
பச்சைமிளகாயிட்டு அரைத்து
இட்ட வற்றலில்
உப்பு சேர்த்தத்
துளி வியர்வை

கிளையோடும்
அணிலோடும்
மஞ்சள் பூக்கள்
உதிர்த்து உரசும்
தெருவோர மரம் 


அதிகாலை நடைகளில்
ஆதுரமாய் பாதம்
பற்றும் குளிர்மை

தனக்கான இத்தனை
நிகழ்வுகளோடு
குழந்தையொன்றை
சுமக்கும் யானைபோல்
எனை ஏற்றி இறக்கும்
இந்த மொட்டைமாடி

உன் நான்

நிழலை மட்டும் கவர்ந்து 
செல்பவனை 
அமைதியாய் பார்க்கிறேன் 
நாளை முழுதாய் 
கொள்ளைபோகும் 
தீர்மானத்துடன்

**************************

நம் கரைகளின் 
மணற்துகள் சுமந்து 
வந்த கடலெங்கும் 
உன் சொற்களின் 
இரைச்சல்

***************************

கைக்குட்டைகள் 
இடம் மாறிய நொடி
இருவர் வாசமும் 
குழம்பித் தவித்து 
கலந்துத் தெளிந்தது

***************************


சட்டைப் பொத்தானில் 
சிக்கிய ஒற்றைப் பார்வை 
பிரித்தெடுக்கவும் 
பலமற்றவளை 
உன் பார்வையால் 
தாங்குதல் நலம்

****************************

மறந்து போனதாய் 
நடிக்கவும் முடியாத 
பொழுதுகளில் மட்டும் 
கர்வமிழந்து சரணாகிறேன் 
உன் நினைவுகளிடம்

*****************************

என் நான்

தனித்தலையும் இரவின் 
நெடுஞ்சாலைதனில் 
விழித்திரையில் குத்திட்டு 
நிற்கும் விண்மீனுடன்
மழலையின் விரல்கள்
ரவிக்கை பற்றிக் கிடக்க
செவிவழி புகுந்து
சிந்தை நனைத்திட்ட
இசையின் சர்வாதிகாரம்
ருசித்து
தன்னிலை மறந்த
ஏகாந்த நொடியொன்றில்
தன்னிச்சை செயல்போல்
நிகழ்ந்த
பாத உரசலில்
எங்கிருந்தோ
என்னுள் விழுகிறேன்
நானற்ற நானாகிட

சுவை மாறிய கனிகளும் அவற்றின் கரிப்பும்

தேடல்கள் முடித்திட்ட 
தடித்த என் வேர்களின் மீது 
வந்தமர்கிறான் 
கண்ணீருடன்

புறக்கணிப்போ
தோல்வியோ
துரோகமோ
இயலாமையோ
தன்னிரக்கமோ
ஏளனப்பட்ட அன்போ
மீட்க முடியா மானமோ
இங்கிவனை அமர்த்தியிருக்கலாம்

என் இலைகளின் ஸ்பரிசம்
என் மலர்களின் வாசம்
என் கிளைகளின் நடனம்
என் முழுமையின் நிழல்
பரிசளிக்கிறேன்

என் இருப்பின்
உணர்வே அற்றவனாய் விரைபவனின்
கண்ணீர் தடமும் வெப்பமும் என்
நாளைய கனிகளில் சேகரிக்கிறேன்

சுவைமாறி கரிக்கும் கனிகள்
இனி எனதென முடிவாகும்
அவனும் அடையாளம்
காணும் வகையில்

இரவின் பிடியில்

அரண்மனை
இரவுகள் அடர்ந்தும் 
சாமானியன் 
இரவுகள் நீண்டும் 
திரிகின்றன

************************

ஒரு இரவைத் 
தாலாட்டி 
உறங்க வைக்கவே 
இத்தனை இரவுகளும் 
முயல்கின்றன

************************

இருண்மை தீட்டிய 
நகரின் வீதியில் 
எங்கோ ஓடி 
ஒளிகிறது 
இரவின் சலனம்

************************

பைத்தியக்காரனின் 
பிதற்றலாய் 
துவங்கும் இரவு 
மழலையின் 
குழறலாய் நீண்டு 
ஞானியின் 
மௌனமாய் விடியலாம்

***********************